ஊழல்கள் மலிந்த, குற்றங்கள் மிகுந்த இந்திய அரசியலை ஆட்டுவிக்க ஹசாரே மூலம் காந்தி தோன்றிவிட்டார் என்று மக்கள் நம்புகிறார்கள். காங்கிரஸ் அரசு அஞ்சி நடுங்குகிறது. 100 கோடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் இவர் சொற்படி கேட்கிறது. இவர் கைகாட்டுகிற ஆளுக்கு ஓட்டு விழுகிறது. அடுத்த தேர்தலில் காங்கிரஸை தோற்கடிப்போம் என்று சூளுரைக்கிறார்கள். இவருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தை உருவாக்கிக்கொடுத்திருக்கிறது வடக்கத்திய ஊடகம். மந்திரம் போல் திரும்பத் திரும்ப ஹசாரேவின் பெயர் ஸ்லோகம் போல உச்சரிக்கப்படுகிறது ஊடகத்தில். அந்த மந்திரத்திற்கு மயங்கி குவிகிறார்கள் மக்கள். நாளை ஆட்சியையே பிடித்துவிடக்கூடிய வல்லமை பெற்றவர்களாக மாறிவருகிறார்களே இந்த போக்கு சரிதானா? ஊழல் என்கிற பல பொருள் கொண்ட பூதத்தை இவர் சொல்லும் லோக்பால் மசோதா மூலம் ஒழித்துவிட முடியுமா? அம்மசோதாவின் அடிப்படை கருத்து சரிதானா? இம்முயற்சியை ஆஹா ஓஹோ என்று பத்திரிக்கைகள் புகழ்கிறதே அதன் நோக்கம் என்ன? இவரின் பின்னால் அணிதிரள்பவர்கள் யார்? அவர்களின் சமூக அக்கறை எப்படிப்பட்டது? என்று சற்று சிந்தித்து பார்த்தால் கோமாளித்தனமும், சூழ்ச்சியும் கைகோர்த்திருப்பது புரியும். பிள்ளையார் சிலையில் பால்வழிகிறது என்கிற அசட்டுப் பொய்யை இந்தியா முழுவதுமுள்ள கோடிக்கணக்கான மக்களை நம்ப வைத்தது போன்ற அறியாமை மீண்டும் எழுவதை புரிந்து கொள்ள முடியும்.
பல தரப்பு மக்கள் நேரடியான மற்றும் மறைமுகமான காரணங்களால் பலவகையான ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஆயிரம் வருடங்களாக மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து பெருவாரியான மக்களின் உழைப்பை, வாழ்வை, உயிரை, தன்மானத்தை, உடைமையை அபகரித்து சுகபோக வாழ்வை சூழ்ச்சிகரமாக சிறு கூட்டம் சூரையாடியதும், தொடர்ந்து அதை தக்க வைக்க முயல்வதும்தான் நாடு சந்தித்த, சந்தித்து வருகிற மாபெரும் ஊழல். ஊழலின் பெரும் ஊற்று! பல்வேறு மாறுபட்ட கலாச்சாரம், வாழ்க்கை முறை, தட்ப வெட்ப சூழல், அரசியல் வரலாறு கொண்ட பல மாநில பிரதேசங்களை, அந்நியரிடமிருந்து விடுதலை என்கிற காரணத்தை மட்டும் வைத்து புதிய தேசிய உணர்வை ஊட்டி வலுவான மத்திய ஆட்சியை ஏற்படுத்தி, மாநில அரசுகளின் சுதந்திரத்தை, உரிமையை, இறையாண்மையை அதிகாரத்தை அநியாயமாகப் பிடுங்கிக்கொண்டு சவலைப்பிள்ளைகளாக மாநிலங்களை ஆட்டுவிப்பது முட்டாள்தனமான மற்றுமொரு பெரிய ஊழல். மக்களால், தொழில் நிறுவனங்களால் கடைபிடிக்க முடியாத சட்ட திட்டங்கள், ஒழுங்குமுறைகள், வரி வசூலிப்புகளை நடைமுறைப் படுத்திக்கொண்டு அதே நேரத்தில் அச்சட்டத்திட்டங்களுக்கு நேர்மாறான புதிய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி வருவது பொறுத்தமற்ற முரணான அனுகுமுறை. அதனால் விளைவது பெரும்பங்கு ஊழல். ஜனநாயகத்தை பேணாமல், மன்னராட்சி போல் தனிமனிததுதிபாடும் அரசியல் கலாச்சாரத்தை நாடெங்கும் பேணி வருவது மற்றுமொரு ஊழல் தோற்றுவாய்.
அறிவியலுக்கு பொருந்தாத நம்பிக்கைகள், மூடப்பழக்கங்கள், பெண்ணடிமைத்தனம், தீண்டாமை போன்ற சமூக சூழ்ச்சியால் தோற்றுவிக்கப்படுகிற குற்றங்குறைகள் ஏராளம். அரசுத்துறைகளின் நிர்வாக முறை காலத்திற்கு பொருந்தாத பழமைவாதம். அரசின் அதிகாரம் என்ன? தனிமனித சுதந்திரத்தை எவ்வளவு தூரம் வழங்குவது? தனியார் துறைகளின் எல்லை எது? எவற்றை அரசு நிர்வகிப்பது? எவற்றை தணியாருக்கு வழங்குவது போன்ற மிகப்பெரிய கொள்கை முடிவுகளில் அரசியல் கட்சிகள் காட்டி வரும் அலட்சியம். பெரும்பான்மையான ஊடங்களின் நேர்மையற்ற சார்பான போக்கு என்று பலப்பல ஊழல் வடிவங்கள் இருக்கின்றன. ஊழலின் ஊற்று மூலங்களாக இருக்கின்றன. அதுபற்றியெல்லாம் துளியும் பேசாமல், இவைகளின் விளைவாக, எய்தவன் இருக்க அம்பை நோவது போல் அரசு அலுவலர்களின் இலஞ்சத்தை ஒழிப்பதால் எல்லாம் சரியாகிவிடும் என்று மேம்போக்காக கூறிவரும் கூட்டத்தை அறியாமையை தமிழர்கள் ஊக்குவிக்க வேண்டுமா? என்ற கேள்வி பிறந்ததனாலும்…
இந்த அறியாமையோடு மறைமுகமாக இந்திய அரசின் கட்டமைப்பையே மாற்றி அரசை கண்காணிப்பதன் பேரில் இணையான ஆட்சியை ஏற்படுத்தி அதன் அதிகாரத்தை கைப்பற்றும் சூழ்ச்சியும் கை கோர்த்திருக்கிறது என்று அறியும்போதும். அதாவது கடவுள் பெயரைச் சொல்லி மனு சட்டமியற்றி மன்னனையும் மக்களையும் மூளைச்சலவைசெய்து, அவர்களை அடக்கி ஒரு கூட்டம் உயர் வாழ்வு வாழ்ந்த நயவஞ்சகத்திலிருந்து தமிழகம் பெரியார் போன்றோரின் உதவியால் மீண்டு வரும் வேளையில் அதே கூட்டம் ஊழலை ஒழிக்கிறோம் என்கிற போர்வையில் அணி திரண்டு தன் ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடிப்பதை அறிகிற போதும்…
மேற்கூறிய பலவகைகளில் ஊழல் ஊற்றெடுத்து பொங்கி வரும்போது அதற்கு ஆட்பட்டவர்களை மட்டும் பிடித்து செல்வதில் அர்த்தம் இருக்க முடியாது. ஆனால் அதை எப்படி சிறப்பாகச் செய்வது என்று விளக்குவதுதான் அன்னா ஹசாரே ஆட்களின் ஜன்லோக்பால் மசோதா. ஒருவன் ஏன் ஊழலில் ஈடுபடுகிறான் எந்தச் சூழ்நிலை அதற்கு உதவுகிறது அதை எப்படிக் குறைப்பது என்று பார்ப்பதற்கு பதில் அவனை பிடித்து தூக்கிலிட்டுவிட்டால் மற்றவன் பயப்படுவான் அதனால் ஊழல் குறைந்துவிடும் என்கிறார் ஹசாரே. அதுதான் அந்த மசோதாவின் அடிப்படைக் கருத்து. அதாவது உதாரணமாக மத நம்பிக்கைகளின் அடிப்படையில் சமூக ஏற்றத்தாழ்வு உண்டாக்கப்பட்டு, கல்வி வாய்ப்பும் பிழைப்பதற்கு நிலமும் இழந்து, வறுமையுற்று பாதிக்கப்பட்ட மக்கள் சூழ்ச்சியாளர்களின் பிடியிலிருந்து தப்ப எத்தணிக்கும் போது சில விதி மீறல் செய்வர். இது மனித இயல்பு. ஆனால் அதை இவர்கள் கவணிக்கத் தவறுகிறார்கள்.
அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு உதவுகிறோம் என்ற போர்வையில் 2 இலட்சம் சமூக சேவை நிறுவனங்கள் இருக்கின்றன அவைகள் வரியும் கட்டுவதில்லை மாறாக அனைத்து ஊழல்களும் அவைகள் மூலம் நடக்கின்றன. அதில் ஒரு சில நிறுவனங்கள் இவர்களுக்கு பண உதவி அளிக்கிறது. அதனால் தான் இந்த ஹசாரேக்களுக்கு NGOக்களை லோக் பால் மசோதா வரம்பிற்குள் சேர்க்க துணிவில்லை. இலஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்க துடிக்கும் ஹசாரே கொடுப்பவர்களை தடுக்க துடிப்பதில்லையே ஏன்? இது போன்ற பல நியாயமற்ற பார்வை இவர்களின் மசோதாவில் இருக்கிறது. அதனாலும்…
அவரது பரிசோதனை இடமான மாலோகான் சித்தி கிராமத்தில் அடி, உதை அவமானப்படுத்துதல் என்கிற நாலாந்தர வழிமுறைகளின் மூலம் குற்றங்களைக் குறைத்தாராம். அதே வழிமுறையை இப்போது நாடெங்கும் கொண்டுவரப்போகிறார்களாம். சாதாரன காய்ச்சலுக்கு தரக்கூடிய மருந்தால் இதய நோய், மூளைக் காய்ச்சலை குணப்படுத்த முடியாது. இதுபோக அக்கூட்டத்தினர் இடஒதுக்கீட்டினால் தகுதியற்ற நபர்கள் வேலையில் சேர்ந்ததால் அரசுத்துறை இலஞ்ச ஊழலில் பெருத்துவிட்டது என்று பேசி வருகின்றனர். எனவே ஊழலை ஒழிப்பதில் இவர்களுக்கு இருக்கிற பார்வையே குறையுள்ளதாக இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக அறிவுப்பூர்வமான முறையில், அரசியல் புரட்சி கட்டமைக்கப்படுவதற்குப் பதில் கோபத்தாலும், அவசரத்தாலும் உணர்ச்சியூட்டி மக்கள் திரட்டப்படுவது நாட்டின் முதிர்ச்சியற்ற தன்மையைக் காட்டுகிறது. அன்னா ஹசாரே வெறும் ஒரே ஒரு மசோதா பற்றி மட்டும்தானே பேசுகிறார், அரசியல் செய்யவில்லையே என்று யாரும் நம்பிவிடவேண்டாம். இப்படிச் சொல்லி மக்களிடம் செல்வாக்கு பெற்றுவிட்டால் அடுத்தது ஆட்சிதான் அவர்களுக்குக் குறி. நாடாளுமன்றத்திற்கு கட்டளையிடுவது அரசியலன்றி வேறென்ன? ஊழல் என்பது தனிப்பிரச்சனை கிடையாது அதோடு தொடர்புடைய பல விசயங்கள் இருக்கின்றன. அது பற்றி பேச அறிவும் அக்கறையும் இல்லாத கூட்டம் பின்புற வழியாக ஆட்சியைப் பிடிக்க முயல்வதே சூழ்ச்சி. அதுவே நியாயமற்ற செயல்.
தமிழ்நாடு இத்தகைய அரசியல் முதிர்ச்சியற்ற ஆட்டு மந்தைகளை திரட்டுவது போன்று போலி தேசபக்திக் கூட்டத்தால் ஆட்டுவிக்கப்பட்டால் அதைவிட அவமானம் வேறொன்றுமில்லை. அரசியலில் பெரியார் அன்னா போன்றோர்கள் அறிவுக்கு வேலை கொடுத்து மக்களை சிந்திக்க செய்தார்கள். தமிழக அரசியலில் புத்தகத்திற்கே வேலை இருக்க வேண்டும். பிரம்பிற்கு அல்ல!. அதற்கு மாறாக போலி தேச உணர்ச்சியோடு ஊழலை ஒழிப்போம் என்கிற பல்லவியோடு கோமாளித்தனமும் சூழ்ச்சியும் இணைந்து வருவதை அறிந்தபோதும்…
அதை துவக்கி வைக்கிற முயற்சியோடு தமிழகத்திற்கு, வருகை தருகிற அன்னா ஹசாரேவிற்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு இச்சூழ்ச்சியைப் பற்றி எச்சரிக்கை செய்வது எனத் தீர்மாணித்து அவருக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது.
மக்கள் சக்தி கட்சி இம்முயற்சியில் ஒரே கருத்துடைய மே 17 இயக்கத்துடனும், பெரியார் தி.க.வுடனும் இணைந்து டிசம்பர்18ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இந்நிகழ்வை நடத்தியது.