மக்கள் பிரச்சனைகளுக்கு அதுவும் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நேரடியாக வீதிக்கு வந்து உன்மைத்தன்மையுடன் போராடுபவர்கள் உள்ளனர் என்றால் அதில் முதலில் வருபவர்கள் கம்யூனிஸ்ட் தோழர்களாகத்தான் இருப்பார்கள். இளம்பருவத்தி,ல் சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு கொதித்தெழும் சில இளைஞர்கள், போராட்ட களத்தில் உள்ள தோழர்களுடன் இணைந்து போராடும் போது கார்ல் மார்க்ஸ் வகுத்த கம்யூனிச கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டால் இறுதி வரைக்கும் கம்யூனிஸ பிடிப்போடேயே இருப்பர் பலர். இவர்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒன்றினைந்தவர்கள்.
இத்தகைய மார்க்சிஸ்டுகள் ஈழப் பிரச்சனையில் அங்கிருந்த மக்களின் பிரதிநிதியாக விளங்கிய விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் அதீத அக்கறை செலுத்துகின்றனர். ஈழத் தமிழர்களுக்கு பரிதாபப் படுவதைப் போன்று, பரிந்து பேசுவதைப் போன்ற தோற்றம் அளித்தாலும் இவர்கள் சொல்லவரும் கருத்துகளின் முடிவில் அதை வெளியிலிருந்து படிப்பவர்கள் “எல்லாம் அவர்கள் தலையெழுத்து” என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்த்து செல்வதோ அல்லது “விடுதலைப் புலிகள் இவ்வளவு கொடூரமானவர்களா?” என நினைக்கத் தூண்டுவது அல்லது குறைந்தபட்சம் சிங்கள பேரினவாதிகள் மீது கோபம் வராத அளவிற்கு இவர்களின் கருத்துகள் உருவாக்கப்பட்டிருக்கும்.
ஏன் இப்படி? புலிகள் ஆயுதப்போராளிகள் என்ற காரணத்தினால் அவர்களை வெறுக்கின்றனரா என பார்த்தால் கம்யூனிசத்தின் பக்கங்கள் முழுக்க முழுக்க ஆயுதம், புரட்சி, இரத்தம், கொலைகள் நிரைந்தவையாக உள்ளது.
ஈழத் தமிழர்கள் பிரிவினைவாதிகளா, வன்முறையாளர்களா என சிந்தித்து பார்த்தால் அவர்களின் கோரிக்கைகள் (அதுவும் பிரிவினைக் கோரிக்கை கிடையாது) காந்திய வழியிலேயே துவங்கியுள்ளாது. தங்கள் மீது வன்முறை ஏவப்பட ஒரு கட்டத்தில் தனிநாடு கோரிக்கையாக மாற்றம் பெற்று தற்காப்புக்கு ஆயுதம் தரித்தவர்களாகவே வரலாறு உணர்த்துகிறது. ஏன் நம்ம தா.பாண்டியன் அவர்கள் கூட கம்யூனிஸ்ட் தோழர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தாக்கப்படுகிறார்கள் என்பதனைக் கண்டு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “தோழர்கள் அனைவரும் தற்காப்புக்காக பையில் ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என அறிக்கை கூட விட்டிருக்கிறார்.
ஒருவேளை தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராஜிவ் காந்தியை புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே அந்த கோபம் இருக்குமா என்றால் நாட்டைவிட கொள்கைகப் பற்றே அதிகமுள்ளவர்கள் மார்க்சிஸ்டுகள். தன் நாட்டின் மீது அண்டை நாடான சீனா படை எடுத்து வந்த சமயத்தில் கூட சீனா ஒரு கம்யூனிச நாடு என்ற காரணத்தினால் தன் சொந்த நாட்டை எதிர்த்தே குரல் கொடுத்தவர்கள். ஆக இராஜிவ் குற்றச்சாட்டும் கிடையாது.
இராஜபக்சே தோளில் சிகப்புத் துண்டு போட்டிருப்பதால் இருக்குமோ? ச்ச ச்ச.
அப்படியென்றால் அடுத்த நாட்டு பிரச்சனை நமக்கென்ன என நினைத்துவிட்டார்களா? அதுவும் கிடையாது ஏனென்றால் முதலில் கூறியதைப் போன்று மார்க்சிஸ்டுகளுக்கு நாட்டின் எல்லைக் கோட்டின் மீது நம்பிக்கை கிடையாது.
கம்யூனிஸ்டுகள் வஞ்சகர்களாக இருப்பார்களோ என சிந்திக்கும் நொடிப்பொழுதிலேயே பொட்டிற் அரைந்தார் போல் இல்லவே இல்லை. ஒரு சமூகத்தில் உழைப்பவனுக்காக, சிறுபான்மையினருக்காக, அடித்தட்டில் இருப்பவனுக்காக தெருவில் இறங்கி (உண்மைத்தன்மையுடன்) போராட்டம் செய்யும் சுயநலமில்லா சுத்தமானவர்கள்(ஓரளவிற்கு) என்பது தெளிவாக தெரிகிறது.
ஒன்றும் விளங்காமல் சரி அவர்கள் என்ன குற்றச்சாட்டை வைக்கிறார்கள் என கேட்க்கலாமே என சில மார்க்சிஸ்ட் தோழர்களிடம் காது கொடுத்ததில், எழுதிய புத்தகங்களை புரட்டும்போது சொல்லப்படும் காரணங்கள் வியப்பளிக்கிறது.!
* விடுதலைப் புலிகள் ஒரு கட்டத்தில் சக போராளிகளைக் கொன்றனர்.
* பிரச்சனை என வந்த போது ஏகாதிபத்திய நாடுகளைத்தான் நாடினர்.
* ஈழப் போராளிகள், மேல்-சாதி கீழ்-சாதி என சாதிப் பிரிவினைவாதிகள்.
* விடுதலைப் புலிகள் அங்கிருந்த சிறுபான்மை இஸ்லாமியர்களை விரட்டினர்.
தந்தை செல்வாவின் அகிம்சை வழி போராட்ட காலகட்டத்தில் சிங்கள அடக்குமுறைக்கு தமிழர்கள் ஆளாவதைக் கண்டு கொதித்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டமே தங்களை தற்காக்கும் என முடிவெடுத்தனர். சிங்கள இனவாதம் மேலோங்க, ஒன்றினைந்த இலங்கைக்குள் இருபத்தெட்டு ஆண்டுகளாக தமிழர்கள் வைத்த சுயாட்சி என்ற கோரிக்கை வலுவிழந்து தனிநாடே தீர்வு என்பதனை நோக்கி தொடங்கியபோது பல்வேறு குழுக்களாக ஆயுதம் ஏந்தினர் போராளிகள். துவக்கத்தில் தனி ஈழமே தீர்வு என்று தொடங்கியவர்கள் காலம் கடக்க பல குழுக்கள் துரோகச்செயல்கள், அயல்நாட்டு உளவு அமைப்பால் பிரிவினை என பல்வேறு சங்கடங்களை சந்தித்த வேளையில் போராளிகளுக்குள் எழுந்த வேற்றுமை பகைமையாகி முடிவில் ஒருவரையொருவர் அழிக்கும் நிலைக்கு ஆளாகினர்.
இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிப்போராளிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிராக கொடும் வன்முறையை நிகழ்த்திக்கொண்டிருந்த வேளையில் ஈபிஆர்எல்எஃப் ன் தலைவர் பத்மநாபா இந்திய உளவு அமைப்புடன் உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார். அதேபோல் டெலோ அமைப்பு விடுதலைப் புலிகள் என்ற அமைப்பையே ஒழித்திடவேண்டும் என தீர்மானமே நிறைவேற்றியது. இவர்களையெல்லாம் முடித்துவிட வேண்டும் என விடுதலைப் புலிகள் முடிவு செய்தது. போராளிகள் தேர்ந்தெடுத்ததோ ஆயுத வழி. ஜனநாயக வழி பின்பற்றப்படும் இந்தியாவிலேயே தா.கிருட்டினன், ஆலடி அருணா, என அரசியல் படுகொலகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்க ஆயுத வழி தேர்ந்தெடுத்த போராளிகளின் மொழி எப்படி இருந்திருக்கும்?!. சூழல் இப்படி இருக்க சகோதரச் சண்டையில் ஜெயித்தவன் பிழைத்தான். புலிகள் அமைப்பு ஜெயித்தது.
ஈழத்துக்காக போராட புறப்பட்ட போராளிகள் அங்கு ஒடுக்கப்பட்டுக்கிடந்த மக்கள் அடைய வேண்டிய இலட்சியத்தை மனதில் வைத்து சிற்சிறிய கசப்புகளை மறைத்து அயலாரின் சூழ்சியில் வீழாமல் ஒன்று பட்டு இருந்திருக்க வேண்டியது, இப்படி சகோதர யுத்ததில் உயிர்பலி கொடுத்துக்கொண்டு எதிரியின் கரத்தை வலுப்படுத்தியது ஈழ போராட்ட வரலாற்றில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று என்பதனை யாரும் மறுக்க இயலாது.
மேலுள்ள விரிவாக்கம் ஒரு சாதாரன மனிதனுக்கு சகோதரச் சண்டை என கூறும்போது புரியவைக்க எடுத்துக்கூறுவது. ஆனால் மார்க்ஸை படித்தவர்கள், வர்க்கப் பிரிவினையைப் படித்தவர்கள், ஒரு நாடு சோசியலித்தை சென்றடைந்து பின் எப்படி படிப்படியாக ஆயுத போராட்டத்தின் மூலமாக கம்யூனிஸ நாடாக உருவெடுத்து பின் உலக மக்கள், யாருடைய அதிகாரம் இல்லா, தங்களைத் தாங்களே ஆளும் நிலைக்கு வருவது என்ற கம்யூனிஸ சித்தாந்தத்தை உள்வாங்கியவர்கள், அடக்குமுறை செய்யப்படும் இடத்திலெல்லாம் புரட்சிகள் வெடித்து பல நாடுகள் உருவானதைக் கண்டவர்கள். ஸ்டாலினின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கையே இன்னும் எண்ணி முடிக்க முடியாமல் இருக்கும் நிலையை உணர்ந்தவர்கள், சீனச் சதுக்கத்தைப் படித்தவர்கள், விடுதலைப் புலிகள் சகோதரச் சண்டை போட்டார்கள் எனக் கூறுவது சுத்த பேத்தல் வகை.
மனிதனை மனிதன் வெட்டி சாய்த்துக்கொள்ள துவங்கிவிட்டால் உலகில் மனித இனம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இலங்கை அரசு மற்றும் இந்திய உளவு அமைப்பின் பிரித்தாளும் சூழ்ச்சியில் சிக்குண்ட போராளிகளினிடத்தில் சகோதரச் சண்டைஎன்பது கைமீறி போயிருக்க, இன்று ‘எல்.டி.டி.ஈ’ யை சகோதரச் சண்டையிட்டு சக போராளிகளை கொன்றவர்கள் என குற்றம் சாட்டுபவர்கள் நடந்த சகோதர யுத்தத்தில் ‘ஈ.பி.ஆர்.எல்.எஃப்’போ அல்லது ‘டெலோ’வோ யார் வென்றிருந்தாலும் வென்றவர்களைக் கண்டு “சகோதரச் சண்டையில் ‘எல்.டி.டி.ஈ’யை கொன்றுவிட்டார்களே” என எட்டிநின்று ஒப்பாரிதான் வைத்திருந்திருப்பர்.
அடுத்து விடுதலைப் புலிகள், பிரச்சனை என வந்த போது ஏகாதிபத்திய நாடுகளைத்தான் நாடினர் என்பது.
இலங்கைத் தீவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களை சிங்களர்கள் இன அழிப்பு செய்து கொண்டிருக்க அருகில் இருந்த இந்திய நாட்டின் பிரதமர் இந்திரா காந்தி இருக்கும்வரை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். பிறகு வந்த ராஜிவ் காந்தி ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஆழ்ந்து ஆராயாமல் எடுத்த முடிவுகளால் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட ஈழத்தமிழர்கள் இந்தியாவின் உதவியை நாடமுடியாமல் போனது.
உலகின் எந்த மூலையிலும் நடக்கும் அரசியலுக்கும் இப்போதிருக்கும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே சூத்திரம் வகுத்துக்கொண்டிருக்கிறது. சீனா மதரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்கள இனவாதத்துடன் கைகோர்த்திருக்க, சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் இருக்கும் கம்யூனிஸ நாடுகள் அதுவும் வல்லரசுகள் செய்யும் அரசியல் சூத்திரத்தில் நேரெதிராக பங்கு பெறாத ஆனால் அவர்களுக்கு எதிர்மறை கொள்கையைக் கொண்ட கியூபா, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளை ஏன் விடுதலைப்புலிகள் நாடவில்லை என குற்றம்சாட்ட முடியுமா? அப்படி நாடியிருந்தால் வல்லரசு நாடுகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க மாட்டார்களா? (இப்போதும் அதைத் தான் செய்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)
மேலும் புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிலேயே தஞ்சம் அடைந்திருக்க அந்த நாடுகளின் உதவியை நாடுவதுதான் உகந்ததாக இருந்திருக்கமுடியும். எப்படி கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோவிடம் உதவியை நாடவில்லை என குற்றம்சாட்ட முடியும்?
இந்தியாவில் அரசியல் கட்சிகள் ஆயிரம் இருந்தாலும் கொள்கைகளை வகுத்துக்கொண்டு கொண்ட கொள்கையிலேயே பிடிப்பாக (ஓரளவிற்கேனும்) நிற்கிறார்கள் என்றால் அது கம்யூனிஸ்ட் கட்சி தான். இப்படிப்பட்டவர்கள் இதைக்கூடவா சிந்திக்க மாட்டார்கள்?
அடுத்து சாதி வேறுபாடு கடைபிடித்தனர் மற்றும் இஸ்லாமியர்களை விரட்டினர் என்ற குற்றச்சாட்டு.
விடுதலைப் புலிகள் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்ற நோக்கில் சிந்திப்பது இல்லை நமது பணி. அறிவியல் உண்மைகளுக்கு துளியும் சம்மந்தமில்லா சாதி மத வேறுபாடு மணிதர்களுக்குள் கடைபிடிப்பது கொடியது என்பதை மறுப்பதற்கில்லை. உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு உருவத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படுகிறது. இது மாறாமல் ஒரு உன்னதசமுதாயம் அமைக்கமுடியாது என்பதும் உண்மைதான். அப்படி ஒரு வேறுபாட்டினை போராளிகள் கடைபிடித்தது உண்மை என்றால் அது தவறே.
சிங்கள இராணுவத்துக்கு தமிழ் போராளிகள் இருக்கும் இடத்தை காட்டிக்கொடுத்தார்கள் என்பதற்காக இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலுக்கு புலிகள் தரப்பில் நியாயம் கற்பிக்கப்பட்டாலும் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களின் மீது சிங்கள பேரினவாதம் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு இனப் படுகொலையில் ஈடுபடுகிறது என்று உலக நாடுகளிடம் நியாயம் கேட்க்கும் நிலையில் ஈழத்தமிழர்கள் இருக்க எப்படி தன்னுடனே இருக்கும் இன்னோர் சிறுபான்மையினரை தாக்குவது சரியான செயலாக இருக்க முடியும்?
“இஸ்லாம் மதத்தின் மீது வெறுப்பில்லை, புலிகளின் தலைவன் பிரபாகரன் அவர்களின் பாதுகாவலனே ஒரு முஸ்லிம் தான், உலக பத்திரிகையாளர்கள் முன்னைலையில் இஸ்லாமியர்களின் மீது நடத்தப்பட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டோம்” என புலிகள் தரப்பில் கூறப்பட்டாலும் தங்களது போராட்டத்தின் வீரியத்தையும் உலக நாடுகளிடம் எதிர்ப்பார்க்கும் ஆதரவு சிதையும் என்பதனை எத்தனித்திருக்க வேண்டும். அது செய்யாதது தவறுதான்.
சகோதரச் சண்டை, சாதி வேறுபாடு மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவத்தை காரணம் கூறி எப்படி ஆயிரக்கணக்கில் நிகழும் உயிரிழப்புகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார்கள் நம் மார்க்சிஸ்டுகள்? என நாம் நம் சிந்தனையை துவக்கி அவர்களது வரலாற்று பக்கங்களை புரட்டிப் பார்க்குபோது நமக்கு அதிர்ச்சியே மேலோங்குகிறது.!
18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஃப்ரென்சு புரட்சி முடியாட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. தொழிற்புரட்சி ஏற்பட்டு முதலாளிகள் ஆள தொழிலாளிகள் கசக்கி பிழியப்பட்டனர். இதைக் கண்ட 19ஆம் நூற்றாண்டின் சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ் கம்யூனிசத்தை உலகுக்கு வழங்கினார். இரண்டு மூன்று வரிகளுக்குள் அடங்கும் பொருளல்ல கம்யூனிசம் என்றாலும் மேலோட்டமாக பார்த்தால் மக்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகள் மறைந்து சமநிலை பெற்றிட மனிதர்களை வர்கங்களாக பிரித்தார். உழைக்கும் வர்கம், சுரண்டும் வர்கம் என பகுத்தார். சோசியலிசம், ஆயுதப்புரட்சி, கம்யூனிசம், ஒரு கட்டத்தில் அதிகார வர்கமே இல்லாத அமைதியான மனித சமூகம் உருவாக்கவேண்டும் என்பது எப்படி அமையும் என ஆயிரம் ஆயிரம் பக்கங்களைக் கொண்ட கம்யூனிஸ சித்தாந்தத்தை உலகுக்கு அற்பனித்தார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த நிகழ்வுகளில் இந்த உலகத்தின் ஓட்டத்தையே மாற்றிப் போட்டார் என்று கூட சொல்லலாம்.
20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த கம்யூனிஸத்தை உள்வாங்கிய விலாடிமிர் லெனின் 1917 ல் ஆட்சியை பிடித்ததும் உலகில் பலருக்கு நம்பிக்கை பிறந்தது. இனி உலகின் எதிர்காலம் கம்யூனிஸம் தான் என எல்லோரும் அதைப் பின்பற்ற துவங்கினர். தத்தமது நாடுகளில் கம்யூனிஸத்தை தலைவர்கள் பரப்பிக்கொண்டிருக்க அதே போல் இந்தியாவிலும் கம்யூனிஸ சித்தாந்தம் பரப்பப்பட்டது. சிலர் 1920 என்கின்றனர், ஒரு சிலர் 1925 ஆம் ஆண்டு என்கின்றனர்.
உழைக்கும் வர்கத்தின் (சுரண்டப்படும்) சக்தியை ஒன்றுபடுத்து என மார்க்ஸ் கூற ஐரோப்பாவிலும் சோவியத் யூனியனிலும் நடந்து கொண்டிருந்த தொழிற் புரட்சியால் சுரண்டுப்பட்டுக்கொண்டிருந்த உழைக்கும் தொழிலாளிகளை ஒன்றுபடுத்தி சோவியத்தில் ஆட்சியை பிடித்தார் லெனின். இதைக் கண்ட நம்ம ஆட்கள் இந்தியாவிலும் ஒரு கம்யூனிஸ்ட் கிளை ஒன்றைத் துவக்கினர். கட்சி துவங்கிவிட்டு தொழிற்சாலைகள் அதிகம் இல்லாத இந்தியாவில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் வேலையில் மும்முரமாக இறங்கிவிட்டனர். அந்த சமயத்தில் இங்கிருந்த பெரும்பான்மை மக்களோ சுதந்திரம் என்னும் வேட்கையில் கட்டப்பட்டிருந்தனர். அதை புரிந்து சுதந்திர போரில் பங்குபெற்றிருந்தால் விடுதலைக்குப் பின் ஓரளவேனும் கட்சியை வலுப்படுத்தியிருக்க முடியும். இதை சிந்திக்க மறந்த மார்க்சிஸ்டுகள் இன்னொன்றையும் மறந்தனர். அது இந்தியாவில் புறையோடிக்கிடந்த சாதி மத ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சிறுபான்மையினராக இருந்த இஸ்லாமியர்களுக்கு இருந்த பாதுகாப்பற்ற தன்மை.
ஆனால் பெரியார் இதை வெகு சுலபமாக உணர்ந்து ஒடுக்கப்பட்டுக்கிடந்த தமிழக மக்களை தட்டி எழுப்பி புரட்சி செய்தார். சுயாட்சி மறுக்கப்பட்டதை உணர்ந்த ஜின்னா பாகிஸ்தானை பிரித்தெடுத்துவிட்டார். ஆக மார்க்சிஸ்டுகள் இதிலும் கோட்டைவிட்டனர். சுதந்திரத்துக்கு பின் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் கம்யூனிஸ கொள்கைகளை பரப்பி ஆட்சியில் பங்குபெற்றனர் (இன்று வரையிலும் இந்த இரண்டு மாநிலங்கள் தான்.... இனி வரும் காலங்களில் இவ்விரண்டும் கூட இருக்குமா என தெரியவில்லை?!!!,) அதன் பின் என்ன செய்வது என தெரியாமல் பெரிய கட்சிகளுடன் ஆங்காங்கே கூட்டனி வைத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் சீனாவில் மாவோ கம்யூனிசத்தை உள்வாங்கி சீனாவில் ஒரு பெரும் புரட்சி செய்தார். கியூபாவிலும் ஆயுதப் புரசியின் மூலம் காஸ்ட்ரோ அங்கிருந்த அடக்குமுறைக்கு ஆளான மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்து மக்களுக்கு ஏத்த கம்யூனிஸத்தை மாற்றிக்கொண்டார்.
இப்படி உலகம் நகர்ந்துகொண்டே இருக்க மார்க்சிஸ்டுகள் “கட்சி துவங்கி வருடங்கள் உருண்டோடிவிட்டது ஆனால் நம்மால் எதிவும் செய்ய முடியவில்லையே?!. மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் எப்படி ஆட்சிக்கு வந்தார்கள்” என ஆராய்ச்சியை துவங்க மத்தியில் சிறுபான்மையினர் நலன் என்று சொல்லி காங்கிரசும் மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் நலன் என திமுக வும் கட்சியை ஓட்டிக்கொண்டிருக்க நாமலும் இதையே ஏன் செய்யக்கூடாது என மார்க்சிஸ்டுகள் சிரமப்பட்டு சிந்தித்து சமீப காலமாக இஸ்லாமியர் நலனுக்காக தீவிரமாக பிஜேபி ஐ எதிர்த்தும் தமிழகத்தில் ஒரு சாரார் மக்கள் தாழ்த்தப்பட்டுள்ளனர் என உத்தபுரத்தில் கொடி நாட்டியும் கட்சி ஃபார்முலாவை மாற்றிக்கொண்டனர்.
ஆக கட்சி துவக்கி இந்தியாவில் உள்ள பிரச்சணை என்ன என்பதனை கண்டுபிடிக்கவே வருடங்கள் 90 ஆகிவிட்டது. இன்னும் பத்து ஆண்டுகள் கழிந்தால் நூற்றாண்டு விழா கொண்டாடலாம். இப்போது கூட பிரச்சனை என்னவென்றுதான் கண்டுபிடித்துள்ளனர். அதற்கான காரணம் ஜனநாயக நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்புடன் இருக்க வேண்டும், மனிதர்களிடையே சாதி வேறுபாடு இருக்கக்கூடாது என்றெல்லாம் தெரியாது.
நிலைமை இப்படி இருக்க ஈழத்தில் பிரச்சனை என ஆங்காங்கே குரல்கள் ஓங்கி ஒலிக்க நம்ம மார்க்சிஸ்டுகளுக்கு என்ன செய்வதென புரியவில்லை. திடீரென்று கேட்டால் எப்படி? சரி இப்போதைக்கு நம்மகிட்ட இருக்கிற ஃபார்முலா என்ன? இஸ்லாமியர்கள் நலன், சாதி வேறுபாடு. இந்த ஃபார்முலாவை அப்படியே எடுத்துபோய் ஈழத்தில் பொறுத்திவிட்டனர். இலங்கையும் தெற்காசியாவில் ஒரு நாடுதானே?! அங்கு மட்டும் புதிதாக என்ன இருந்துவிடப்போகிறாது என்ற அபாரமான சிந்தனை. அக்டோபர் புரட்சியைக் கண்டு விரல் விட்டு என்னக்கூடிய அளவில் தொழிற்சாலைகளைக் கொண்டிருந்த இந்தியாவில் தொழிலாளர்களைக் கொண்டு புரட்சி செய்ய நினைத்தவர்கள் தானே நம்ம மார்க்சிஸ்டுகள்.
இலங்கைத் தீவில் பெரும்பான்மையாக உள்ள சிங்கள இனம் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகளைக் கூட வழங்காமல் இன அழிப்பு செய்துக்கொண்டிருக்கின்றனர். அங்கு நடப்பது இன ரீதியான அடக்குமுறை. அங்கு உடனடியாக காக்கப்படவேண்டியது தமிழர்களின் உயிர். இதுவரை 1,80,000 பேர் ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதையெல்லாம் உள்வாங்காமல் இந்த இடத்தில் வந்து இஸ்லமியர்கள் நலனுக்காக பேசுவோம், சாதி வேறுபாடுகளைக் களைவோம் என போராட்டத்தை திசைத் திருப்பிக்கொண்டுள்ளனர்.
உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி திட்டமிட்டு நடத்திய நான்காம் ஈழப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உண்மையை உள்ளபடியே கூறவேண்டுமானால் போரின் உக்கிரத்தை குறைக்க தமிழகத்தில் மூன்று பேருக்கு வாய்ப்பு இருந்தது. ஒன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இன்னொன்று தேமுதிக விஜயகாந்திற்கு மற்றொன்று இந்தியாவில் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக தெருவில் இறங்கி இன்றும் சலைக்காமல் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு.
ஆண்டாண்டுகளாக திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாற்றாக யாரும் வந்துவிட மாட்டார்களா என ஏங்கி கிடக்கும் தமிழக மக்களுக்கு 2006ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூரத்து வெளிச்சமாக தெரிந்தவர். முதல் தேர்தலிலேயே 8 விழுக்காட்டு மக்களின் வாக்குகளைப் பெற்ற தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிறிது நிதானத்துடன் சிந்தித்திருந்தால் 1 வருடமாக போர் உக்கிரமாக நடந்துகொண்டிருக்க உண்மை நிலை தெரியாமல் விழிபிதுங்கி நின்ற பொதுமக்களிடம் நடுநிலையுடன் செயல்பட்டிருந்தால் பெரும்பாலோனோரிடம் நன்மதிப்பை பெற்றிருக்க முடிந்திருக்கும்.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் எப்படியாவது காங்கிரஸ் கூட்டனியில் இருக்கும் திமுக கழலும் பட்சத்தில் அந்த இடத்தில் ஒட்டிக்கொள்ள தோதாக ஈழ படுகொலையில் எந்த விதத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாமல் பெருந்த்ரோகத்தை இழைத்தார். போரின் உச்சத்தில் கூடிய சட்டமன்ற நிகழ்வுகளில்கூட பங்கேற்காமல் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டார். 91ல் இராஜிவ் காந்தி கொல்லப்பட அன்று கூட்டனியில் இருந்த அதிமுக ‘புலி எதிர்ப்பை’ கடைபிடித்ததில் ஒரு அடிப்படை இருக்கிறது. தனிப்பட்ட விரோதத்தினால் புலிகளின் தலைவர் மீது கொண்டிருந்த வண்மத்தால் போரின் போது ஒதுங்கிநின்ற திமுகவின் துரோகச்செயலிலும் ஒரு அடிப்படை இருந்தது.
40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்படுவதை தன்னால் தடுத்துநிறுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதிருந்தாலும் களத்தில் இரங்கி எதிர்பை ஆழமாக பதித்திருந்திருக்கலாம். ஆனால் வெறும் ஓட்டு அரசியலுக்காக காக்கா எப்போது பாட்டு பாடும் வடை எப்போது கீழே விழும் என்று நரியைப் போல் காங்கிரஸின் பின்னாலேயே ஓடிக்கொண்டிருந்தார் விஜயகாந்த். உண்மையில் தமிழகத்துக்கு திமுக மற்றும் அதிமுக வை விட தேமுதிக மிகவும் ஆபத்தான இயக்கமாக தென்படுகிறது.
கருணாநிதி அவர்களோ 40 எம்.பிக்கள் இராஜினாமா, ராஜ்ய சபா எம்.பி. கனிமொழியின் இராஜினாமா கடிதம் தன் கட்சித் தலைவரிடம் ஒப்படைத்தல், 53 வருடங்களாக ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து சாதனை, மத்திய அரசு என்ன செய்கிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம், இனி பொருக்கமாட்டோம், கடிதம் எழுதுதல், மத்திய அரசுக்கு வேண்டுகோள், சட்டபேரவையில் தீர்மானம், நல்ல பதிலை எதிர்நோக்கி உள்ளேன், மனவேதனையில் உள்ளுக்குள் அழுவது யாருக்கும் தெரியாது, இறுதி வேண்டுகோள், உறுதியான வேண்டுகோள், வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால் மனித சங்கிலி போராட்டம் ரத்து, கொட்டும் மழையில் மனித சங்கிலி போராட்டம், பெரியாரும் நானும் அடிமைகள், இரண்டு கைகளையும் இழந்தவன், நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவன், போர் உக்கிரமடைந்துவிட்டது அவசர அவசரமாக 30 நாளில் திமுக செயற்குழு கூடி நல்ல முடிவெடுக்கும் என அறிவிப்பு, “இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்துக்கு” போட்டியாக “இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை”, பேரவை மூலம் மனு கொடுத்தல், ‘ப்ரேக் ஃபஸ்ட்க்கும்’ ‘லன்சுக்கும்’ இடையேயான சாகும் வரை உண்ணாவிரதம், மழை நின்றும் தூவானம் விடவில்லை,............. என தனது செம்மொழித் திறமையால் வித விதமாக சொல்லைக் கையாண்டு தமிழர்களை காக்கவைத்து நம்பவைத்து கழுத்தறுத்தார்.
எல்லாம் முடிந்தபின்பு இறுதியாக “சிங்கள ஆட்சியாளர்களின் மனம் புன்படக்கூடாது உடன்பிறப்பே, சகோதரச் சண்டையால் எத்தனை ஆயிரம் உயிர் பலி பார்த்தீர்களா உடன்பிறப்பே, அது மட்டும் இல்லை உடன்பிறப்பே, 2006ல் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் இத்தனை ஆயிரம் உயிர்கள் போயிருக்காது உடன்பிறப்பே” என நியூட்டனே வெட்க்கப்படும் அளவிற்கு தனது கண்டுபிடிப்பின் தீஸிஸை உலகின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்பாரி வைத்தார். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
இந்திய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி என்ற இரு பெரும் கட்சிகளும் ஈழப்போராளிகளுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க கடந்த இருபது வருடங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக இளைஞர்கள் ஈழத்தில் நடந்துக்கொண்டிருந்த இனப்படுகொலையைக் கண்டு வெகுண்டெழுந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக தெருவில் இரங்கி போராடிக்கொண்டிருந்தனர். என்ன செய்வது எப்படி செய்வது என்றே தெரியாமல் சிதறிக்கிடந்த ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள், உண்ணாவிரதம், சாலை மறியல், முற்றுகைப் போராட்டம், சிலர் தற்கொலை கூட செய்து கொண்டார்கள். அவர்களை அரவனைத்து ஒன்றுபடுத்தி சரியான போராட்ட முறைகளை வகுத்து அரசின் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடவேண்டிய கடமை அன்று பழுத்த களப்போராளிகளான கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு இருந்தது. ஆனால் நீங்களோ சிந்திக்க மறுத்துவிட்டீர்கள். ஈழத்தில் உண்மையான பிரச்சனை என்ன என்பதனை உள்வாங்க மறுத்துவிட்டீர்கள். 40,000 பேர் உயிர்விடுவதை எட்டிநின்று பார்த்துக்கொண்டிருந்தீர்கள். போதாதக்குறைக்கு கருணாநிதி அவர்களைப் போல புலிகளின் சகோதரச்சண்டை என பேசி வெறும் வாயை மெல்பவனுக்கு வசதியாக அவல் கொடுத்தீர்கள்.
இந்தியாவில் கம்யூனிஸம் இறக்குமதி செய்யப்பட்டு ஆண்டுகள் 90 ஆகிவிட்டது. இருந்தும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் சுதந்திரம் பெற்று 42 வருடங்கள் இந்தியநாட்டு மக்கள் சோசியலிச பாதையில் பயனித்திருக்கிறார்கள்! கண் மூடி திறப்பதற்குள் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறீர்கள். அதற்குள் இந்திய அரசியலில், தமிழக அரசியலில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை சற்று சிந்தித்து பாருங்கள்.
கம்யூனிஸத்தை எழுதிய கார்ல் மார்க்ஸ் ஒரு மிகப்பெரிய சிந்தனாவாதிதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் போதுமான அளவுக்கு அவரே சிந்தித்துவிட்டார், அவரைத்தாண்டி யாரும் எதுவும் சிந்திக்கக் கூடாது(தேவை இல்லை) என்று கட்டுப்பாடு வித்தித்துக்கொண்டு செயல்படுவது மனிதனுக்கு ஆறாவது அறிவு இருப்பதற்கு பயனே இல்லாமல் போய்விடும்.
‘நூலறிவால் செயல்களைச் செய்ய அறிந்த போதிலும் உலகத்தின் நடைமுறைகளையும் அறிந்து அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்’ என்று வள்ளுவன் நம்ம மார்க்சிஸ்டுகளை மனதில் வைத்துதான் எழுதினார் போல…
No comments:
Post a Comment