இந்தியாவிலேயே ஏன்? உலகத்திலேயே கூடத் தொடர்ந்து போட்டியிட்ட 11 தேர்தலிலும் வெற்றி பெற்ற அரசியல்வாதி நம்முடைய முதலமைச்சர் மு. கருணாநிதியாகத்தான் இருக்கக் கூடும். ஆனால் அவருடைய அரசியல் வாழ்க்கையின் சாதனையாக மாற்றவர்கள் குறிப்பிடுவது, அவரின் தனிப்பட்ட தேர்தல் வெற்றியை விட, அவருடைய அரசியல் ராஜதந்திரத்தைதான்.
அண்ணாவின் மறைவிற்குப்பின், தி.மு.க.வின் மிகப் பெரிய தலைவர்களைப் பின்தள்ளி, எம்.ஜி.ஆர். என்னும் ஏணியை வைத்து, முதல்வரானதில் துவங்கி, எம்.ஜி.ஆர். ஆண்ட 10௦ வருடங்களும், தி.மு.க.வைக் கட்டுக்கோப்பாக வைத்து, பின் ஆட்சிக்கு வந்தது, எந்தவொரு சிறு கட்சியானாலும், அதை பலவீனப்படுத்த அக்கட்ச்சிக்குள்லேயே பிளவு ஏற்ப்படுத்துவது, குறிப்பாக 1996 இல் தேசிய கட்சியான காங்கிரசையே உடைத்து, மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் (த.மா.கா.) ஏற்பட வழிசெய்து, உடன் சேர்ந்து அரசியலில் நுழையவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவை மட்டும் பெற்று ஆட்சிக்கு வந்தது, பின்னாளில் தன் மகனின் அரசியல் வாழ்வில் தடையாக இருக்கக் கூடும் எனக் கருதி, வைகோ வை வெளியேற்றியது, அக்கட்சியின் நான்கில் இரண்டு எம்.பி.களை தன் பக்கம் இழுத்தது, மத்தியில் தி.மு.க.விற்கு அதிக அமைச்சர்களைப் பெற்றது, முக்கியத் துறைகளைப் பெற்று மத்தியில் எப்போதுமே ஆளும்கட்சியாகவே இருப்பது........ என சொல்லிக் கொண்டே போகலாம்.
இதுபோன்ற அரசியல் நடவடிக்கைகள், தந்திரங்கள் சில சூழல்களில் சுயநல அரசியலாகக் கூடத் தெரியலாம். தமிழ் மக்கள் சில விஷயங்களில் அவருடைய ராஜதந்திரத்தைக் கண்டு பாராட்டியும், சில இடங்களில் ஏசியும் வருகின்றனர். எது எப்படியோ, அவர் ஈழத்தமிழர்களின் இக்கட்டான சமயத்தில் எடுத்துவந்த, எடுத்துவருகிற நிலைப்பாட்டைக் காணப் பொறுக்கவில்லை. அது இக்கட்டான எண்பதுகளில் சரி, இனம் அழியும் விளிம்பின் இச்சமத்திலும் சரி.
இப்போது ஆயுதப் போராட்டம் நடத்தும் போராளிகளை எதிர்க்க அவர் கூறும் மிக முக்கியமான காரணம், 'புலிகள், சகோதரச் சண்டையில் சக தமிழ் இயக்கங்களை, அரவணைக்க மறுத்து அழித்துதான்' என்ற குற்றச்சாட்டு.
சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் அங்கிருந்தனர் என்பதற்குச் சான்றாக இருந்த ஓலைச்சுவடிகள், ஈழத்தமிழர்களின் இலக்கியங்கள் போன்றவற்றைத் தாங்கி நின்ற யாழ் நூலக எரிப்பில் தொடங்கி, 'தமிழன் கறி இவ்விடத்தில் கிடைக்கும்' என்ற பலகை ஏந்தி நின்ற சிங்களவர்களின் கடைகளைத் தொடர்ந்து, கொதிக்கும் தாரில் குழந்தையை முக்கி எடுக்கும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் பலர்..... அவர்கள் குழுவாக சேரும்போது, மிக முக்கியமாகக் கருதப்பட்டது ஐந்து குழுக்கள். EPRLF, EROS, PLOT, LTTE, TELO என்பவையே அந்த ஐந்து குழுக்கள். ஒன்றிணைந்து போராட வேண்டியவர்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிந்தது, ஈழத் தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பகுதி.
1984ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். முதலைமச்சராக இருந்தபோது, துவக்கத்தில் அதிக அக்கறையில்லாமல் இருந்தாலும், காலப் போக்கில், ஈழத்தில் நடக்கும் கொடுமைகளைக் கேட்டறிந்து, அதைத் தீர்க்க வேண்டும் எனக் கருதி, அப்போதைய பிரதமர் இந்திராவுடன் சேர்ந்து, போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க வழி செய்தார். அவர்களிடமிருந்த சகோதரச் சண்டையை முடிவிற்கு கொண்டு வர எத்தனித்து, ஐந்து குழுக்களையும் சந்திக்கத் தேதி குறித்து, இராமாவரம் தோட்டத்திற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். ஒருவேளை, எம்.ஜி.ஆர். தலைமையில் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்து, சகோதரச் சண்டை முடிவுற்றிருந்தால், இந்நேரம் ஈழத்தமிழர்களின் போக்கு வேறு மாதிரியாக இருந்திருக்கக்கூடும்.
நாற்பது தொகுதிகளையும் ஓரனிக்கு வழங்கிவிட்டு "கிளஸ்டர் குண்டு மழையிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என்று இன்றைய அரசியல்வாதிகளிடம் மண்டியிட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஊனமுற்றோரில் தொடங்கி, ஜெயில் கைதிகள், திருநங்கைகள் என எல்லோரும் உண்ணவிரதப் போராட்டம் நடத்தியிருக்க வேண்டியதில்லை ; திலீபனும் மடிந்திருக்க வேண்டியதில்லை, முத்துகுமாரும் அவருடைய எழுத்தாற்றலுக்கு ஏற்ற துறையில் முத்திரை பதித்திருக்கக்கூடும்; தமிழருவி மணியனும் காங்கிரசிலிருந்து விலகத் தேவையிருந்திருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்திய அமைதிப்படை 1987ஆம் ஆண்டு, ஈழத்தில் இருந்த சமயத்தில் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பும் ஏற்ப்பட்டிருக்காது. பாலியல் வன்முறையும் நிகழ்ந்திருக்காது.
ஆனால், முதல்வர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த சமாதானத்திற்கான நிகழ்வு நினைத்தபடி நடக்கவில்லை. தமிழக முதல்வராயிருந்த எம்.ஜி.ஆர். ஒரு தேதி குறித்து, அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் எதிர்கட்சியாக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, முதல்வர் குறிப்பிட்ட தேதிக்கு முன் தினமே, அனைவரும் தன்னை வந்து பார்க்கும்படி அறிவிப்பு வெளியிட்டார். இந்த செயலை, அரசியல் ராஜதந்திரம் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால், அதைச் செய்தார். உடன் போராளிக் குழுக்களிடம் குழப்பம் ஏற்பட்டு, யார் அழைப்பை ஏற்று செல்வது என்று புரியாமல் சிதறினர். EPRLF, EROS, TELO ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தனர். LTTE, PLOTE ஆகிய இரு குழுவினரும் கருணாநிதியின் அழைப்பைத் தவிர்த்து முறைப்படி முதல்வரைச் சந்தித்தனர். முக்கியமாக, சிறி சபாரத்தினம், பத்மநாபா ஆகியோர் கருணாநிதியுடன் நெருக்கமாயினர். பிரபாகரன் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நெருக்கமானார்.
எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழரின் துயர் துடைக்க, அன்றும் நிதி சேகரித்தார். (ஒரு குழுவிற்கு ரூ.50,000 வீதம் ஐந்து குழுவிற்கும் ரூ.2,50,000) அதை வாங்கினால் முதல்வரிடம் நிதி கோர முடியாது எனக் கருதிய பிரபாகரன், கருணாநிதி கொடுத்த ரூ. 50,000ஐ வேண்டாம் எனத் தெரிவித்தார். இதன் பலனாக புனரமைப்புப் பணிகளுக்கும், ஆயுதம் வாங்கவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து ரூ. 2 கோடியை முதல் தவணையாகப் பெற்றார். புலிகள் இயக்கம் வலுவடைந்தது. சகோதரச் சண்டையில் சபாரத்தினமும், பத்மநாபாவும் புலிகளால் கொல்லப்பட்டனர். அந்த கொலைகளில் உள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி பேசுவதை இப்போதைக்கு தவிர்ப்போம்.
தி.மு.க. தலைவர் கொடுத்த நிதியை, மற்ற இயக்கங்கள் பெற்றுக் கொண்டது போன்று, பிரபாகரன் பெறவில்லை என்பதாலும், தன்னுடன் நெருக்கத்தில் - ஆதரவிலிருந்த சபாரத்தினம் கொல்லப்பட்டார் என்பதாலும், புலிகள் மீது ஏற்பட்ட கசப்புத் தன்மை, கருணாநிதிக்கு இன்று வரை அகலாமல் இருப்பதை அவருடைய தற்போதைய அறிக்கைகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. சகோதரச் சண்டையை முடித்து வைக்கும் விதமாக அன்றைய முதல்வர், எம்.ஜி.ஆர். எடுத்த முயற்ச்சியை, அரசியல் ராஜதந்திரம் என்ற பெயரில் தடுக்காமல் இருந்திருந்தால் வரலாறு வேறு விதமாக பயணித்திருக்கும். அன்று எதிர் கட்சியாக இருந்து செய்த செயலை, இன்று ஆளுங்கட்ச்சியாக இருந்து செய்து வருகிறார் முதல்வர் கருணாநிதி.
தமிழகத்தில் 1983, 1987 க்கு பிறகான தற்போதைய எழுச்சிக் குரல்கள் பல மாதங்களாகத் தனித்தனியே ஒலித்துக் கொண்டிருந்தன. அவற்றை ஒன்றிணைக்கும் முயற்சியாக, திரு பழ.நெடுமாறன் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவானது. அப்போதைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தாலும், மத்தியில் திருமதி இந்திராவினுடைய ஆதரவு தமிழரின்பால் இருந்ததால், சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது. ஆனால், இன்றோ மத்தியில் காங்கிரசுடன் தர்மசங்கடமான சூழலில் சிக்குண்டிருக்கும் இச்சமத்தில், நாளொன்றிற்கு நூற்றுக்கணக்கான தமிழர்கள் மடிந்து கொண்டிருக்கும் இந்த இன அழித்தலின் விளிம்பிலும், நியாயமாக 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை', தலைமையேற்று நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரித்து, இயக்கி இருந்திருக்க வேண்டும்.
ஆனால், ராஜதந்திரம் என்ற பெயரில், இயக்கத்திற்குப் போட்டியாக 'இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை' ஒன்றினை ஆரம்பித்து, மக்களை ஏதோ ஓரிடத்தில் சேர்ந்து போராட விடாமல், குழப்புவது, பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகமே. இயக்கம் மனு கொடுத்தால் இரண்டொரு நாட்களில் பேரவை மனு கொடுப்பது, இயக்கம் மனித சங்கலி நடத்தினால் அடுத்த இரண்டு நாட்களில், பேரவையின் சார்பில் தானும் மனித சங்கிலி நடத்துவது.... இவையெல்லாம் பொது மக்களிடத்தில் உறுதியாக கருணாநிதி அவர்களுக்கு நல்ல பெயர் பெற்றுத் தராது.
இறுதியாக, ஈழ வரலாற்றுப் புத்தகத்தில் நிச்சயமாக கருணாநிதி அவர்களுக்கு ஓர் இடமுண்டு. அது எம்.ஜி.ஆர். இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா அல்லது கருணா இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா என்பதைக் காலம் தான் நமக்கு உணர்த்தும்.
- S.D. பிரபாகர்
நல்ல கட்டுரை/அலசல்....
ReplyDeleteவாழ்த்துக்கள் பிரபாகர் !!!
//ஆனால் அவருடைய அரசியல் வாழ்க்கையின் சாதனையாக மாற்றவர்கள் குறிப்பிடுவது, அவரின் தனிப்பட்ட தேர்தல் வெற்றியை விட, அவருடைய அரசியல் ராஜதந்திரத்தைதான்.//
இதன் பெயர் ராஜதந்திரம் அல்ல... அரசியல் அயோக்கியத்தனம்...
// இவையெல்லாம் பொது மக்களிடத்தில் உறுதியாக கருணாநிதி அவர்களுக்கு நல்ல பெயர் பெற்றுத் தராது.//
திமுக வை முழுவதும் திருக்குவளையிலிருந்து வந்த கும்பலின் முன்னேற்றக் கழகமாய் மாற்றிய பின் மக்களிடம் நல்ல பெயர் இனியும் எதற்கு??? அந்த கோமாளிகளுக்குத் தான் மாராட மயிராட போன்ற நிகழ்சிகள் இருக்கின்றனவே???
//ஈழ வரலாற்றுப் புத்தகத்தில் நிச்சயமாக கருணாநிதி அவர்களுக்கு ஓர் இடமுண்டு. அது எம்.ஜி.ஆர். இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா அல்லது கருணா இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா என்பதைக் காலம் தான் நமக்கு உணர்த்தும்.//
தமிழனத்தின் ஒப்பற்ற கோடாரிக் காம்பிற்கு என்ன இடம் இருக்கும் என்பது இந்த சாண'ந'க்கியணுக்கு நன்றாகவே தெரியும்....
//அது எம்.ஜி.ஆர். இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா அல்லது கருணா இடம்பெற்றிருக்கும் பக்கத்திலா என்பதைக் காலம் தான் நமக்கு உணர்த்தும்//
ReplyDeleteஇன்னும் என்ன குழப்பம்.... அதுதான் பெயரிலே இருக்கின்றதே...
hi prabhakar!gud article with rare footage!
ReplyDeleteGood article. Keep writing.
ReplyDeleteHI PRABAKAR,
ReplyDeleteNICE ARTICLE,
தமிழ் இனம் கருணாநிதியின் துரோகதத்தை மன்னிக்காது
I am reading your post now only.This is saravana Jani friend remember?
ReplyDelete