பெரிய நாய் உள்புகும் அளவில் கதவு இருக்க
சின்ன நாய் போக தனி கதவு எதற்கு ? !
தலைப்பு இருவரியில் கச்சிதமாக இருக்கிறதே திருக்குறளாக இருக்குமோ என நினைத்துவிட வேண்டாம். இந்த இரு வரி தான் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் மொழிக்கொள்கைக்கு வழி கோலியது. நாற்பது ஆண்டுகள் கழித்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இலட்சங்களில் சம்பளத்தைப் பெற்றுத்தறுவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது என்பதை உணர்ச்சிவசப்படாமல் பகுத்தாராய்பவர்கள் ஒப்புக்கொள்வர்.
சமீபத்தில் பள்ளிக் கல்வியைப் பற்றி பேசும்போது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் அவர்கள் நம் இந்திய நாட்டின் தேசிய மொழி இந்தி என்று கூறியுள்ளார். அவர் சொன்னது சரிதானே?! இதில் என்ன தவறு இருக்கிறது என நாம் அனைவரும் வினவக்கூடும். ஆம். சில வருடங்களுக்கு முன் வரை நான் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல. நம் நாட்டுக்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது. ஆங்கிலமும் இந்தியும் இந்தியாவின் அலுவல் மொழி என்று மட்டும் தான் அழைக்கப்படுகிறது. ஏன் நமக்கு பள்ளியில் சிறுவயது முதல் இதுவரை இந்தி நம் இந்திய நாட்டின் தேசிய மொழி என்ற தவறான தகவலை உட்புகுத்துகின்றனர்?
பல்வேறு சமஸ்தானங்களாக இயங்கி வந்த நாம் வாழும் இப்பகுதி முழுவதும் (பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம்) 14ஆம் நூற்றாண்டு முதல் முகலாயர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். பின் 18ஆம் நூற்றாண்டில் வந்த ஆங்கிலேயர்கள் மாகாணங்களாக (லாகூர், பஞ்சாப், அஸாம், சிந்த், பம்பாய், பெங்கால், மெட்ராஸ்) என பிரித்து ஆண்டுவந்தனர். இப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெருவதற்கு போராட, 1905ல் வங்காளம் பிரிக்கப்பட்டு 1947 ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தான் பிரிய மீதமிருந்த பகுதிதான் இன்றுள்ள இந்தியா என்னும் நாடு (சர்ச்சைக்குறிய காஷ்மீர் பற்றிய விவாதத்தை இப்போதைக்கு தவிர்ப்போம்). பல்வேறு தேசிய இனங்களை, மொழிகளைக் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு நம் இந்தியா. சுதந்திரத்துக்குப் பின் காலிஸ்தான் (பஞ்சாப்) பிரிவினையும், திராவிடஸ்தான் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், கர்நாடகா) பிரிவினையும் கோரப்பட்டது தனி கதை.
14ஆம் நூற்றாண்டு வாக்கில் பெர்சியா என்று சொல்லப்படும் இன்றைய ஈரான் பகுதியில் இருந்த மொழிகளின் சுவடு படிந்தருக்கும் மொழிதான் இன்று இந்தியாவில் 50% மேல் பேசும் இந்தி என்னும் மொழி. இந்தியாவில் 42 விழுக்காடு மக்களுக்கு இந்தி தாய்மொழியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தானி மொழி, சண்டிகரி மொழி, லம்பாடி மொழி, மால்வி, போஜ்புரி போன்ற 10க்கும் மேற்பட்ட கேட்பதற்கு ஒன்று போல தெரியும் ஆனால் வெவ்வேறு ஹிந்துஸ்தானி மொழிகளைத்தான் நாம் இன்று பொதுவான பெயரில் இந்தி என்று அழைக்கிறோம். தலைநகர் தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மக்களில் 85 விழுக்காட்டுக்கு மேற்பட்டோர்க்கு இந்தி மொழி தாய் மொழியாக விளங்குகிறது.
அயல்நாட்டிலிருந்து வந்து போர் தொடுத்தவர்கள் பெரும்பாலும் தலைநகர் தில்லியை மையமாக கொண்டே ஆட்சி புரிந்துள்ளனர். வணிகத்துக்காக தலைநகர் சென்றோரால் ஆங்காங்கே தங்கள் மாநிலங்களிலும் பரப்பப்பட இந்தி மொழி எல்லா மாநிலங்களிலும் வணிகம் செய்தோர், படித்தோர் மத்தியில் பிரபலமடைந்தது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற எல்லா திசைகளிலிருந்தும் வந்து ஒன்றுகூடி இயக்கம் கட்டியது எல்லாமே இந்தியாவின் மத்திய பகுதியில் தான். அன்றைய காலத்தில் வங்காள மொழிக்கு அதிகமாக பேசப்பட்ட மொழி என்ற வகையில் இந்தி இருந்தது. 1905ல் வங்காளதேசம் பிரிக்கப்பட விடுதலைப் பிரச்சாரத்திற்காக ஆங்கிலம் அல்லாத ஒரு பிரபல மொழியை இந்திய மக்களிடம் பரவலாக்க வேண்டி மகாத்மா காந்தி அவர்கள் 1918ல் இந்தி மொழியை தேர்ந்தெடுத்து இந்தி பிரச்சார சபா என்ற ஒன்றை துவங்கினார். அன்று தேவை எனப்பட்டோர் இந்த சபாவில் இணைந்து இந்தி பயில துவங்கினர். இந்த வகையில் இந்தி என்ற மொழியின் இருப்பு மற்ற பகுதியில் உள்ள மக்களிடையே பிரபலம் அடைந்தது.
ஆங்கிலேய ஆட்சியின் இறுதிப் பகுதி 1937ல் தேர்தலில் முதன் முதலில் நீதிக்கட்சியை வென்று காங்கிரஸ் கட்சி மெட்ராஸ் பிரசிடன்சியில் (இன்றைய தமிழ்நாடு, கேரளத்தின் பெரும்பகுதி, ஆந்திர பிரதேசம், கர்நாடகத்தின் ஒரு பகுதி) ராஜாஜி தலைமையில் ஆட்சியில் அமர அவர் இந்தி மொழியை அனைவரும் கற்றாக வேண்டும் என்றார். ஆட்சி மொழியாக ஆங்கிலம் இருக்க, தாய் மொழியையும் கற்றாக வேண்டிய சூழலில் மூன்றாவதாக ஒரு மொழியை அனைவரும் கட்டாயம் கற்றே ஆகவேண்டும் என திணிக்கக்கூடாது என தந்தை பெரியார் அந்த சட்டத்தை எதிர்த்தார்.
மேலும் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டால் தமிழ் மொழியை அழித்துவிடும் என்றும் தந்தை பெரியார் எச்சரித்தார். எச்சரிக்கையையும் மீறி ராஜாஜி அதை சட்டமாக்க அதை எதிர்த்து போராட்டங்கள் பெருக பெரியார், அண்ணாதுரை உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர். தாளமுத்து மற்றும் நடராஜன் இருவரும் சிறையில் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை உட்ப்படுத்தியதை கண்டித்து காங்கிரஸ் அரசு இந்தியா முழுவதும் பதவி விலக ஆங்கிலேய ஆளுனர், ராஜாஜி கொண்டுவந்த சட்டத்தை நீக்கினார்.
பின் இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்ற சமயத்தில் ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக இருக்க சுதந்திர இந்தியாவிற்கென்று தனி அரசியல் சாசனம் எழுத துவங்கியபோது சாசனத்தையே இந்தியில் தான் எழுத வேண்டும் என குரல்கள் எழும்பியது. ஏன் என்பதனை ஆராயும் போது, 200 வருடங்கள் நம்மை ஆங்கிலேயர் அடிமைப்படுத்தி ஆண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் இந்திய சுதந்திர போரில் உயிரிழந்துள்ளனர். அச்சமயத்தில் ஆங்கிலேயர் நாட்டை விட்டு வெளியேரியபின் அவர்கள் கொடுத்த மொழியை அவனது எச்சமாகத்தான் நினைத்துள்ளனர். ஆக ஆங்கிலம் மொழி மீது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கோபம் இருந்தது இயற்கையே. இந்தியில் சாசனம் எழுதுவதால் இந்தி தெரிந்த அந்த மாகாணத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை ஆனால் இந்தி தெரியாத மீதமிருந்த 65 விழுக்காட்டு மக்களுக்கு ஆங்கிலம் மட்டுமே அலுவல் மொழியாக பழக்கப்பட்டிருக்க அந்த சட்டத்தை நீக்கிவிட்டு இனி இந்தியாவில் இந்தி மட்டுமே இருக்கும், இந்தி மொழி தான் இனி தேசிய மொழி என்பதனை யாரும் ஏற்கவில்லை. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களில் சிலரே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
எதிர்ப்பு வலுவடைய ஒரு வழியாக சாசனத்தின் 17வது பிரிவில், இந்தி மொழி அலுவல் மொழியாக(official language) இருக்கும் என்றும் அடுத்த 15 வருடங்களுக்கு அதாவது 1965 வரை ஆங்கிலமும் அலுவல் மொழியாக இருக்கும் என்றும் சட்டம் இயற்றப்பட்டது. இந்த 15 ஆண்டுகளில் இந்தி பிரச்சார சபா மூலம் இந்தி மொழியை பிரபலப்படுத்த குழுக்கள் அமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் ஆங்கிலேயர்கள் விடைபெற்ற பின்னும் ஆங்கிலம் இன்னும் இந்தியவை விட்டு விலகாத சூழலைக் கண்டு சிலர் கொதித்தனர். மத்தியில் இருந்த காங்கிரஸ் எம்.பி. ஆர்வி.துலேகர் அவர்கள் “இந்தி மொழி தெரியாதவர்கள் இந்தியாவில் இருக்க தகுதி இல்லாதவர்கள் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் இந்தியர்களின் பிரதிநிதியாக வந்துள்ளவர்களுக்கு இந்தி மொழி தெரியவில்லை என்றால் மன்றத்தை விட்டு வெளியேரலாம்” என கர்ஜித்தார்.
இதனிடையே ஆட்சிக்கு வந்த காங்கிரஸின் மெட்ராஸ் மாகாண முதல்வர் ஓமந்தூரார், ராஜாஜி கொண்டுவந்த கட்டாயம் இந்தி என்ற சட்டத்தை 1948ல் மீண்டும் அமுல்படுத்தினார். இந்த இந்தி மொழி திணிப்பை பெரியார், திரு.வி.க., எம்.பி.சிவஞானம் முதலானோர் எதிர்க்க மீண்டும் போராட்டம் துவங்கியது. போராட்டம் வலுமை பெற 1950ல் கட்டாயம் இந்தி என்ற சட்டம் பின்வாங்கப்பட்டு விருப்புவோர் படிக்கலாம் (optional) என்ற முறையில் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
ஆங்கிலேய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ஆங்கில மொழி கட்டாயம் கற்க வேண்டும் என்ற சட்டம் இருந்ததைப் போல் சுதந்திரத்துக்குப் பின் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிய இந்தி கட்டாயம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தி மொழி பிரச்சாரத்திற்காக ஏற்படுத்தப்பட்ட குழு இந்தி மொழியை இந்தியாவின் முதன்மை மொழி ஆக்கவேண்டும் என்றும், ஆங்கிலத்தை அதன் துணை மொழியாக கொள்ளலாம் என்று அறிக்கை சமர்ப்பிக்க மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. 1959ல் நாட்டின் பிரதமர் நேரு அவர்கள் “இந்தி மொழி திணிக்கப்படாது. இந்தி மொழி தெரியாத மாநிலங்கள் விரும்பும் வரையில் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும்” என்று உறுதியளித்தார்.
1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. பெரியார், ராஜாஜி, அண்ணாதுரை ஆகியோர் மத்திய அரசுக்கு “ஆங்கிலம், அலுவல் மொழியாக தொடரவேண்டும்” என்று தீர்மனம் ஒன்றை நிறைவேற்றி அனுப்பினர். 1962ல் மெட்ராஸ் (தமி்ழ்நாடு) மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அறிஞர் அண்ணாதுரை அவர்கள் தோற்கடிக்கப்பட பின்னர் மாநிலங்களவை உறுப்பினர்(Rajya sabha M.P.) ஆனார். ஆங்கிலத்துக்கு கொடுக்கப்பட்ட15 வருட அவகாசம் 1965ல் முடியும் தருவாயில் 1959ல் பிரதமர் நேரு “ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும்” என்ற உறுதிப்பாட்டிற்கு 1963ல் சட்டவடிவம் கொடுக்கப்பட்டது. ஆனால் சட்டத்தில் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரும் என்பதனை நீக்கிவிட்டு தொடரலாம் என்று எழுதப்பட்டது. “பின் வரும் ஆட்சியாளர்கள் தொடரலாம் என்பதனை ‘தேவைப்பட்டால் தொடரலாம்’ இல்லையென்றால் தேவையில்லை என்று மாற்றியமைப்பர்” என அண்ணாதுரை இதை எதிர்த்தார். அந்த உரையாடலின் ஆங்கில வடிவம்…
"the English language may...continue to be used in addition to Hindi". The DMK argued was that the term "may" could be interpreted as "may not" by future administrations. They feared that the minority opinion would not be considered and non Hindi speakers' views would be ignored. On 22 April, Nehru assured the parliamentarians that, for that particular case "may" had the same meaning as "shall". The DMK then demanded, if that was the case why "shall" was not used instead of "may".
ஆனால் எதிர்ப்பையும் மீறி சட்டம் “may” என்ற ஆங்கில சொல்லுடனேயே இயற்றப்பட்டது.
1965ல் மெட்ராஸ் மாநில முதல்வர் பக்தவட்கசலம் அவர்கள் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தினார். மீண்டும் இந்தி மொழி திணிக்கப்படுவதை எதிர்த்து திமுக கட்சி போராட்டத்தை அறிவித்தது. இம்முறை இந்தி மொழி திணிப்பை ஏற்க மறுத்து மாணவர்களும் திமுகவுடன் களமிறங்கி போராட்டத்தை வீரியமடைய செய்ய, அரசு, துணை இராணுவப்படையை அழைக்க 300க்கும் மேற்பட்டோர் போராட்ட கலத்தில் உயிர் நீத்தனர்.
1967ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அண்ணாதுரை தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. இந்தி பிரச்சார சபாவை மூடவேண்டும், இந்தி திரைப்படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மீண்டும் சிலர் பிரச்னையை துவங்க, மும்மொழிக் கொள்கையை நீக்கி ஆங்கிலம் மற்றும் தாய்மொழித் தமிழ் என்ற இருமொழிக் கொள்கையை பிரகடனப்படுத்திய அறிஞர் அண்ணா, “இந்தி திணிப்பைத்தான் எதிர்க்க வேண்டும். இந்தி திரைப்படத்துக்கோ அல்லது இந்தி மொழியை பரவலாக்க நிறுவப்பட்ட இந்தி பிரச்சார சபா போன்றவை வழக்கம்போல் இயங்குவதற்கு எந்த தடையும் இல்லை” என அறிவித்தார். பின்னர் இந்தி மொழியை வளர்க்க மத்திய அரசு செலவிடுவதைப் போல் அனைத்து மொழியின் வளர்ச்சிக்கும் செலவிடவேண்டும் என்று கோரினார்.
இந்திய மொழி வரலாற்றில் இவ்வளவு விஷயம் நடந்திருக்க 300க்கும் மேற்பட்டோர் உயிர் பறிக்கப்பட்டிருக்க நம் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக இருக்க எப்படி அடுத்த தலைமுறைகளான நமக்கு இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று தவறாக புகுத்தப்பட்டிருக்கு? எப்படி நம் நாட்டின் மத்திய அமைச்சர் தேசிய மொழி இந்தி என்று தைரியமாக பொய் பேசுகிறார்? ஊடகங்கள் ஏன் தொடர்ந்து இதுபோன்ற தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்?
இன்று வரையி்ல் இந்தி பிரச்சார சபா தமிழகத்தில் இயங்கிக்கொண்டிருக்க, வரலாறு நெடுகிலும் ‘இந்தி திணிப்பை’ மட்டுமே எதிர்த்து வந்த தமிழகம் மீது ஏன் ‘இந்தி எதிர்ப்பு’ என்ற பொய்யான சாயம் பூசப்டுகிறது? தமிழகத்தில் உள்ள மெத்த படித்தவர்களே ஏன் இந்த அவதூறுகளை பரப்ப துணைபோகின்றனர்? என நாம் சிந்திக்க…
மொழி போராட்டம் மூலம் வெற்றி பெற்று திராவிட முன்னேற்ற கழகம்(திமுக) ஆட்சியை பிடித்து கடந்த 40 வருடங்களில் செய்த வளர்ச்சி பணிகளுக்கு சமமாக, தமிழகத்தில் ஊழல்கள் செய்து, ரவுடியிசம் செய்து, ஜனநாயக படுகொலை செய்து, அடக்குமுறைகள் செய்து மக்களை கிட்டத்தட்ட நவீன அடிமைகளாக வைத்துள்ளனர். மேலும் நம்மை இந்தி மொழி கற்கவிடாமல் செய்த மொழிப்போராட்டத்தில் கலந்துகொண்டு போராடியவர் இன்றைய முதல்வர் கருணாநிதி. ஆனால் அவரது பேரன் தயாநிதி மாறன் இந்தி மொழி கற்று நாடாளுமன்றத்தில் பேசுகிறார் என்ற கூற்று சமூகத்தில் பரவியிருக்கிறது. விளைவாக, “நாம் மட்டும் ஏன் இந்தி மொழியை கற்கக்கூடாது” என்ற குரல் பரவலாக ஒலிக்கிறது. 200 வருடங்கள் நம்மை அடிமைகளாக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் மீது நம்முடைய சுதந்தர போராட்ட வீரர்களுக்கு இருந்த கோபம் எப்படி அதீத உணர்ச்சியால் அவர்கள் கொண்டுவந்த ஆங்கில மொழி மீது திரும்பியதோ அதே போல திராவிட கட்சிகள் மீது இருக்கும் அளவு கடந்த கோபம் அவர்கள் ஆட்சி பிடிக்க உதவிய மொழி போராட்டம் மீது படிப்படியாக திரும்பியுள்ளது. அவர்கள் வேண்டாம் என்று சொன்ன இந்தி மொழியை கற்றே ஆக வேண்டும் என்று உணர்ச்சிக்காட்பட்டு கண்மூடித்தனமாக வாதிடுகின்றனர். இதனை ‘Political Hangover’ என்று சொல்லலாம். இந்த வாதத்திற்கு இவர்கள் துணையாக கொண்டுவருவது…
1. இந்தி மொழி நம் தேசிய மொழி.
2. இந்தியாவில் அதிகமானோரால் பேசப்படும் மொழியை ஏன் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?
3. நாட்டுப்பற்று இல்லாமல் இந்தி மொழியை எதிர்த்து அண்ணாதுரை தமிழகத்தை இந்தி கற்பதில் இருந்து தடுத்துவிட்டார்.
4. இந்தி மொழியை கற்றால் இந்தியாவில் எல்லோரிடமும் பேசிப்பழகலாம்.
5. இந்தி மொழியை கற்காததால்தான் நம்மிடம் நாட்டுப்பற்றே இல்லை என வடநாட்டவர்கள் எண்ணுகிறார்கள். இந்தியைக் கற்றால் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் விளங்கும்.
6. நான் வடநாட்டுக்கு போயிருந்தேன் அங்கு இந்தி தெரியாமல் திண்டாடிவிட்டேன்.
7. ஒரு மொழி என்பது கருத்துப்பரிமாற்றத்துக்காக உபயோகிக்கப்படுகிறது என்ற வகையில் தான் பார்க்க வேண்டும்.ஒரு மொழியை கற்றுக்கொள்வதை வேண்டாம் என்று யாரும் தடுக்கக்கூடாது. ஆங்கிலம், தாய் மொழியுடன் சேர்த்து மும்மொழிக் கொள்கையை ஏற்பது தவறில்லை. குறந்தபட்சம் பல்வேறு மொழிகளை வைத்துவிட்டு மக்களுக்கு எது தேவையோ அதை தேர்வுசெய்துகொள்ளட்டும்.
8. அப்படி என்ன உனக்கு இந்தி மொழி மீது இவ்வளவு கோபம்?
1. இந்தி மொழி நம் தேசிய மொழி
மேற்கூறியுள்ளதைப் போல இந்தி மொழி நம் தேசிய மொழி அல்ல. இந்திய அரசியல் சாசனம் 17வது பிரிவின்படி ஆங்கிலமும் இந்தியும் வெறும் அலுவல் மொழியே. அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் பிரிவில் இந்தியாவில் மொத்தம் 22 மொழிகள் உள்ளன. நிலைமை இப்படி இருக்க ‘இந்தி மொழி நம் தேசிய மொழி’ என்று இந்தி மட்டுமே பேச தெரிந்த சில மாநிலத்தவர்களால் பள்ளிக்கூடங்கள் முதல் தொலைக்காட்சி சேனல்கள் வரை திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
2. இந்தியாவில் அதிகமானோரால் பேசப்படும் மொழியை நாம் ஏன் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளக்கூடாது?
இதே கேள்வியை மாநிலங்களவையில் இந்தியை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்திலிருந்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் கேள்வி எழுப்ப அதற்கு பதிலலித்த அறிஞர் அண்ணா “இந்திய நாட்டில் அதிகமான எண்ணிக்கையில் காக்கைகள் பறந்து கொண்டிருக்க ஏன் தேசிய பறவையாக தோகை விரித்தாடும் மயிலை அறிவித்துள்ளோம்” என்று வினவினார்.
இன்றும் தேய்ந்த ரெக்கார்டை போல அதே கேள்வியை கேட்பவர்களிடம் நாம் அதையேதான் சொல்லவேண்டும். கொஞ்சம் மாற்றி கூட கேட்க்கலாம். “பன்றிகள் பெருகிக்கிடக்க பாயும் புலியை ஏன் தேசிய விலங்காக ஏற்றுள்ளோம்”?!
3. நாட்டுப்பற்று இல்லாமல் இந்தி மொழியை எதிர்த்து அண்ணாதுரை தமிழகத்தை இந்தி கற்பதில் இருந்து தடுத்துவிட்டார்.
ஆங்கிலேயன் அடிமமைப்படுத்தி ஆண்டததைப் போல் இந்திய சுதந்திரத்துக்குப்பின் இந்தி பேசும் மாகாணத்தார் இந்தியைத் திணித்து தமிழர்களை ஆள நினைக்கின்றனர் என்று கூறி திராவிடஸ்தான் என்ற தனி நாடு கோரிக்கையை அண்ணா வைத்தார் என்பது உண்மை. இந்திய-சீன போர் துவங்க பிரிவினை கோரிக்கையை கைவிட்டார் என்பதும் உண்மை. ஆனால் இந்த இடத்தில் ஒரு உண்மையை ஏற்றாக வேண்டும். இந்தி அனைவரும் கற்றாக வேண்டும் என்று நிர்பந்தித்த காங்கிரஸ் அரசு ஆங்கிலம் இந்தியாவில் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாதிருந்தனர் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல் சாசனத்தில் 15 ஆண்டுகள் வரை தான் ஆங்கிலம் அலுவல் மொழியாக இந்தியுடன் தொடரும் என்று எழுதினர். அதன் பொருள் 1965க்குப் பின் ஆங்கிலம் தானாக அகலும் என்பதுதான். அலுவல் மொழியிலிருந்து மட்டும் தான் ஆங்கிலம் நீக்கப்பட்டிருக்கும் ஆனால் பள்ளிக்கல்வியில் தொடர்ந்திருக்கும் என சிலர் வாதிடலாம். சுதந்திர இந்தியாவில் நாம் சோசியலிச கொள்கையோடு அமெரிக்க, ஐரோப்பிய வாடையே இல்லாமல் ரஷ்யாவுடன் உறவு மேம்பட்டிருந்த சமயம் அது. ஆங்காங்கே மக்கள் ரஷ்ய மொழியைக் கற்று உயர்படிப்புக்காக ரஷ்யா செல்வது சாதரனமான விஷயமாக இருந்தது. இப்போதுள்ளதைப் போன்று வணிகம் உலகலவில் பரந்து விரியவில்லை. எல்லாமே உள்நாட்டிலேயே முடித்துக்கொண்டோம்.
இந்தி திணிப்பு தமிழகத்தால் எதிர்க்கப்பட, ஆங்கிலம் நம்முடையே ஒட்டிக்கொண்டிருக்க 1990 வரையில் சோசியலிச பாதையில் சென்ற நம் நாட்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு படிப்புக்காக, வேலைக்காக சென்றோரின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் தகவல் தொழில்நுட்பத்துறை உலகில் விஸ்வரூபம் எடுத்த சமயத்தில் 1991ல் உலகமயமாக்கலை சரியாக பயன்படுத்தி இன்று படித்து வெளிவரும் மென்பொருள் பொறியாளர்களில் இன்று வெளிநாடுகளுக்கு போய்வராதோரை விரல் விட்டு எண்ணிவிடலாம். 500, 1000, 1500, 3000, 5000 ரூபாய் அதிகபட்சமாக 10,000 ரூபாய் சம்பளமாக வாங்கி வந்த இளைஞர்கள் இன்று ஆரம்பமே 25,000 ரூபாய் சில வருடங்கள் கழிந்து மாத வருமானத்தையே இலட்சங்களில் பேச உறுதுணையாக இருப்பது அன்றிலிருந்து இன்று வரை நம் பாடத்திட்டத்திலும் ஊடகங்கள் வாயிலாக நம்முடனேயே தொடர்ந்து வரும் உலகமொழியாக உள்ள ஆங்கிலம் தான்.
அன்று காங்கிரஸார் பேச்சு கேட்டு இந்தியா முழுவதும் இணைப்பு மொழி இந்தி மொழி என்றாகியிருந்தால் இந்திய இளைஞர்களின் இன்றைய நிலை என்ன? இணையத்தின் முழு பயன்பாட்டை நம்மால் அடைந்திருக்க முடியுமா? கிரிக்கெட் வர்ணனையில் “ச்சார் ரன் கே லியே, ஏக் துஜே கே லியே” என்று தான் கேட்டிருந்திருப்போம். 1990ல் உலகமயமாக்கலுக்குப்பின் புதிதாக உலக மொழியாக உள்ள ஆங்கிலத்தை தீவிரமாக மீண்டும் இந்தியாவில் கொண்டுவர நினைத்திருந்தால் ஆங்கில எதிர்ப்பு கிளம்பியிருக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? இன்று உலகநாடுகளுக்கு சேவைத் துறையில் மிளிரும் இந்தியாவில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை தலையில் ஒரு ‘ஹெட்போன்’ மாட்டிக்கொண்டு ஆங்கிலம் பேசிவிட்டு மாதமானால் 20,000 ரூபாய் 30,000 ரூபாய் சம்பளமாக பெரும் வாய்ப்பு கிடைத்ததிருக்குமா?
தீவிர மொழி பற்றாளர்கள் “ஆங்கிலம் இத்தனை காலம் நம்முடையே வந்ததால்தான் இன்று பேச்சுத்தமிழில் ஏகப்பட்ட ஆங்கில சொற்கள் கலந்து தமிழை கொச்சப்படுத்தியுள்ளது” என உணர்ச்சிவசப்படக்கூடும். ஆங்கிலத்திற்கு பதில் இந்தி வந்திருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். என்ன “ஹலோ சங்கர் சார் எப்படி இருக்கீங்க” என்பதற்கு பதில் “ஹரே சங்கர் ஜீ எப்படி இருக்கீங்க” என்று இருந்திருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். மொழியை பாதுகாக்க இந்த பிரச்சனைக்கான காரணம் எங்குள்ளது என்பதனை கண்டு சரிசெய்ய வேண்டும்.
அன்றும் அண்ணாதுரை அவர்கள் நம்மை இந்தி கற்க வேண்டாம் என்று கூறவில்லை. பள்ளிகூடத்தில் திணிக்காதீர்கள் என்று தான் கூறினார்.
4. இந்தி மொழியை கற்றால் இந்தியாவில் எல்லோரிடமும் பேசிப்பழகலாம். ஒரு இணைப்பு மொழியாக இந்தி இருக்குமே?
1963ல் மாநிலங்களவையில் இந்த கேள்விக்கு பதிலலித்த அண்ணாதுரை அவர்கள் அங்கிருந்தவர்களுக்கு புரியும்படி நாய் கதை ஒன்றை சொன்னார்.
Here is a short story he told to drive home the irrationality of arguments for making Hindi the link language of India.) "A man had two dogs - a big one and a small one. He wanted his dogs to go in and out of the house freely without him having to keep the house door open all the time. So he built two "trap doors" - one big trap door for the big dog and one small for the small dog. Neighbors who saw these two doors laughed at him and called him an idiot. Why put a big door and a small door? All that was needed was the big door. Both the big and the small dog could use it!
Indian government's arguments for making Hindi the official or link language of India are as ridiculous as the need for a big door and a small door for the big dog and the small dog. Indian government agrees that English is needed for communication with the world, and every school in India teaches English after the fifth grade. Then the Indian government says that all of us should know Hindi also in order to communicate amongst ourselves within India. I ask, "Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India?
Do we need a big door for the big dog and a small door for the small dog?
I say, let the small dog use the big door too!"
“ஒரு பெரிய நாய் மற்றும் ஒரு குட்டி நாயை வளர்த்த ஒருவன் தனக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க அது போய்வர பெரிய நாய்க்கு வசதியாக பெரிய அளவில் கதவையும் சின்ன நாய்க்கு ஏற்றார்போல் சிறிய அளவில் கதவையும் வைத்தார். சுற்றத்தினர் அவரைப் பார்த்து கேலி, கிண்டல் செய்தனர். முட்டாளே, பெரிய நாய் போய் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கதவு வழியாகவே சின்ன நாயும் போய் வர முடியுமே எதற்கு சின்ன நாய்க்கு தனியாக ஒரு வழி வைத்தாய் என ஏலனம் செய்தனர்.
அதுபோல ஆங்கிலம் உலக மொழியாக இருக்க அனைத்து மாநிலங்களிலும் பாடதிட்டத்தில் ஆங்கிலம் கற்க வேண்டும் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் ஆங்கிலம் கற்கும் நிலையில் தன் சொந்த மாநிலத்திலிருந்து வெளியில் வந்தால் ஆங்கிலத்திலேயே பேசிவிட்டுப் போகலாமே! ஏன் தனியாக இந்தியாவில் இருப்பவர்களுடன் பேச தனி மொழியாக இந்தியும் வெளியுலகத்தினருடன் பேச தனி மொழியாக ஆங்கிலமும்” என்றார் அண்ணா.
இந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டும் என திணிப்பவர்கள் “இதுபோன்ற அடிப்படையில்லாத கேள்விகளைக் கேட்கக்கூடாது” என்பதை உணர்த்த அருமையான எடுத்துக்காட்டை மாநிலங்களவையி்ல் பதிலாக வைத்தார். அண்ணாவின் இந்த பேச்சின் முடிவில் பலத்த கைத்தட்டல்கள் எழுந்தது என்பது பதிவு.
5. இந்தி மொழியை கற்காததால்தான் நம்மிடம் நாட்டுப்பற்றே இல்லை என மற்ற மாநிலத்தார் எண்ணுகிறார்கள். இந்தியைக் கற்றால் அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் விளங்கும்.
இதுவும் ஒரு கோயபல்ஸ் பொய் பிரச்சாரம். இந்தியை தாய் மொழியாக கொண்ட உ.பி, பிஹார், தில்லி போன்ற மாநிலங்களைத் தவிர்த்து கிழக்கே வங்கம், அஸாம், வடக்கே பஞ்சாப், மேற்கே குஜராத், மராட்டியம் தெற்கே ஆந்திரத்தில் என எந்த மாநிலத்தில் இருக்கும் படித்தவர்களைக் கேட்டு பாருங்கள் அவர்கள் இது போன்றதோர் கருத்தை சொல்லமாட்டார்கள். மாறாக மொழி போரில் தமிழகம் எடுத்த கொள்கை முடிவுக்கு பாராட்டே கூறுவர்.
இந்தி தெரிந்தவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகம். தெரியாதோர்க்கு அது கொஞ்சம் குறைவு என சொல்லப்படும் கூற்று எந்த அளவீட்டை வைத்து வரையறுக்கப்படுகிறது என தெரியவில்லை. திராவிடஸ்தான் பிரிவினை இந்திய - சீனா போருக்கு முன் கேட்க்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் கைவிடப்பட்டபின் அதுமாதிரியான கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுவதாக தெரியவில்லை.
நாங்காவது ஈழப்ப்போரில் இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்கள் வன்மத்தை தீர்க்க 40,000 தமிழர்களின் பலிக்கு துணை போக உணர்ச்சிமிகுதியில் வெகு சில சிறிய அளவிலான இயக்கங்களால் பிரிவினை கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்த தமிழகம் என்றும் பிரிவினை கோரிக்கையை ஆதரித்தது இல்லை. வெளிநாடு வாழ் சீக்கியர்களின் தலைப்பாகை பிரச்ச்னைக்காக நம் நாட்டின் பிரதமரே நேரடியாக களத்தில் இறங்கி பதிலலிக்கும் அதே சூழலில் மத்திய ஆட்சியாளர்களின் இயலாமையால் கடந்த 15 ஆண்டுகளின் ஒன்று, இரண்டு, ஐந்து என சிறுகசிறுக 400க்கும் மேலான தமிழக மீனவர்கள் அயல் நாட்டினரால் கொல்லப்பட்டிருந்தாலும் சுற்றியிருக்கும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதில்லையென கொள்கை முடிவெடுததிருந்தாலும் அதைக்கண்டு பிரதமரோ அல்லது மத்திய அரசோ எந்தவிதமான நடவடி்கையும் எடுக்காத சூழலில் கூட நாம் இந்திய நாட்டு மக்கள் என்ற வகையில் பொறுமைகாத்து நாட்டுபற்றுடன்தான் இருக்கிறோம்.
சரி ஒரு வாதத்துக்கு இந்தி தெரியாததால் தமிழர்களுக்கு நாட்டுப்பற்று குறைவு என்றே வைத்துக்கொள்வோம். தமிழகத்தைக் கடந்துவிட்டால் அனைவருக்கும் இந்தி தெரியும் என சொல்கிறார்களே அப்படியானால் தமிழகத்தைத் தவிர்த்து எல்லோரும் ஒற்றுமையுடன் தான் விளங்குகிறார்களா? மராட்டியர்களுக்கும் பிஹாரிக்கும் பிரச்சனை வரவில்லையா? அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளில் என்ன வளர்ச்சி பணிகளை மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர்? அந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாவது தங்களை இந்தியர்கள் என்று உள்ளுணர்ந்து அடையாளப்படுத்திக்கொள்கிறார்களா? வடக்கே பஞ்சாபியர்களின் நிலையும் இதுதான். இந்தி மொழி தெரிந்தால்தான் நாட்டுப்பற்று உருவாகும் என்னும் கூற்று இன்னும் இந்தி மட்டுமே தெரிந்த சில மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் பரப்பும் கோயபல்ஸ் பொய்கள்.
சுதந்திரம் பெற்று இந்த 63 வருடங்களில் என்றாவது ஒரு நாளாவது அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அங்கு மனித உரிமை பாதிக்கப்படுகிறதே என்று கேட்டதுண்டா? மாறாக சில மாநில முதல்வர்கள் “நாங்கள் ஈட்டும் பணத்தை நலிந்த மாநிலங்களுடன் ஏன் பங்கிடவேண்டும்” என கேட்ட வரலாறே உண்டு. பொதுவான ஒரு மொழியைவைத்து 120 கோடி பேருக்கு ஒற்றுமை கற்று தந்துவிடலாம் என்பது வெறும் நகைப்புக்குறிய கூற்று. இந்தியாவின் வளர்ச்சியிலோ அல்லது நெருக்கடியான காலகட்டத்திலோ தமிழகத்தின் பங்கை இங்கே புள்ளிவிபரங்களுடன் சுட்டிகாட்டி நமது நாட்டுப்பற்றை பறைசாற்றிக்கொள்ளத் தேவையில்லை.
இந்தியாவில் இந்தியைத் திணிக்க முயலும் முட்டாள்கள் தமிழர்களுக்கு நாட்டுப்பற்று இல்லை என்ற பொய்யை ஆங்காங்கே அவிழ்ப்பது இயல்பே. முதிர்ந்த அறிவோடு அவதூறுகளையும் அதைப் பரப்புபவர்களையும் கடப்போம்.
6. நான் வடநாட்டுக்கு போயிருந்தேன் அங்கு இந்தி தெரியாமல் திண்டாடிவிட்டேன்.
உலகமயமாக்கலுக்கு முன் வியாபார நிமித்தமாக பம்பாயோ அல்லது தில்லியோ சென்றவர்கள் இதுபோல் கூறியிருப்பார்களேயானால் அதில் சிறு அடிப்படை இருக்கிறது. ஆனால் இப்போது வேலை நிமித்தமாக அதிகமாக வெளிமாநிலங்களுக்கு செல்பவர்கள் கணிப்பொறி பொறியாளர்கள் தான். அவர்களின் இணைப்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். வெளியே டீ கடை செல்லும்போதோ அல்லது சாப்பிட ஓட்டலுக்கு செல்லும்போதோதான் இது போன்ற இந்தி பறிமாற்றம் இருக்கும். இன்றைய சூழலில் அடிப்படை ஆங்கிலத்தை வைத்து ஆட்டோ ஏறினாலோ அல்லது பேருந்து பயணத்தையோ சமாலித்துவிட முடியும்தான்.
இந்தியாவில் உள்ள பள்ளிக்கல்வியில் அனைவருக்கும் ஆங்கிலம் கட்டாயம் என்னும் போதும், தகவல் தொழில்நுட்பத்தின் சமீபத்திய அபார வளர்ச்சியினாலும் இது வெகு விரைவில் தீரும். இதற்காக நாட்டில் உள்ள 115 கோடி பேர் இந்தி என்ற மொழியைக் கற்றால்தான் ஆயிற்று என்பது வீன்விதண்டாவாதம். “நான் வடநாட்டுக்கு போயிருந்தேன், இந்தி தெரியாமல் திண்டாடிவிட்டேன்” என சொல்பவர்கள் ஒரு மாநிலத்திலிருந்து சாஃப்ட்வேர் மக்களைத் தவிர்த்து எத்தனை பேர் வடநாட்டுக்கு செல்கிறார்கள்? ஒரு சதவீதம் தாண்டினாலே அது பெரிய விஷயம். தன் வாழ் நாளில் எப்போதோ ஓரீரு முறை வெளிமாநிலங்களுக்கு செல்லும் ஒரு சதவீதத்தாருக்காக ஒட்டுமொத்த நாடே இந்தி மொழியை கற்க வேண்டும் என சொல்வது அறிவிலாரின் கூற்றே.
7. ஒரு மொழியை கற்றுக்கொள்வதை வேண்டாம் என்று யாரும் தடுக்கக்கூடாது. ஆங்கிலம், தாய் மொழியுடன் சேர்த்து மும்மொழிக் கொள்கையை ஏற்பது தவறில்லை. பல்வேறு மொழிகளை வைத்துவிட்டு மக்களுக்கு எது தேவையோ அதை தேர்வுசெய்துகொள்ளட்டும்.
நாம் முன்வைக்கும் எந்த விளக்கத்துக்கும் பதிலலிக்கமுடியாதோர் கடைசியில் சரணாகதியாவது இந்த இடத்தில் தான். இந்திய மக்கள் மூன்றாவது மொழி கற்பதில் தவறில்லையே என வாதிடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். மொழி என்பது கருத்தை பறிமாறிக்கொள்ள பயன்படுவது. எத்தனையோ நாடுகளில் ஒரு மொழி மட்டுமே தெரிந்தவர்கள் ஏராளம் இருக்கின்றனர். இரண்டாவதாக ஒரு மொழி தெரிந்தாலே பெருமையாக நினைப்பவர்கள் ஏராளம். ஒரு மனிதன் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் தவறில்லை. ஆனால் கண்டிப்பாக மூன்று மொழி கற்றுக்கொள்ளவேண்டும் என வற்புறுத்துவது ஏன்? எந்த அடிப்படையில் இதை முடிவு செய்கிறீர்கள்? அது என்ன 3 ராசியான நம்பரா?
அதுவும் தமிழகத்தில் மூன்று மொழியை கட்டாயம் மாணவர்கள் கற்க வேண்டும் என வாதிடுவோர் இந்தி மொழியை எதாவது ஒரு வழியில் தமிழகத்தில் திணித்துவிடலாம் என உள்மனதில் நினைப்பவர்களே. “ஜெர்மனி, ஃப்ரென்ச், ஜப்பான், சீனா, இந்தி, ஒரியா, சிங்களம், ரஷ்யா, ஸ்பானிஷ் என நிறைய கொடுப்போம். இவற்றில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளட்டும்” என சிலர் கூறுகிறார்கள். ஏற்கனவே நாம் பார்த்தது போல் ஆங்கிலேயனின் அடிமைப்படுத்தும் ஆட்சி முடிய மத்திய பகுதியில் இருந்த இந்தி மட்டுமே பேச தெரிந்த மாகணம் எப்படி வெள்ளையன் கொடுத்த ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும், நாட்டில் பலருக்கும் தெரியாத இந்தி மொழியை ஆட்சிமொழி ஆக்கவேண்டும் என எப்படி சற்றும் சிந்திக்காமல் உணர்ச்சிவசப்பட்டார்களோ அதே போல் கடந்த நாற்பது வருட திராவிட கட்சிகளின் ஆட்சியைப் பார்த்து தமிழர்கள் கோபத்தின் உச்சியில் உள்ளனர். திராவிட கட்சிகளும் வேண்டாம், அவர்கள் கொண்டு வந்த “இந்தி (திணிப்பு) எதிர்ப்பும்” வேண்டாம் என உணர்ச்சிவசப்பட்டுள்ளனர். 40 வருடங்கள் போடப்பட்டுள்ள அணையை திறந்து 1000 மொழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள் என சொன்னால் கூட அனைவரும் இந்தி என்னும் மாயைக்குள்தான் போய் விழுவர். இது காக்கையின் வாயில் இருக்கும் வடை எப்போது விழும் என காத்துக்கிடக்கும் நரிக்கு உகந்தது போல் முடியும்.
8. அப்படி என்ன உனக்கு இந்தி மொழி மீது இவ்வளவு கோபம்?
கோபம் கிடையாது இது. நான் ஜப்பானில் போய் வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானால் நான் ஜப்பான் மொழியை கற்பேன். பிரான்ஸ் செல்ல விருப்பப்பாட்டல் ஃப்ரென்ச் மொழியை கற்பேன். எனக்கு தேவையில்லாத ஒன்றை திணிக்காதே என்றுதான் சொல்கிறேன். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்தால் இக்கூற்று ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பல மொழிகளை, தேசியங்களைக் கொண்ட மிகப்பெரிய நாடு நம் இந்திய நாடு என்பதனை முதலில் அனைவரும் உணரவேண்டும்.
அரசியல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்து வைத்துள்ளதை நீக்கி தேவையான துறைகளான இராணுவம், வெளியுறவு, நாணயம், இரயில்வே, மாநிலங்களுக்கிடையேயான உறவவைப் பேணுதல் போன்றவற்றை மத்தியில் வைத்ததுக்கொண்டு மற்றவையை மாநிலங்களுக்கு அதிகாரத்தை பரவலாக்க வேண்டும். மாநிலத் தலைமையில் குவிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை மாவட்டத்துக்கும் மாவட்டத்தில் இருப்பததை பஞ்சாயத்துக்கும் அதிகாரத்ததை பரவலாக்கவேண்டும் என்ற கோரி்க்கை நிறைவேறினால் இன்று மத்திய அலுவல்களில் திணிக்கப்பட்டுள்ள இந்தியின் தேவையும் மறையும்.
மாறாக நடந்தால் மெதுமெதுவாக அனைத்து துறைகளிலும் இந்தி பரவும். இப்போதே மத்திய அரசின் ஆளுமைக்குட்பட்ட துறைகளில் கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி திணித்துள்ளனர். 15 அல்லது 20 வருடம் கழித்து அனைவருக்கும் இந்தி தெரிந்திருக்க மாநில அலுவலிலும் ஏன் இந்தி மொழியும் இருக்கக்கூடாது என கேள்வி எழுப்புவர். சுதந்திரத்தின் போது ஆங்கிலம் இருக்கும் இடத்தில் இந்தி இருக்க வேண்டும் என எப்படி நிர்பந்தித்தார்களோ, அது போல 20 அல்லது 30 வருடங்கள் கழித்து மாநில மொழிகளுக்கு பதில் இந்தி மொழி இருக்கட்டும் என சென்று முடியும். 300க்கும் மேற்பட்ட மொழிகளை பேசும் மக்களைக் கொண்டுள்ள இந்தியாவில் எப்படி புற்றுநோய்ப் போல பலரது தாய்மொழியை கபளீகரம் செய்துகொண்டுள்ளதோ அதே போல மும்மொழி கொள்கை பின்பற்றப்பட்டால் இன்னும் சில வருடங்களின் பெரும்பான்மையானவர்களின் தாய்மொழியாக மாறிவிடும்.
இதனால் தமிழுக்கு பாதகம் ஏதும் வராது. தமிழ் மொழி, அழித்தலுக்கு அப்பாற்பட்ட உலக மொழியாக மாறிவிட்டது. எப்படி இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு தமிழகத்தின் அன்றைய ‘இந்தி திணிப்பு எதிர்ப்பு’ ஒரு காரணியாக இருக்கிறதோ அதே போல் தொடர்ந்து திணிப்பை எதிர்ப்பதன் மூலம் நம் நாட்டில் உள்ள மற்ற மொழிகளையும் கப்பாற்றுகிறோம் என எண்ணத்தில் கொள்ளவேண்டும்.
கடந்த 50 வருடங்களில் தமிழர்களை ஈழநாட்டில் பலி கொடுக்க முழுமுதல் காரணமாக இருந்ததே சிங்கள ஆட்சியாளர்கள் சிங்கள மொழியை தமிழர்கள் மீது திணிக்க முற்பட்டதே. 1960களில் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து திமிறிய தமிழர்களில் இந்தி கற்றாக வேண்டும் என்பவர்களால் 300 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கையிலோ அது வெவ்வேறு ரூபத்தில் தொடர்ந்ததால் கடந்த 2009ல் கொல்லப்பட்ட 40,000 பேருடன் ஒட்டுமொத்தமாக இரண்டு இலடசம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் இருந்த ஆட்சியாளர்கள் கிழக்கு பாகிஸ்தானை அடிமைப்படுத்த நினைக்க முதலில் செய்தது வடக்கில் இருந்த பாகிஸ்தானியர்களின் மொழியை கிழக்கில் உள்ளவர்கள் மீது திணிக்க முற்பட்டதே. விளைவு. பாகிஸ்தானின் பிடியிலிருந்து வெளிவந்து வங்காளதேசம் எனும் தனி நாடு உருவானது.
இனி ஒருவன் இந்தி தெரியாததால் தமிழனுக்கு நாட்டுப்பற்று இல்லை என கூறினால் அவனின் பிரிவினைவாதத்துக்கு தூபம் போடும் கூற்றுக்கு செவிசாய்க்காமல் அறிவு முதிர்ச்சி கொண்டு சற்றும் அவனைப் பொருட்படுத்தாமல் கடந்து செல்லுங்கள்.
அறிஞர் அண்ணா அன்று கிளிப்பிள்ளைக்கு சொல்வதைப் போல அவ்வளவு அறிவு முதிர்ச்சி கொண்டு பக்குவமாக, ஆங்கலம் கற்றாகிவிட்டது மேலும் இந்தி மொழியும் வேண்டாம் என சொல்லிவிட்டுப்போனார். ஆனால் இந்த இந்தி மொழியை எப்படியாவது திணித்துவிட வேண்டும் என கங்கணம்கட்டிக்கொண்டு திரிபவர்களைக் கண்டால் பரிதாபம் கலந்த எரிச்சல் தான் மேலோங்குகிறது.
இனி ஒருமுறை ‘என்.டி.டி.வி’ செய்தி சேனலின் பர்க்கா தத் அவர்களோ அல்லது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபில் அவர்களோ மீண்டும் மீண்டும் வந்து “நம் தேசிய மொழி இந்தியை கற்றுக்கொள், நாட்டுப்பற்று உசந்துவிடும் இந்தி கற்றுக்கொள், ‘சி.பி.எஸ்.சி.’ பாடத்திட்டம் உலகத்தரம் வாய்ந்தது இந்தி கற்றுக்கொள், தமிழ்நாடு தவிர்த்து நவோதையா திட்டத்தில் பள்ளிகள் திறந்த அனைத்து மாநிலங்களும் அமெரிக்கா, சீனாவை ‘ஜி.டி.பி.’யில் சில நாட்களில் கடந்துவிடும். தமிழகமும் அந்த வளர்ச்சியில் இணைய இந்தி கற்றுக்கொள்” என நச்சரித்தால் “முதலில் நாடு முன்னேற, மனிதகுல மேம்பாட்டிற்கு அடித்தளமாக இருக்கும் ஆராய்ச்சிக்கான அறிவியலை கற்போம், நாட்டில் உள்ள அடிப்படை சட்டங்களை கற்போம் பின் நேரமிருந்தால் ஒருவரிடம் பேசி பழக மட்டுமே மூன்றாவது மொழி நாங்காவது மொழி ஐந்தாவது மொழி என தொடர்ந்து உங்கள் ஆசை தீர கற்போம்” என உணர்ச்சிவசப்படாமல், கோபப்படாமல் சொல்லுங்கள்.
Tuesday, August 31, 2010
Wednesday, August 11, 2010
சிந்தனா சக்தி சிதைந்த சித்தாந்தவாதிகள் - மார்க்சிஸ்ட் (இ)
சமீபத்தில் இலங்கையில் நடந்து முடிந்த நான்காவது ஈழப்போரில் இலங்கை அரசு தன்னுடைய சொந்த மக்கள் மீதே பாதுகாப்பு பகுதியில் கொத்து குண்டுகள் வீசியும் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியும் பொதுமக்களைக் கொன்றதில் இருக்கும் மனித உரிமை மீரல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என சில நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது கம்யூனிஸ கியூபா நாடு, இராஜபக்சேவுக்கு எதிராக எந்த விசாரனையும் நடத்தக்கூடாது என சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு ஆதரவாக குரல்கொடுத்தது. அடக்குமுறைக்கு அடிபனியாமல் போராட்டம் மூலம் புரட்சி செய்த காஸ்ட்ரோவின் கியூபா எப்படி இராஜபக்சேவுக்கு ஆதரவாக என ஒரே குழப்பம்.! சரி நம்ம ஊர்ல இருக்கும் மார்க்சிஸ்டுகள் நிலைப்பாடு என்ன என ஆராய்ந்து பார்த்ததில்......
ஈழத் தமிழர்கள் பிரிவினைவாதிகளா, வன்முறையாளர்களா என சிந்தித்து பார்த்தால் அவர்களின் கோரிக்கைகள் (அதுவும் பிரிவினைக் கோரிக்கை கிடையாது) காந்திய வழியிலேயே துவங்கியுள்ளாது. தங்கள் மீது வன்முறை ஏவப்பட ஒரு கட்டத்தில் தனிநாடு கோரிக்கையாக மாற்றம் பெற்று தற்காப்புக்கு ஆயுதம் தரித்தவர்களாகவே வரலாறு உணர்த்துகிறது. ஏன் நம்ம தா.பாண்டியன் அவர்கள் கூட கம்யூனிஸ்ட் தோழர்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தாக்கப்படுகிறார்கள் என்பதனைக் கண்டு ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து “தோழர்கள் அனைவரும் தற்காப்புக்காக பையில் ஒரு கத்தி வைத்துக்கொள்ளுங்கள்” என அறிக்கை கூட விட்டிருக்கிறார்.
ஒருவேளை தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராஜிவ் காந்தியை புலிகள் கொன்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே அந்த கோபம் இருக்குமா என்றால் நாட்டைவிட கொள்கைகப் பற்றே அதிகமுள்ளவர்கள் மார்க்சிஸ்டுகள். தன் நாட்டின் மீது அண்டை நாடான சீனா படை எடுத்து வந்த சமயத்தில் கூட சீனா ஒரு கம்யூனிச நாடு என்ற காரணத்தினால் தன் சொந்த நாட்டை எதிர்த்தே குரல் கொடுத்தவர்கள். ஆக இராஜிவ் குற்றச்சாட்டும் கிடையாது.
இராஜபக்சே தோளில் சிகப்புத் துண்டு போட்டிருப்பதால் இருக்குமோ? ச்ச ச்ச.
அப்படியென்றால் அடுத்த நாட்டு பிரச்சனை நமக்கென்ன என நினைத்துவிட்டார்களா? அதுவும் கிடையாது ஏனென்றால் முதலில் கூறியதைப் போன்று மார்க்சிஸ்டுகளுக்கு நாட்டின் எல்லைக் கோட்டின் மீது நம்பிக்கை கிடையாது.
கம்யூனிஸ்டுகள் வஞ்சகர்களாக இருப்பார்களோ என சிந்திக்கும் நொடிப்பொழுதிலேயே பொட்டிற் அரைந்தார் போல் இல்லவே இல்லை. ஒரு சமூகத்தில் உழைப்பவனுக்காக, சிறுபான்மையினருக்காக, அடித்தட்டில் இருப்பவனுக்காக தெருவில் இறங்கி (உண்மைத்தன்மையுடன்) போராட்டம் செய்யும் சுயநலமில்லா சுத்தமானவர்கள்(ஓரளவிற்கு) என்பது தெளிவாக தெரிகிறது.
* பிரச்சனை என வந்த போது ஏகாதிபத்திய நாடுகளைத்தான் நாடினர்.
* ஈழப் போராளிகள், மேல்-சாதி கீழ்-சாதி என சாதிப் பிரிவினைவாதிகள்.
* விடுதலைப் புலிகள் அங்கிருந்த சிறுபான்மை இஸ்லாமியர்களை விரட்டினர்.
இலங்கைத் தீவில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களை சிங்களர்கள் இன அழிப்பு செய்து கொண்டிருக்க அருகில் இருந்த இந்திய நாட்டின் பிரதமர் இந்திரா காந்தி இருக்கும்வரை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். பிறகு வந்த ராஜிவ் காந்தி ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஆழ்ந்து ஆராயாமல் எடுத்த முடிவுகளால் இரு தரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட ஈழத்தமிழர்கள் இந்தியாவின் உதவியை நாடமுடியாமல் போனது.
உலகின் எந்த மூலையிலும் நடக்கும் அரசியலுக்கும் இப்போதிருக்கும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளுமே சூத்திரம் வகுத்துக்கொண்டிருக்கிறது. சீனா மதரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சிங்கள இனவாதத்துடன் கைகோர்த்திருக்க, சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவில் இருக்கும் கம்யூனிஸ நாடுகள் அதுவும் வல்லரசுகள் செய்யும் அரசியல் சூத்திரத்தில் நேரெதிராக பங்கு பெறாத ஆனால் அவர்களுக்கு எதிர்மறை கொள்கையைக் கொண்ட கியூபா, வியட்நாம், லாவோஸ் போன்ற நாடுகளை ஏன் விடுதலைப்புலிகள் நாடவில்லை என குற்றம்சாட்ட முடியுமா? அப்படி நாடியிருந்தால் வல்லரசு நாடுகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிந்திருக்க மாட்டார்களா? (இப்போதும் அதைத் தான் செய்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.)
விடுதலைப் புலிகள் எது செய்தாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும் என்ற நோக்கில் சிந்திப்பது இல்லை நமது பணி. அறிவியல் உண்மைகளுக்கு துளியும் சம்மந்தமில்லா சாதி மத வேறுபாடு மணிதர்களுக்குள் கடைபிடிப்பது கொடியது என்பதை மறுப்பதற்கில்லை. உலகின் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு உருவத்தில் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் கடைபிடிக்கப்படுகிறது. இது மாறாமல் ஒரு உன்னதசமுதாயம் அமைக்கமுடியாது என்பதும் உண்மைதான். அப்படி ஒரு வேறுபாட்டினை போராளிகள் கடைபிடித்தது உண்மை என்றால் அது தவறே.
உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி திட்டமிட்டு நடத்திய நான்காம் ஈழப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். உண்மையை உள்ளபடியே கூறவேண்டுமானால் போரின் உக்கிரத்தை குறைக்க தமிழகத்தில் மூன்று பேருக்கு வாய்ப்பு இருந்தது. ஒன்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு இன்னொன்று தேமுதிக விஜயகாந்திற்கு மற்றொன்று இந்தியாவில் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக தெருவில் இறங்கி இன்றும் சலைக்காமல் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு.
எல்லாம் முடிந்தபின்பு இறுதியாக “சிங்கள ஆட்சியாளர்களின் மனம் புன்படக்கூடாது உடன்பிறப்பே, சகோதரச் சண்டையால் எத்தனை ஆயிரம் உயிர் பலி பார்த்தீர்களா உடன்பிறப்பே, அது மட்டும் இல்லை உடன்பிறப்பே, 2006ல் நடைபெற்ற இலங்கைத் தேர்தலில் ரணிலுக்கு வாக்களித்திருந்தால் இத்தனை ஆயிரம் உயிர்கள் போயிருக்காது உடன்பிறப்பே” என நியூட்டனே வெட்க்கப்படும் அளவிற்கு தனது கண்டுபிடிப்பின் தீஸிஸை உலகின் பார்வைக்கு சமர்ப்பித்து ஒப்பாரி வைத்தார். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.
Subscribe to:
Posts (Atom)