Monday, July 12, 2010

காலத்தின் கட்டாயம் - தெற்காசிய கூட்டமைப்பு

South Asian Union (SAU)
ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாட்டின் அரசியல் தலைவர்களின் பங்கு இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள மக்களின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்பவே அரசியல் தலைவர்களும், அரசியல் முடிவுகளும் அமையும்.
மனித வளம், இயற்கை வளம், ஜனநாயக அமைப்பு என அனைத்தும் பெற்றிருக்கும் சுதந்திர இந்தியா கடந்த பத்து பதினைந்து வருடங்களாக பல்வேறு நெருக்குதலுக்கு ஆளாகி வருகிறது. பெருகிவரும் நம்பகத்தன்மையில்லா ஊழல் அரசியல்வாதிகள், தொடர்ந்து நடந்து வரும் பாகிஸ்தானுடனான எல்லை பிரச்சனை, அவ்வப்போது எழும் சீனத்துடனான எல்லை தகராறு, மனிதகுல மேம்பாட்டைப் புறம்தள்ளி மதங்களின் பெயரில் அதிகரித்துவரும் பயங்கரவாதம், குண்டுவெடிப்புகள், இயற்கை வளத்தின் மீதான அரசின் முதிர்ச்சியற்ற கொள்கை, சீரான வளர்ச்சியை உறுதிப்படுத்தாத அரசாங்கம், விளைவாக பெருகிவரும் உள்நாட்டு பயங்கரவாதம் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சமீபத்தில் முடிந்த மூன்றாவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர்களின் தேர்வு இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்றது. முடிவில் பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் ஒருவரும் சேர்த்துக்கொள்ளப்படவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அறிவிக்கப்பட்டது. இச்செய்தியைக் கண்ட ஒரு 13 வயது சிறுவன் “சரியான முடிவு. பாகிஸ்தானியர்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொண்டு அவர்களுக்கு கோடிகளில் பணம் கொடுத்தால் அவர்கள் அதை வைத்தே நம் நாட்டில் வெடிகுண்டுகளை வைக்கின்றனர்” என்றபோது திடுக்கிட்டது. அச்சிறுவனுக்கு இந்திய விடுதலை வரலாறு கூட முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காஷ்மிரில் என்ன நடக்கிறது, எது சரி எது தவறு என கணிக்க இயலாத பருவம். ஆனால் அவன் மனதில் பகைமை நஞ்சு விதைக்கப்பட்டுள்ளது. இது அச்சிறுவன் மனதில் மட்டும் அல்ல பெரும்பான்மையான இந்தியர்கள் மனதில் முளைவிட்டுள்ள கருத்தாகவே உருவெடுத்துக்கொண்டுள்ளது.
இந்த கருத்தில் உள்ளடங்கியுள்ள அரசியல் கூற்று சரியானது தவறானது என்ற விவாதத்தை (இப்போதைக்கு) தவிர்த்து ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்கள் நமது அண்டை நாட்டின் மீது உள்ள வெறுப்பு, விளையாட்டு வீரர்கள் மீது கூட உமிழும் அளவில் இருக்கின்றனர் என எண்ணும்போது எதிர்காலம் நமக்கு கலக்கத்தை மட்டுமே கொடுக்கிறது. பொதுமக்களின் எண்ணமே அரசியல் தலைவர்களின் எண்ணமாக உருவெடுக்கும் அபாயம் இருக்கிறது.
அருகில் இருக்கும் இலங்கை தீவில் பெரும்பான்மை இன சிங்கள மக்கள் துவக்கத்தில் சிறுபான்மை தமிழ் இனத்தவர் மீது பற்று இல்லாமல் இருந்தாலும் பெரிய அளவில் வெறுப்பு இல்லாமல் தான் இருந்தனர். ஒரு கட்டத்தில் அரசியல் தூண்டுதலால் அது பொதுமக்களின் வெறுப்பாகவே மாற இன்று அங்கு ஒரு மிகப்பெரிய மனித இனப் படுகொலை நடந்தேறியுள்ளது. பல ஆயிரம் தமிழர்களைக் கொன்று குவித்த அந்நாட்டின் அதிபர் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் மக்கள் ஆதரவு பெற்று அமோக வெற்றி பெற்றார்.
பகைமைக் குறைத்து நட்பு பாராட்டி அமைதி நிலவச்செய்ய வேண்டிய இன்றைய அரசியல் கட்சிகள் இது போன்ற விஷயங்களில் தங்கள் சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக போட்டிப் போட்டுக்கொண்டு அரசியல் பகையை அணையாமல் பார்த்துக்கொள்கின்றனர். ஒருவரும் தீர்வை நோக்கி நகரவில்லை. அது வெளிநாட்டு பிரச்சனை பாகிஸ்தானுடனானது என்றாலும் சரி உள்நாட்டு மாவோவாக இருந்தாலும் சரி. நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஒன்றினைய வேண்டிய இந்தியர்கள் பொது எதிரியிடம் உள்ள பகைமை பாராட்டுவதில் ஒன்றினைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டில் உள்ள ஆயுதங்கள் தங்கள் நாட்டின் மீது படையெடுக்கும் எதிரி நாட்டிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தானே தவி வலியச் சென்று தாக்குவதற்கன்று. இதுவரை நம் இந்திய நாடு வலியச்சென்று அண்டை நாட்டுடன் போர் புரிந்ததில்லை. ஆனால் கடந்த 50 வருடங்களாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுடனான வேற்றுமை தெற்காசியாவில் ஒரு அசாதாரன நிலையை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் நவீன ஆயுதங்களை வெளிநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்வதில் போட்டி போடுகின்றன. ஆயுதம் விற்கும் நாடுகளும் இலாபம் வந்தால் சரி என மரண வியாபாரம் செய்ய தயங்குவதில்லை. 2009-10 ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 15 விழுக்காடு (ரூ.1,35,000 கோடி) அளவு ஆயுதம் வாங்குவதிலும் எல்லையில் வீரர்களை நிற்கவைப்பதிலும் செலவிட்டுக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டின் இராணுவத்திற்கான செலவின விழுக்காடு இதைவிட அதிகம். ஆண்டுக்கு ஆண்டு இந்தத் தொகை கூடிக்கொண்டுதான் இருக்கிறது. எந்த அரசும் இதை தீர்க்க வழிகாணவில்லை மாறாக இத்தகைய ஆயுத வியாபாரத்தில் சில அரசியல் தலைவர்கள், கட்சிகள் ஊழல் செய்யவும் தயங்கியதில்லை.
மதத்தின் பெயரில் தொடர்ந்துவரும் பகைமை இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியை பெரிதளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதை இரு நாட்டு மக்களும் உணரவேண்டும். மனித வளர்ச்சிக்கு வழிவகை செய்து மத உணர்வு இரண்டாம் பட்ச்சமாக மாறவேண்டும். மத உணர்வை தூண்டி பிழைப்பு நடத்தும் அரசியல் கட்சிகள் இருநாட்டிலும் புறக்கணிக்கப்படவேண்டும். மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிடம் குவிக்கப்பட்டுள்ள ஆயுதக்குவிலைக்கொண்டு போர் நடத்தப்படும் என்றால் அது நிச்சயமாக மூன்றாம் உலகப் போராகத்தான் இருக்கும். போருக்குப் பின் எதுவும் மிஞ்சாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இவை இப்படி இருக்க இரு நாடுகளும் அகிம்சை என்ற ஆயுதத்தை எடுத்து நட்பு நாடுகள் ஆவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

ஐரோப்பிய யூனியன் போன்று இங்கு தெற்காசிய கூட்டமைப்பு (South Asian Union - SAU) ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். ஏற்கனவே அண்டை நாடுகளுடனான பிராந்திய நல ஒத்துழைப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள சார்க் (SAARC) கூட்டமைப்பில் உள்ள (ஆப்கானிஸ்தான், வங்காளாதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான், இலங்கை) நாடுகளைக் கொண்டு இந்த SAU கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
இப்போதிருக்கும் நாடுகளைப் பிரிக்கும் எல்லைக் கோடுகள் இருக்கும்படியே இருக்கட்டும். அரசியலமைப்பு சட்டங்கள், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, என எல்லாமும் தங்கள் நாட்டுக்கேற்றவாறு இருக்கட்டும். பாதுகாப்புக்கு எல்லைகளில் தங்களது இராணுவ வீரர்கள் எப்போதும் போல் நிறுத்தப்படட்டும். ஆனால் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதில்லை என்பது மட்டும் உறுதியாக இருக்கட்டும். இயற்கை வளங்களை அழித்துக்கொள்ளாமல் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாடுகள் தங்கள் கொள்கைகளை வகுத்துக்கொள்ளட்டும்.
சண்டையிட்டுக்கொள்வதில்லை என முடிவெடுத்துவிட்டால் நாடுகள் தங்கள் பாதுகாப்புக்காக ஆயுதம் வாங்குவதில், இராணுவ துறைக்குச் செலவிடும் தொகையில் ஒரு பங்கை நாட்டின் வளர்ச்சிக்கு மடைமாற்றினாலே இந்த SAU பிராந்தியம் அபாரமான வளர்ச்சியை எட்டிப்பிடிக்கும். உள்நாட்டில் பொருளாதாரம் சீரடையும் நிலையில் அனைவரும் மக்களாட்சி மேல் நம்பிக்கைக் கொள்வர். காலப்போக்கில் பொருளாதார மேம்பாட்டிற்கு தேவைப்பட்டால் ஐரோப்பிய யூனியனுக்கு பொதுவான நாணயமாக ‘யூரோ’ இருப்பதுபோல் தெற்காசிய கூட்டமைப்பிற்கும் ஒரு பொதுவான நாணயம் வடிவம் பெறட்டும்.
இந்தியா ஒரு மாபெரும் ஜனநாயக நாடு என்பதில் ஐய்யமில்லை. ஆனால் மக்களாட்சி என்பது தலைகீழாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மக்கள் நேரடியாக பங்குபெரும் கிராம சபைகளை வலுப்படுத்தி பஞ்சாயத்துகள் தங்கள் தேவைகளை தாங்களே முன்வைக்கும் முறையை செயல்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலேயே முடித்துக்கொள்ளக்கூடிய விஷயங்களுக்கு மக்களை தேவையில்லாமல் ஒரு மாநிலத்தின் தலைநகருக்கு அலைகழிக்கும் நடைமுறையை மாற்றி அது மாவட்ட தலைநகரிலேயே நிறைவுசெய்யப்படவேண்டும். அதே போல் இராணுவம், நாணயம், இரயில்வே, வெளியுறவுக்கொள்கை, மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை, முதல் சில ஆண்டுகளுக்கு நலிந்த மாநிலங்களுக்கு மற்ற மாநிலங்களில் இருந்து பொருளாதார உதவியைப் பெற்றுத்தருவது போன்றவற்றை மட்டும் மத்தியில் வைத்துக்கொண்டு ஒரு மாநில அரசு அரசியல் சுதந்திரத்தோடும், நிதியாதாரத்தோடும் செயல்பட வழிவகுக்கும் மாநில சுயாட்சிக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும். இந்த அதிகாரப்பகிர்வு நடந்தேறினால் மட்டுமே நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அனைத்து மக்களும் பங்குகொள்ளும் வகையில் சீரடையும். உள்நாட்டில் நடந்து வரும் பயங்கரவாதம் அடியோடு மறைந்துபோகும்.
இன்றைய அரசியல் கட்சிகள் அதிகாரத்தை மத்தியில் வைத்து ருசித்துவிட்டனர். முன்பு ஆயிரம், இலட்சம், பத்து இலட்சம், அதிகபட்சமாக சில கோடி ரூபாய் என ஊழல் செய்து கொள்ளையடித்துக்கொண்டிருந்த சில அரசியல் தலைவர்கள் இன்று நூறு கோடிகளைத் கடந்து ஆயிரம் கோடிகள் என வந்து இன்றைக்கு பல ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்ய துவங்கிவிட்டனர். அதிகாரத்தை பகிர்வதால் இவர்கள் ஆயிரம் கோடி அளவிற்கெல்லாம் ஊழல் செய்ய முடியாத சூழல் உருவாகும். ஆகையால் சீரான வளர்ச்சி தரவல்ல அதிகாரப்பகிர்வை இன்றைய அரசியல் கட்சிகள், தலைவர்கள் செய்யப்போவதில்லை.
சுதந்திர இந்தியாவை ஒரு சோசலிச நாடாக அறிவித்துக்கொண்ட நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் வெளிநாட்டுக் கொள்கையைப் பற்றி கூறும்போது “தலையிடாக் கொள்கை” (Non Allingment Policy) என தெரிவித்தார். ஆனால் இன்று இருக்கும் புறசூழலுக்கு ஏற்றவாறு இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் சரியான திசையை நோக்கி பயணிக்கவேண்டி உள்ளது.

உலக ஆயுத வியாபார நாடுகளின் அறியாமையால் இந்த பிராந்தியத்தில் குவிக்கப்பட்டிருக்கும் ஆயுதக் குவியல்கள் தெற்காசிய நாடுகளின் தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படட்டும். ஆசாத் காஷ்மீருக்கும் இந்திய காஷ்மீருக்கும் இடையில் இருக்கும் எல்லைக் கோட்டின் மீது தெற்காசிய நாடுகளுக்கான தலைமையகம் எழுப்பப்படட்டும். அயோதியை சீலிடுவோம், குஜராத் படுகொலைக்கு சர்வதேச மன்னிப்புக் கோருவோம், மும்பை தாக்குதல், மலோகன் குண்டுவெடிப்பு குற்றவாளிகளை மன்னிப்போம். அண்டை நாடுகளுடன் இருக்கும் பகைமையில் ஒன்றினைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் வளர்ச்சிப் பாதையில் ஒன்றினைக்கப்பட வேண்டும்.
உலகுக்கு அகிம்சையின் வீரியத்தை செயல்படுத்தி காட்டிய இந்தியா, இன்று தானே அதைப் பின்பற்றவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எல்லா இடத்துக்கு கொண்டு செல்ல தடையாக இருக்கும் அதிகாரக் குவியலை பரவலாக்குவோம், வெளியுலகின் மீதான பார்வையில் சிதைந்துக்கிடக்கும் கருத்துகளை ஒன்றினைப்போம்.
Decentralize more and more powers which are all acting hurdle in economic development of people. & Centralize more and more powers in relationship with the rest of the world and usage of arms.
First let us form a Greater Stronger South Asian Union(SAU
)
அருணாச்சல் பிரதேசத்தில் ஒரு பகுதியை தன்னுடையது என சொல்ல துவங்கியுள்ளா சீனா, காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சீனா, இந்தியாவின் எதிரி நாடாக கருத்தப்படும் பாகிஸ்தானிலும், வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக இந்தியாவிற்கு எதிர் வேலை செய்துவரும் இலங்கையிலும் காலூன்றியிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலே.
ஆக இந்த சமயத்தில் இன்று நம் நாட்டிற்கு தேவையான வெளியுறவுக் கொள்கைக்கு வள்ளுவனின் இந்த இரு வரியே மந்திரம்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு. - குறள் (633)

குறள் விளக்கம் : பகைவர்க்கு துணையானவரை பிரித்தலும், தம்மிடம் நட்புடன் இருப்போரைத் தக்கவைத்தலிலும், தம்மிடம் இருந்து பகையால் பிரிந்து சென்றோரிடம் மீண்டும் நட்பு கொள்வதிலும் வல்லவனே அமைச்சன்.

Explanation : The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)
சிதைந்து வீழ்வதைவிட மக்கள் சக்தியை ஒன்றிணைத்து வாழ்வோம்.
-- S.D.பிரபாகர்.