“புரட்சி ஏற்பட்டு கருணாநிதி ஆட்சி கவிழ்ந்திருக்கும்” என உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் அன்று அதற்கு ஒரு வாய்ப்பு இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
ஜனவரி 29, 2009. "சாஸ்திரி பவனில் ஒரு இளைஞன் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து தீக்குளித்துவிட்டான், உயிர் ஊசல் என்ற செய்தியை நண்பர் தயாளன் தொலைபேசியில் கூறியபோது "ஆரம்பிச்சுட்டாங்களா. என்ன தயாளன் இது. இதுவல்ல போராட்ட முறை" என்று சொல்லிவிட்டு பிப்ரவரி மாதத்துக்கான 'நம்மால் முடியும்' மாத இதழ் தயாரிப்பு பணியில் மூழ்கிவிட்டேன்.
பிற்பகல் மின்னஞ்சலில் வந்த முத்துகுமாரின் கடிதத்தின் ஒவ்வொரு வரிகளும் நெஞ்சில் இடி என இறங்கியது. வரிகளில் இருந்த செறிவு! வரிக்கு வரி படிக்க படிக்க வெட்கத்தில் தலை குனிந்தேன். இது உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு அல்ல. போர் உக்கிரமடைந்து மாதம் ஐந்தாகியும் தாய்த்தமிழகத்தில் எந்த விதமான எதிர்வினையும் இல்லையே என்ன செய்வது என அறியாமல் தனது மொத்த ஆற்றலையும் நான்கு பக்கத்தில் பரப்பியிருந்தான். தமிழின வரலாற்று பக்கங்களில் தனி இடம் பிடித்த கடிதம் அது. கருணாநிதியின் முகத்திரையை கிழித்து போட்ட கடிதம். அவனது இறுதி சடங்கில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களையும் தோலுரித்து அம்மனமாக நிற்க வைத்த கடிதம். இன்று நான் அரசியல் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்க, அந்த கடிதத்தில் முத்துகுமார் "அரசியல்வாதிகளை நம்பாதே. என் பிணத்தை பாதுகாத்து போராடு" என்ற வரிகளை படிக்கும்போதெல்லாம் இன்றளவும் ஒரு இனம்புரியா உணர்வு என்னை பிடித்து வதைத்துக்கொண்டிருக்கும் கடிதம்.
இது போன்ற கடிதம் எழுத குறைந்தது இரண்டு நாட்களாவது பிடித்திருக்கும். தற்கொலை என்பது அந்த சில நொடிகளில், மணிநேரங்களில் எடுக்கப்படும் முடிவு என அறிவியலாலர்கள் கூறுவதுண்டு. ஆனால் தான் செய்யப்போகும் காரியம் அறிந்த முத்துகுமாருக்கு அந்த இரண்டு நாட்களும் எப்படி இருந்திருக்கும்?! தன்னுடைய செயலுக்காக எவ்வளவு கர்வத்துடன் வலம் வந்திருப்பான் இந்த உலகில். தன் ஏழ்மை குடும்பத்தின் தனிமையை எண்ணி எப்படியெல்லாம் கருகியிருந்திருப்பான்?! ஒரு வேளை புரட்சி என்ற ஒன்று நடந்தேரினால் அதைக் காண முடியாமற்போகுமே என எவ்வளவு மனவேதனை அடைந்திருப்பான்? தன் முடிவால் இல்லாமல் போனாலும் உலக நாடுகள் அனைத்தும் வந்து கடைசி நேரத்தில் ‘மனித உரிமை’ என்ற பெயரில் எப்படியாவது ஈழ மக்களை காப்பாற்றிவிடும் என்ற முழு நம்பிக்கையோடு இருந்திருப்பானே….
அன்று இரவு கொளத்தூர் சென்று மாலை மரியாதை செய்துவிட்டு அக்கம் பக்கம் பார்த்தால் பந்தல் போடப்பட்டு ஐம்பது நாற்காலிகள். அதில் ஒரு பத்து பதினைந்து பேர். அவ்வளவே. “மனிதனின் மனம் மரத்துப்போய்விட்டதா? இதற்கு கூட வரவில்லை என்றால் பின் என்னதான் செய்யப்போகிறார்கள் உணர்வாளர்கள்” என முனுமுத்தபடி அமர்ந்திருந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்பதை அடுத்த இரண்டு நாட்கள் ஜன 30,31 எனக்கு உணர்த்தியது. என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள்.
சாரை சாரையாக மக்கள் கூட்டம்.
எங்கு பார்த்தாலும் இளைஞர் குழு கூடி விவாதங்கள்.
திமுக தவிர அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் வந்து மரியாதை. (தேர்தல் ஆண்டு என்பதால் இருந்திருக்குமோ?!)
திமுக சார்பில் வந்த வி.எஸ்.பாபு ஓட ஓட கல்லெறிந்து விரட்டியடிப்பு.
உணர்வுள்ள கூட்டத்தை பார்த்து ஒரு விதமான பயத்துடனேயே உலாவந்த பெரும் அரசியல் தலைவர்கள்.
இன்னும் வைத்திருந்தால் பிரச்னை ஏற்படுமோ என நினைத்து 30ஆம் தேதியே முத்துகுமாரை வழியனுப்ப நினைத்த தலைவர்களை நேருக்குநேர் நின்று மிரட்டி மேலுமொரு நாள் நீட்டிக்கச்செய்த இளைஞர் பட்டாளம்.
31ஆம் தேதி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம். கொளத்தூரில் இருந்து மூலக்கொத்தாலம் வரை இலட்சக்கணக்கானோர் வீதிக்கு வந்து மரியாதை செலுத்திய நிகழ்வு.
வழிநெடுகிலும் கருணாநிதி, ஸ்டாலின், ஜெயலலிதா படங்கள் தாங்கிய இடமெல்லாம் பூசப்பட்ட சாயம்.
போலிசார் வேடிக்கை பார்க்க ‘The Hindu’ என்று இருந்த விளம்பரப் பலகை தூள் தூளாக.
நினைத்து நினைத்து இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் எரித்த இந்திய கொடி.
இரண்டு நாட்களும் அங்கிருந்த இளைஞர்களால் வெறும் வேடிக்கை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்ட காவல் துறை.
ஒரு வாரத்துக்கு வெறும் ஓய்வு எடுத்து குணமாகி வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் அறிவுரையுடன் போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு ஜனவரி இறுதியில் போன முதல்வர் கருணாநிதி முத்துகுமாரின் கடிதம் படித்த பயத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்திலேயே வெளியுலகுக்கு தலைகாட்ட முடிந்த பதற்ற சூழல். பிப்ரவரி மாதம் முழுதும் கருணாநிதி சிறை வைக்கப்பட்டார் என்பதே உண்மை நிலை.
இன்றளவும் நான் என் நண்பர்களிடத்தில் சொல்லி பெருமை பட்டுக்கொள்ளும் ‘இறுதி ஊர்வலத்தில் முத்துகுமாருக்கு நானும் நன்பர் தயாளனும் 20 அடி உயரத்தில் மிதக்கவிட்டு ஏந்திவந்த பிரம்மாண்டமான புலிக்கொடி மரியாதை’.
…..என எழுச்சி மிகு பயணம். ஏதோ ஒரு சுதந்திர தேசத்தில் இருந்தது போன்ற உணர்வு. முத்துக்குமார் நினைத்ததை சாதித்துவிட்டான் என்று உணர்ச்சி பொங்க ஊர்வலத்தில் கொடி ஏந்தி வந்த 31ஆம் தேதி மாலையில், அன்று இரவில் அனைத்துக் கட்சி சார்பில் நடத்தப்படப்போகும் கழுத்தறுப்புக்கு முன்னோட்டம் காட்டினார் திருமாவளவன். முத்துக்குமாரை ஏந்திக்கொண்டு பேப்பர் மில்ஸ் ரோடு வழியாக ஜமாலியா-அயனாவரம்-புரசைவாக்கம் பெரம்பூர் பாரக்ஸ் ரோடு பின்னி மில்ஸ் வழியாக மூலகொத்தாலம் சுடுகாட்டுக்கு வருவதாக இறுதித் திட்டம் (தமிழகம் முழுக்க பயணித்து கொழுவைநல்லூரில் அடக்கம் செய்யலாம் என்று கூறியதற்கு முத்துகுமார் வீட்டருகிலேயே நல்ல இடம் பார்த்து யாருக்கும் பிரச்னை இல்லாமல் நைசாக எரித்துவிடலாம் என பாமக தலைவர் சு.இராமதாஸ் அறிவுரை கூறியதாக தகவல்). எப்படியாவது ஒரு வகையில் முத்துக்குமார் சொன்னது போல எழுச்சி ஏற்பட்டுவிடாதா என எண்ணிய வேளையில் பேப்பர் மில்ஸ் ரோடு பெரம்பூர் இரயில் நிலையம் சந்திப்பில் நந்தி போல் நின்றார் திருமாவளவன்.
ஊரெல்லாம் சுற்றி போனால் இரவு கடந்துவிடும் நாம் சீக்கிரம் கொண்டு சென்று முத்துகுமாரை அடக்கம் செய்யவேண்டும் என நம்மில் ஒருவர் போல் சொன்னார்(ஊரெல்லாம் சுற்றி போனால் நமக்கெல்லாம் கால் வலிக்குமாம்). இளைஞர்களிடம் சிறு சலசலப்பு. “தம்பிகளே நம் போராட்டத்தின் வழிமுறை வேறு மாதிரி இருக்க வேண்டும். இதுவல்ல. முதலில் நாம் எழுச்சி தமிழன் முத்துகுமாரை மரியாதையுடன் அடக்கம் செய்வோம்” என்றார். “இன்று காலைதானே தமிழ் உணர்வுள்ள தலைவர்கள் அனைவரும் கூட்டனி வித்தியாசமின்றி ஒரு மேடையில் தோன்றி நெடுமாறன் தலைமையில் ‘இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ கண்டு ‘போராட்டம் தீவிரப்படும்’ என நம்பிக்கை கொடுத்துள்ளனர். அதில் அண்ணன் திருமாவும் ஒருவர்தானே” என்ற நம்பிக்கையில் சரி நீங்கள் சொன்னால் ஒரு அர்த்தம் இருக்கும்ணே என்று ஊர்வலம் வியாசர்பாடி நோக்கி…..
மணி இரவு11:00 – ஊர்வலத்தில் இளைஞர்களிடம் இருந்த எழுச்சியை கண்ட திமுக அரசு காலவரையின்றி கல்லூரி மூடப்பட்டுவிட்டது என அறிவிப்பு. (கல்லூரி இருந்தாத்தானே ஒன்று கூடுவது புர்ச்சி செய்வது எல்லாம். அவுக ஆட்சியை பிடிச்சதே அந்த ஃபார்முலாலத்தானே. கல்லூரி திறந்தால் தன் தலை உருளும் என தெரியாதா?!) கூட்டம் அங்கேயே உட்கார்ந்தது. கல்லூரியை திறக்கும் வரை இந்த இடத்தை விட்டு அகலமாட்டோம் என மாணவர்கள் ஊர்வலத்தை மறித்து அமர்ந்தனர். ஊர்வலத்தை தூத்துகுடிக்கு திருப்பு என்று ஒரு குரல், கோபாலபுரத்துக்கு வண்டியை விடு என்று மற்றொரு குரல், போரூர் மருத்துவமனையில் தான் கருணாநிதி இருக்கிறார் அங்கு போவோம் என்று ஒரு குரல், மெரினா கடற்கரையில் கிடத்துவோம் என்று ஒரு குரல். சிறிய அளவில் அறிமுகமான ஒரு தலைவர் அங்கு வழிநடத்தியிருந்தாலும் அங்கு ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கும். எப்படி போராடுவது என்றே தெரியாமல் அனாதையாக இருந்தனர் இளளைஞர்கள். இடது பக்கம் திரும்பினால் மூலகொத்தாலம் சுடுகாடு வலது பக்கம் திரும்பினால் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம். நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது. “புரட்சி ஏற்பட்டு கருணாநிதி ஆட்சி கவிழ்ந்திருக்கும்” என உறுதியாக சொல்லமுடியாது. ஆனால் அன்று அதற்கு ஒரு வாய்ப்பு இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.
இறுதி சடங்குக்கான ஏற்பாட்டை பார்ப்பதற்காக அரசியல் தலைவர்கள் எல்லாம் சுடுகாட்டில் குழுமியிருந்தனர். இந்த செய்தி தமிழ் இனத் தலைவர்களுக்கு தெரியாது போல். இதோ நம் தலைவர்கள் வந்துவிடுவார்கள் நமக்கு வழி காட்டப்போகிறார்கள் என முத்துகுமாரை ஏந்தி வந்த வண்டியின் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சையாய் அமர்ந்திருந்தனர். அதோ வந்தேவிட்டார் நம்ம வன்னியரசு அண்ணன். உதவிக்கு நம்ம டைரக்டர் சேரன். இன்றைக்கு தீர்ந்தது கருணாநிதியின் கணக்கு என எண்ணிய நொடிப்பொழுதில் வண்டி சுடுகாட்டை நோக்கித்தான் போக வேண்டும் என கைக்கலப்புடன் கையிலிருந்த துறுப்புச்சீட்டு பறிக்கப்பட்டது. அய்யோ இந்த விஷயம் நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் தெரியாதே?! தெரிந்தால் நம் சார்பாக பேசுவார்களே என கதறிய போது வந்திருப்பது அனைத்துக் கட்சி சார்பாக என்ற தகவல் 'முறைப்படி' தெரிவிக்கப்பட்டது. மிக தீர்க்கமாய் சொன்னாய் “அரசியல் தலைவர்களை நம்பாதே” என்று. கடைசியில் நீ சொன்னது தான் நடந்தது. கோழி அடைகாத்த முட்டையை 19வது நாள் வல்லூறு கூட்டம் கொத்திச்சென்றது போல் முடிந்தது எல்லாமே.
இன்று 29-01-2011 காலை 10 மணி முதல் 12 வரை முத்துகுமார் சாலை அதாங்க ஹாடோஸ் ரோடு, முத்துகுமார் தமிழனை தட்டி எழுப்ப முயன்ற சாஸ்த்ரி பவன் முன் நம்ம புல்லட்டை நிறுத்தி விட்டு முத்துகுமாரிடம் பகிர்ந்து கொண்டவைகளில் சில…
· நீ கொடுத்த துருப்புச்சீட்டை தவறவிட்டுட்டோம். கொஞ்சம் நம்பிவிட்டோம். கடைசியில் நீ சொன்னபடியே அவங்கதான் அத எடுத்துக்கிட்டாங்க.
· இரண்டு மாசத்துக்கு முன்னாடி(அக்டோபர் 2008) 40 எம்.பிக்களும் இராஜினாமா, கனிமொழி இராஜினாமா கடிதம் திமுக தலைவரிடம் ஒப்படைத்தல் என மிரட்டினது உனக்கு தெரியும். நம்ம பிரனாப், கருணாநிதி, கனிமொழி ஒரு ‘ரூமுக்குள்ள’ போய் வெளிவந்தவுடன் ஈழத்தில் அனைத்து பிரச்னைகளும் விரைவில் தீரும் என அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அனைத்து பல் தெரியும் படி சிரித்தாற் போல் போட்டோவுக்கு ‘போஸ்’ கொடுத்தார்களே அது எதுக்கு தெரியுமா? செல்போன் கம்பெனிகளுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சுமார்1.76இலட்சம் கோடி (ரூ.1,76, 000, 00, 00, 000. தலை சுத்துதா? எங்களுக்கு பழகிப் போச்சு!) சுருட்டினதுக்கான ஆதாரத்தை டெல்லியில் இருந்து கொடுத்தனுப்பியிருப்பாங்க போல. இராஜினாமா என்று சொன்னால் ராஜாவுக்கும் கனிக்கும் சிறை என்று சொல்லியிருப்பார் போல. கருணாநிதிக்கு வியர்த்தேவிட்டது. ஆனா நீ சரியாத்தான் சொன்ன அவரைப்பற்றி, தேனெடுத்தவன் புரங்கை நக்காமல் இருப்பானா என்பதற்கு “ரொம்ப நக்கியிருப்பீங்க போல” என்று. அவங்க பொன்னு தேன் கூட்டையே ஆட்டைய போட்டுடிச்சி. கருணாநிதிக்கு ரொம்ப அவமானமா போயிடுச்சி. இப்ப தான் வெங்காயம் 65ரூ, பெட்ரோல் 65ரூ, மீனவர்கள் படுகொலை என மக்கள் திசைதிருப்பப்பட்டிருக்காங்க.
· 40 எம்.பிக்கள் இராஜினாமா, ராஜ்ய சபா எம்.பி. கனிமொழியின் இராஜினாமா கடிதம் தன் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தல், 53 வருடங்களாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து சாதனை, முதுகு வலியை விட முத்துகுமார் தீக்குளித்து இறந்தார் என்பது தான் அதிகவலி, மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம், இனி பொருக்கமாட்டோம், கடிதம் எழுதுதல், மத்திய அரசுக்கு வேண்டுகோள், சட்டபேரவையில் தீர்மானம், நல்ல பதிலை எதிர்நோக்கி உள்ளேன், மனவேதனையில் உள்ளுக்குள் அழுவது யாருக்கும் தெரியாது, இறுதி வேண்டுகோள், உறுதியான வேண்டுகோள், வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மனித சங்கிலி போராட்டம் ரத்து, கொட்டும் மழையில் மனித சங்கிலி போராட்டம், பெரியாரும் நானும் அடிமைகள், இரண்டு கைகளையும் இழந்தவன், நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன், போர் உக்கிரமடைந்துவிட்டது அவசர அவசரமாக 30 நாளில் திமுக செயற்குழு கூடி நல்ல முடிவெடுக்கும் என அறிவிப்பு, “இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்துக்கு” போட்டியாக “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை”, பேரவை மூலம் மனு கொடுத்தல், ‘ப்ரேக் ஃபஸ்ட்க்கும்’ ‘லன்சுக்கும்’ இடையேயான சாகும் வரை உண்ணாவிரதம், மழை நின்றும் தூவானம் விடவில்லை,............. என தனது செம்மொழித் திறமையால் வித விதமாக சொல்லைக் கையாண்டு கழுத்தறுத்தார். நீ இருக்கும்போதா இல்ல போன பிறகான்னு சரியா தெரியல “போர் னு ஒன்னு நடந்தா மக்கள் சாவத்தான் செய்வாங்க” அப்டின்னு ஜெயலலிதா சொன்னாங்க.
· நாடாளுமன்ற தேர்தல் வந்துவிட்டது என எல்லா கட்சிகளும் தங்கள் இருப்பை தக்க வைக்க திமுக அதிமுக என்ற இரண்டு இரும்புகளில் காந்தத் துகள்களாக ஒட்டிக்கொண்டன. காங்கிரஸ் ஜெயிக்க விஜயகாந்த் 200 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு பிரிப்பதற்காக தனியாக நின்றதாக கேள்வி. பொங்கலுக்கு முன்னாடி சேலத்துல ஒரு 5 லட்சம் பேர மாநாடுன்னு கூட்டி வெச்சு தன்னிய போட்டுட்டு மேடைல நிதானமில்லாம பேசனாரு நம்ம வி(ஸ்கி)ஜய காந்த். ஜெயலலிதாவை நம்பினால் ஈழம் கிடைக்காது தனியாக நிற்போம் என்று வேண்டுகோள் வைத்தார் திருமா. மற்றவர்கள் முடியாது அதிமுக தான் சரியான இடம் என்று சொல்லியிருப்பார்கள் போல. சரி அப்படின்னா நான் காங்கிரஸ்-திமுகவுடன் இருக்கிறேன்னு சொல்லிட்டார். (டெலிபோன் ஒயர் பிஞ்சி ஒரு வாரம் ஆகுது)
· கடைசியா நீ பயந்தது நடந்தேவிட்டது. ஈழப்போரில் தமிழன் கழுத்தறுக்கப்பட்டான். உலக நாடுகளின் ஆசீர்வாதத்துடன், கருணாநிதியின் மேற்பார்வையில், காங்கிரஸ் அரசு ஆயுதம் எடுத்து கொடுக்க, ராஜபக்சே இன அழிப்பு செய்து முடித்தார். கொஞ்ச நஞ்சமில்ல. 50,000த்துக்கும் அதிகமான ஈழத்தமிழர்கள். கடைசி 3 நாள் மட்டும் 20,000 பேர கொத்து குண்டுகள் போட்டு முடிச்சதா கேள்வி. பிரபாகரன் நேதாஜியைப் போல “இருக்கிறார் இறந்தார்” என்பதை யாரும் நிருபிக்க முடியாத வகையில்… வெள்ள கொடி காட்னா விட்டுடுவாங்கன்னு ஐரோப்ப நாடுகள் போன் போட்டு சொன்னத நம்பி நடேசன் அண்ணன் நூத்துக்கணக்கில வெள்ள கொடி காட்டிட்டு சிங்கள படையை நோக்கி வர, எல்லாரையும் சுட்டுட்டாங்க. கொடி கலர் சரியாக தெரியவில்லை என ராஜபக்சே தம்பி பேட்டி கொடுத்திருக்கார். பிரபாகரன் தன்னோட பசங்கள பத்திரமா வெளிநாட்டுக்கு ‘பேக்’ செஞ்சிட்டார்னு நாக்குல நரம்பில்லாமல் பேசிட்டிருந்தானுங்க கொஞ்ச பேர். ஆனா போர் கலத்துலயே பசங்க ரெண்டு பேருக்கும் வீரமரணம்.
· போர் குற்றம், மனித உரிமை மீறல் என்று சில நாடுகளில் கொஞ்ச பேர் துள்ளிட்டிருக்காங்க. அவங்கள ‘ஃப்ரீயா’ விடு. ஒன்னும் வேலைக்காகாது. ஐ.நா வுல சும்மா ‘ஃபார்மாலிட்டிக்கு’ இலங்கைக்கெதுரா தீர்மானம் போட்டாங்க ஆனா இந்தியா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள் தோற்கடிச்சிடுச்சி.
· உன்ன பத்தி கேட்டா இளங்கோவன் “who is muthukumar. I don’t know” அப்படின்னு சொல்ட்டார். உன் பேர சொல்லி தங்கபாலு, இளங்கோவன், மனிசங்கர், சிதம்பரத்தை தோற்கடிப்போம்னு டி.நகர்ல ஒரு ஸ்கூல்ல சபதம் எடுத்துட்டு போனோம். சொன்ன எல்லோரும் தோத்துட்டாங்க ஆனா சிதம்பரம் மட்டும் கல்ல ஆட்டம் ஆடிட்டாரு. எல்லாரும் தோத்ததா சொன்னா நல்லா இருக்காதுன்னு சிதம்பரத்தை மட்டும் ஜெயிச்சதா சொல்லிட்டாங்க. அப்ப எதுக்கு தேர்தல்னு கேக்குறியா. அது தெரிஞ்சா நாங்க ஏன் இந்தியாவுல இருக்கோம். நீ கடன் தொல்லை தாங்காம செத்துட்டதா திமுக காரங்க கொஞ்ச நாள் வண்டி ஓட்டி பாத்தாங்க.
· சீனாக்காரன் வந்து ஈழத்துல ‘கேம்ப்’ போட்டுட்டானாம். புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் அப்டின்னு இலங்கை, இந்தியா சொல்லிடிச்சி ஆனாலும் தமிழக மீனவர்கள இன்னும் சுட்டு விளையாடிட்டு தான் இருக்காங்க. கருணாநிதிக்கு அப்பப்ப கோவம் வருது. தன்னுடய கோவத்த லெட்டர் போட்டு தனிச்சிக்குறார். (வடிவேல் சொல்றது போல மூத்தர சந்துல வச்சு நாலு பேரு, மொட்டமாடியில வெச்சு பதினோறு பேரு, அப்புறம் குலத்தாண்ட வெச்சி ஒரு ஆறு பேரு, ஊருக்கு வெளியில வெச்சி ஒரு பத்து பேரு. உனக்குத்தான் தெரியுமே தமிழன் ரொம்ப நல்லவன்னு). சட்டசபை தேர்தல் வந்திடுச்சு. லெட்டர் போட்டா மறியாத இருக்காதுன்னு இன்னிக்கு தான் டெல்லி போயிருக்கார் கருணாநிதி.
· நாங்க கொஞ்சம் இளைஞர்கள் சேர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிச்சிருக்கோம். உனக்கு புடிக்காதுன்னு தெரியும். வேற வழி தெரியல. சீமான் ‘நாம் தமிழர்னு’ ஒரு அரசியல் கட்சி ஆரம்பிச்சிருக்கார். நடிகர் விஜய் ஆரம்பிக்கப்போரதா சொல்லிட்டிருக்கார்.
· சீமான் அண்ணன் இளைஞர்கள ஒன்னு திரட்டிட்டு இருக்காரு. கருணாநிதி இவர பார்த்து பயப்படராரு. ஏதாவது ஒன்னு சொல்லி ஜெயில்ல தூக்கி போட்டுடுராரு. ''இரட்ட இலைல' குத்து ஈழம் மலரும்னு நம்ம சீமான் அண்ணன் நாடாளுமன்ற தேர்தல்ல சொன்னாரு. அன்னிக்கிருந்த அரசியல் சூட்டில் யாரும் ஒன்னும் சொல்லல. ஆனா இரண்டு வருஷம் கழிச்சி காங்கிரஸை தோற்கடிக்க இரட்டை இலைல குத்துன்னு இப்பவும் சொல்றார். அவரு சொல்றது சரி, தப்புன்னு நமக்கு சொல்ல தெரியல.
· போர் முடிஞ்சி மீதி இருந்த எல்லாரையும் தூக்கி முல்வேலில போட்டுட்டாங்க. அதான் ஹிட்லர் ஜெர்மனில ‘கான்சென்ட்ரேஷன் காம்ப்’ வெச்சிருந்தது போல. இப்பவும் தமிழர்கள் அங்க இருக்கறதா கேள்வி. அந்த கேம்ப்ல இருந்து சகோதரிகளை நம்ம மார்க்ஸிஸ்டுகளின் நன்பர்கள் டக்லஸ் தேவானந்தாவும், கருணாவும் சிங்கள இராணுவத்துக்கு விலைக்கு வித்தாங்கன்னு நம்ம புது ஃப்ரெண்ட் ‘விக்கிலீக் அசாஞ்சி’ சொல்றார்.
· தமிழக எம்.பி. குழு ஒன்று முல்வேலில எல்லா வசதிகளும் இருக்கா என பார்வையிட சென்று வந்தனர். இராஜபக்சே வைத்த விருந்தில் சபை நாகரிகம் கருதி கலந்துகொண்டு உண்டு மகிழ்ந்தனர். கைகுலுக்கி அன்புப்பரிசு, போட்டோல்லாம் எடுத்துனு வந்தாங்க. (“புறா கறி நன்றாக இருந்தது” என எலலோரும் கூட்டா பேட்டி கொடுத்தாங்க. எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா)
· ஈழப்போரோட கடைசி கட்டத்துல தமிழர்கள் எங்கெங்கிருக்கிறார்கள்னு தெரிஞ்சிக்க உபயோகிச்ச தொழில்நுட்பத்த இங்கிருக்கும் ‘ஏர்டெல்’ கம்பெனி தான் ஏற்பாடு செஞ்சுதாம். இலங்கை ஒரு அமைதி பூமி என உலக நாடுகளுக்கு தெரிவிக்க போன வருஷம் நடந்த கலைவிழாவுக்கு நம்ம அசின் போய்ட்டு வந்தாங்க. கமலும் போரதா இருந்தாரு. நம்ம திருமுருகன் மே 17னு ஒரு அமைப்பை துவக்கி அவருக்கு டார்ச்சர் கொடுத்து போவவுடாம செஞ்சிட்டாரு.
· போரின் போது இரவு பகல் பாக்காம கூட்டம் போட்டு இளைஞர்களிடையே விழிப்புணார்வு ஏற்படுத்திய பல பேச்சாளார்களில், ஆதரவாளர்களில் சுப வீரபாண்டியன், தி.க.வீரமணி, ஜெகத்காஸ்பர் இவங்கெல்லாம் சுத்த கேப்மாரி பசங்க. கருணாநிதி கிட்ட காச வாங்கிட்டு நடிச்சிட்டு இருந்திருக்கானுங்க. எதிர் ‘கேம்ப்’ல இருந்து ராஜினாமா செய்துட்டு வந்த தமிழருவி மணியன் என்ற எலி எப்ப பாத்தாலும் ஈழம் ஈழம் னு சொல்லிட்டு அம்மனமா திரியுது. காங்கிரஸை கருவருப்போம்னு கூட சொல்லுது. உணமையிலேயே சொல்றாரா இல்ல என்ன மேட்டருன்னு அடுத்த வருஷம் வரும்போது சொல்றேன்.
மக்கள் எல்லாம் கைலியை தூக்கி மூஞ்சிய மூடிட்டு ‘யாத்தே யாத்தே’னு பரபரப்பா இருக்காங்க. கட்சி அலுவலகத்தில் ஏதோ பிரச்னையாம். நான் கிளம்புறேன் முத்துக்குமாரா.
No comments:
Post a Comment