Sunday, January 30, 2011
Saturday, January 15, 2011
தாயின் அன்புக்கு இணையான நம்பிக்கை வைக்க வேண்டுமா இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது?
T.N.சேஷன் என்ற அதிகாரி தேர்தல் ஆணையராக பணியாற்றியபோது இந்திய தேர்தல் ஆனையத்துக்கே ஒரு நன்மதிப்பு வந்ததென்றால் அது மிகையில்லை. அப்படி ஒரு துணிச்சல், தைரியம், நேர்மை. எப்போது என்ன கிடுகுப்பிடி சட்டம் கொண்டுவருவாரோ என்ற பயம் அரசியல்வாதிகளிடம் இருக்கும். ஆனால் சென்ற ஆண்டு ஓய்வுபெற்ற நவின் சாவ்லா அவர்கள் தேர்தல் ஆணையரா அல்லது காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதியா என கேட்குமளவுக்கு உலாவந்தார்?
வாக்குச்சீட்டில் முத்திரை குத்தும்போது வாக்களிப்பவர்கள் பதட்டத்தில் இரண்டு சின்னத்திற்கு நடுவில் அல்லது அறியாமையாலும் வீம்புக்காகவும் இரண்டு வேட்பாளருக்கு வாக்களிப்பதாலும் செல்லா வாக்குகள் பிரித்தெடுத்து எண்ணும் இடத்தில் இரு கட்சிகளிடத்தில் சண்டைகள் மூண்டவன்னம் இருக்கும். சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு நாள் முழுதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு விடிய விடிய இரண்டு நாட்களுக்கு வாக்கு எண்ணிக்கை இழுக்கும்.
இதற்கெல்லாம் மாமருந்தாய் வந்ததுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM – Electronic Voting Machine). இதில் குறைபாடே இல்லையா என்றால் உள்ளது. முக்கியமாக இரண்டை கூறலாம். ஒன்று இயந்திர பழக்கமின்மையால் வரும் ஒருவிதமான பதட்டம். மற்றொன்று நம்பகத்தன்மை.
நவீனயுகத்தில் இளசுகளால் சுலபமாக கையாளப்படும் மொபைல் போன்ற மின்னணு சாதனங்களைக் கண்டால் நகரத்தில் வாழும் மெத்த படித்த வயதானோருக்கே ஒரு பதட்டம் இருக்கும். இந்தியாவில் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையாற்றுவதில் படிக்காத பாமரனின் பங்கு அதிகமாக இருக்கிறது. அவர்கள் பதட்டத்தில் முதல் ‘பட்டனுக்கு’ பதிலாக கடைசி ‘பட்டனும்’, வேட்பாளர் அதிகம் இருக்கும் தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் முதல் இயந்திரத்தில் இருக்கும் வேட்பாளருக்கு பதில் இரண்டாவது இயந்திரத்தில் அதே எண்ணில் இருக்கும் வேறு வேட்பாளருக்கு பதட்டத்தில் வாக்களிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இது இயந்திர குறைபாடில்லை. வருடங்கள் உருண்டோட இக்குறைபாடு நீங்கிவிடும்.
ஆனால் நம்பகத்தன்மை? வாக்குச் சீட்டு முறை இருந்த காலத்தில் வாக்கு எண்ணிக்கையில் தோற்றவருக்கு சந்தேகம் வரும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும்போது முத்திரை குத்தப்பட்ட வாக்குச்சீட்டை மற்றொருமுறை பிரித்தெடுத்து யார் யாருக்கு எவ்வளவு வாக்கு விழுந்துள்ளது என்பதை வெளிப்படையாகத் தெரிந்துகொள்ளலாம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாக்குச்சீட்டை அழிக்காமல் பாதுகாக்க முடியும். ஆனால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் இது சாத்தியமில்லை. இந்திய தேர்தல் ஆணையத்தில் பணிபுரிபவர்கள் புத்தரைப் போன்றவர்கள் மகாத்மா காந்தியைப் போன்றவர்கள் என்ற அனுமானத்தில் ஜனநாயக நாட்டில் நம்முடைய பிரிதிநிகள் இவர் இவர் தான் என்று நம்பிக்கையின் பெயரில்தான் காலம்தள்ள வேண்டியுள்ளது. மனித இயல்புக்கு இது ஒவ்வாது.
ஏற்கனவே இரண்டு குற்றச்சாட்டு தமிழகத்திலேயே உள்ளது. 2009ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை மற்றும் விருதுநகர் தொகுதியில் இரு சம்பவங்கள் நடைபெற்றது. சிவகங்கையில் 3000 வாக்கு குறைவாக பெற்று தோற்ற வேட்பாளரை தேர்தல் ஆணையம் வெற்றி வேட்பாளராக அறிவித்தது என்ற குற்றச்சாட்டு. இது தவறை நிறுபிக்க முடியாத குற்றச்சாட்டு. மற்றொன்று விருதுநகர் தொகுதியில் வாக்களித்தவர்களைவிட 22,000 வாக்குகள் வாக்கு இயந்திரத்தில் கூடுதலாக இருந்தது.இந்த இரு சம்பவங்களுக்காக நீதிமன்ற படி ஏறினால், வாக்கு சீட்டு முறை இருந்த காலகட்டத்தில் காகித வடிவில் இருக்கும் மக்கள் கையொப்பமிட்ட வாக்கு சீட்டை மறு எண்ணிக்கைக்கு உட்படுத்தினாலே போதுமானது, நம்பகமானதும் கூட. ஆனால் மின்னணு வாக்கு இயந்திரத்தில் அது போன்ற ஒரு நிலை இல்லை. இந்த வாக்கு இவருடையதுதான் என்று சொல்ல முடியாது. தேர்தல் ஆனையத்தின் கட்டுபாட்டில் இருக்கும் இந்த மின்னணு வாக்குகள் மாற்றுதலுக்கு உட்பட்டவை. இதற்கு உருவம் கிடையாது. சிறிய மென்பொருள் மாற்றத்தால் இதை சாத்தியப்படுத்தலாம். “தேர்தல் ஆணையம் எப்போதுமே தவறு செய்யாது” என்று பெற்ற தாயின் அன்புக்கு இனையான இடத்தில் வைத்து அனைத்து மக்களும் நம்பினால் மட்டுமே இப்போதிருக்கும் முறை சாத்தியப்படும். பின் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து ஆகிவிடும்.
“எங்கள் கட்சிக்கு வாக்களித்தால் வேறொரு கட்சிக்கு அது போய் சேரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்பதுதான் இப்போது பரவலாக கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டு. அக்குற்றச்சாட்டை தேர்தல் ஆனையம் சுலபமாக வீழ்த்தும். ஆனால் நாம் சொல்வது அதற்கும் ஒரு படி மேல். பதியப்பட்ட வாக்குகளையே மாற்றி கூறும் அபாயம் இருக்கிறது என்பது தான்.
இதற்கு மாற்று என்ன? பழையபடியே வாக்கு சீட்டு முறைக்கே போகவேண்டியது தானா? தேவையில்லை. இப்போதிருக்கும் 8000ரூபாய் செலவிலான இயந்திரத்துடன் சுமார் 500ரூபாய் மதிப்புள்ள சிறிய ‘பிரிண்டர்’ பொருத்துவதுடன் வாக்கு எண்ணும் முறையில் சில மாறுதல் செய்தாலே மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம். எப்படி?
தேர்தல் ஆணையம் ‘பிரிண்டர்’ பொருத்துவது குறித்து ஆய்ந்துவருவதாக தெரிவித்துள்ளது. வாக்காளர்களுக்கு அவர்கள் எந்த வேட்பாளருக்கு வாக்களித்தார்கள் என்று உறுதிபடுத்திக்கொள்ள இயந்திரத்தில் இருந்து துண்டு சீட்டு வருவது போல ஏற்பாடு செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களைப் போல பலர் தெரிவித்துள்ளனர். இரகசியம் காக்க வேண்டிய பதியப்பட்ட வாக்கை வாக்காளரிடம் சீட்டாக கொடுத்து அனுப்பினால் வாக்குச்சாவடிக்கு வெளியில் இரண்டு கும்பல் காத்திருக்கும். ஒன்று கையில் பணப்பெட்டியுடன் இன்னொன்று கையில் அரிவாலுடன். இன்று ஆயிரம் இரண்டாயிரம் என ஓட்டுகள் விலைக்கு போய்க்கொண்டிருக்கும் அவல நிலையில் “உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன்” என அத்தாட்சியுடன் கூறினால் மீதமிருக்கும் கொஞ்சநஞ்ச ஜனநாயகமும் ரூ.5000, 10,000 என கேலிக்கூத்தாகிவிடும். இதை அடுத்தகட்சிக்காரன் பார்த்தானேயானால் வாக்காளரை “அப்படினா எனக்கு ஓட்டு போடலயா” என கேட்டு அரிவாலால் வெட்டுவான்.
இப்போதிருக்கும் இயந்திரங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை. அதில் (output) 1,2,3,….14,15,16 என எண்ணாக மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும். சின்னத்தை பிரிண்டரில் வரவழைக்க முடியாது. ஏனென்றால் தொகுதிக்கு தொகுதி, மாநிலங்களுக்கு மாநிலம் சின்னங்கள் மாறியபடி இருக்கும். சின்னத்தை வரவழைக்க வேண்டுமானால் இப்போதுள்ள அனைத்து இயந்திரங்களிலும் மென்பொருள் மாற்றியமைக்க வேண்டியிருக்கும். நடைமுறை சிக்கலை காரணம் காட்டி இது கிடப்பில் போடப்படும். மாறாக அந்த பிரிண்டரில் இருந்து வெளிவரும் சீட்டில் வேட்பாளர் பெயருக்கு வலதுபுறத்தில் இருக்கும் சின்னத்துக்கு பதில் இடது பக்கம் இருக்கும் வரிசை எண்ணை பிரிண்டரில் வரவழைக்க முடியும்.வேட்பாளரின் பெயருக்கு பின் இருக்கும் சின்னத்துக்கான ‘பட்டனை’ அழுத்தியவுடன் பெயருக்கு முன் இருக்கும் எண் பிரிண்டரில் தெரிவதன் மூலம் ஒரு வாக்காளர் தான் வாக்களித்த வேட்பாளருக்குத்தான் தன்னுடைய வாக்கு சேர்ந்தது என்பதனை உறுதி செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு |||||||||14|||||||||உதயமூர்த்தி||||||||’விசில்’|||||| சின்னம் இருக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க நினைத்தால் ‘விசில்’ சின்னத்துக்கு பக்கத்தில் இருக்கும் ‘பட்டனை’ அழுத்தியவுடன் சின்னத்துக்கு பக்கத்தில் ஒரு சிகப்பு விளக்கு எரியும். பின் ஐந்து நொடிக்குப் பின் அருகில் இருக்கும் பிரிண்டரில் ‘14’ என்ற எண் வெளிவரவேண்டும்.
திருட்டைத் தடுக்க கடைகளில் பொருத்தப்பட்டிருக்கும் காமிராவைப்போல் வாக்குச்சாவடி அறையை முழுதும் படம்பிடிக்கும் வகையில் காமிரா ஒன்றை பொருத்தி அதில் பதிவு செய்யப்படும் அதே (IST)நேரத்தை வாக்குபதிவு இயந்திரத்திலும் செயல்படும்படி செய்து பிரிண்டரில் எண் ‘14’குடன் அந்த நேரமும் (13:07:52) காகிதத்தில் அச்சாவதுடன் அந்த இயந்திரத்துக்கு வரிசை எண் கொடுத்து அந்த எண்ணுடன் வெளிவருவதன் மூலம் தான் பதிந்த வாக்கை பிற்காலத்தில் யாராலும் மாற்ற முடியாது என்ற நம்பிக்கை வாக்காளருக்கு வரும்.சராசரியாக ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 180 இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். வாக்கு எண்ணும் இடத்தில் இப்போது நடப்பது போலவே கடைசி சுற்று வாக்கு எண்ணி முடிக்கப்பட்டவுடன் இரண்டாமிடம் பெற்றவர் தேர்வு செய்யும், தனக்கு சந்தேகம் இருக்கும் ஏதாவதொரு வாக்குப்பதிவு இயந்திரத்தினுடைய காகிதச்சுருள் மற்றும் அந்த தொகுதியின் தேர்தல் அதிகாரி (RO) குலுக்கலில் எடுக்கும் மற்றொரு வாக்குப்பதிவு இயந்திரத்தினுடைய காகிதச்சுருள் இரண்டையும் எடுத்து வேட்பாளர்களின் நேரடி பார்வையில் பிரித்து எண்ணிமுடித்து இயந்திரத்தில் வந்த முடிவுடன் சரிபார்த்து இரண்டும் சரியாக இருக்கும் பட்சத்தில் முடிவை அறிவிக்கலாம். மொத்த காகித சுருள்களையும் எதிர்கால உபயோகத்துக்கு பாதுகாக்கலாம்.
நினைக்கும்போது இவ்வளவு சிக்கலுடன் உள்ள இந்த வழிமுறை தேவையா என நமக்குள் கேள்வி எழுவது இயல்பே. வாக்குப்பதிவு மையத்தில் இப்போது கடைபிடிக்கப்படும் செயலுடன் நாம் கடுதலாக செய்யவேண்டியது சிறிய பிரிண்டர் பொருத்துவது, வாக்கு எண்ணும் இடத்தில் நாம் கூடுதலாக 30 நிமிடம் செலவிடுவது. அவ்வளவே.
இதன் மூலம்….
· முறைகேடுகள் ஏதும் இல்லாமல் நேர்மையான முறையில் தேர்தல் நடந்ததை ஆணையம் உறுதி செய்யவதன் மூலம் வாக்காளருக்கு தேர்தல் முறையில் நூறு சதவீத நம்பிக்கை ஏற்படுத்த முடியும்.
· வேட்பாளர்கள் மனமுவந்து வெற்றி தோல்வியை ஏற்றுக்கொள்வர்.
· மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கே மாறவேண்டும் என்று பொதுவில் இருக்கும் கோரிக்கைகள் கைவிடப்படும்.
· சின்னத்துடன் சேர்த்து எண்களையயும் உபயோகிக்கப் பழக்குவதன் மூலம் மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ககையை முன்வைக்காமல் கட்சியின் சின்னத்தை வைத்து நிரந்திர ஓட்டு வங்கியை நம்பும் அரசியலிலிருந்து மக்களை விடுவிக்க ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.
மாறாக இப்போதிருக்கும் முறையே தொடருமானால் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வீழ்ந்து வரும் ஒவ்வொரு தூண்களின் வரிசையில் அடுத்த தூணாக தேர்தல் ஆணையம் இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
சிவகங்கை முடிவு வெறும் குற்றச்சாட்டு என்ற முறையில் தான் தற்போது உள்ளது. அப்படி ஏதும் நடந்திருக்கக்கூடாது என தான் எண்ணத்தோன்றுகிறது. ஒருவேளை அந்த குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில்?!. மக்களாட்சியில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகி அவரே இந்தியாவின் உள்துறை அமைச்சராகவும் இருப்பது ஒட்டுமொத்த இந்தியாவும் தலைகுனிய வேண்டிய வெட்க்கக்கேடான ஒரு செயலாக இருக்கும்.
“Caesar's wife must be above suspicion” என்று சொலவடை ஒன்று உள்ளது. சேஷன்கள் வந்தாலும் நவீன் சாவ்லாக்கள் வந்தாலும் தவறு செய்ய முடியாத வழிமுறை தேவை. மேல் பரிந்துரைத்தது போன்ற ஏதாவதொரு வழிமுறையைப் பின்பற்றி தன்னை கலங்கமில்லாத ஒரு அமைப்பாக நிலைநிறுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
இதன் தேவையையும், இந்த ஆலோசனையையும் ‘மக்கள் சக்தி கட்சி’, மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்லும்.
S.D.பிரபாகர்
மாநில தலைமைக் குழு உறுப்பினர்
மக்கள் சக்தி கட்சி