Sunday, November 27, 2011

பெண் மொழி


அறிவியல் கூற்று என்று சொல்லமுடியாது என்றாலும் பெண்கள் தங்களுக்கென்று இடியாப்பச்சிக்கலை ஒத்த யாருக்கும் புரிபடாத ஒற்றை மொழியை பழகியிருக்கிறார்கள் என்பது உலகறிந்த உண்மை.

பிளாட்டோ முதல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் முதல் மகாத்மா காந்தி வரை முன்வைத்த அரசியல் கூற்று, மனித வாழ்க்கையில் அவர்கள் பழகும் பொருளாதாரக் கொள்கையை மைய்யமாக வைத்து தான். ஆனால் இவர்களின் அரசியல் கூற்றில் ஒரு பகுதியாக மனித வாழ்வில் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையில் உள்ள உறவை குறிப்பிடாமல், அதை எங்கு சென்று முடிக்க வேண்டும் என சொல்லாமல் தங்களது பொருளாதார அரசியல் கொள்கையை முன் வைக்கவில்லை. ஏனென்றால் குடும்ப கட்டமைப்பை முதன்மையாகக் கொண்டே நமது சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மேல் குறிப்பிட்ட அனைவருமே வாழ்ந்தது கருத்து கூறியது எல்லாமே பெண் சமூகம் முழுமையாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில்.

தந்தை பெரியார் பொருளாதாரக் கொள்கையை முதன்மையாக வைக்கவில்லை என்றாலும் சமூகத்தில் பெண்களின் வாழ்க்கை முறை எந்த அளவில் மாறுதலுக்கு உள்ளாகவேண்டும் என அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார். ஒருபுறம் உடல் வலுவில் பெண் ஆணை விட குறைந்திருக்க மத போதனையின் ஒரு பிரிவில் ஆணின் மூலம் பெண்ணை அடிமைபடுத்தி வைத்திருக்கிறார்கள். உலகெங்கும் இந்த அடிமைத்தனம் 20ஆம் நூற்றாண்டில் உடைபடத்தொடங்கியிருந்தாலும் இந்து மதத்தின் பெயரில் இந்தியாவில் மட்டும் உடைபட அதிக நேரம் பிடிக்கிறது.

இவ்வளவு பெரிய அறிஞர்கள் எல்லாம் பெண்களைப் பற்றிய இயலில் ஏதேதோ சொல்ல நினைத்து ‘தகுடுதித்தோம்’ போட்டு சென்று விட்டார்கள். சென்ற ஆண்டு ஆனந்த விகடனில் மனநல மருத்துவர் ஷாலினி எழுதிய தொடரில் அவர்கள் இதில் சிலவற்றிற்கு பதில் சொல்ல முனைந்தார். உண்மையில் பெண் மொழி என்பது அவ்வளவு சிக்கலானதொன்றா? என்றால் தலை சொறிவது தவிர்த்து ஒன்றும் தெரியவில்லை.

பெண்ணிடம் ஒன்றை சிந்தித்து கேள்வி கேட்டால் அதன் நேர் எதிரான பதில் கிடைப்பதும், சமயங்களில் தீவிரமாக ஆய்ந்து அறிந்து புத்திசாலித்தனமாக பேசினால் இவ்வளவு சிரமப்பட்டிருக்கத் தேவையில்லையோ என எண்ணத்தோன்றுவதும் இயல்பு.  தாயாக நின்று பிள்ளைகளை காப்பதிலும் சரி, தகப்பனிடம் பெறும் அன்பிலும் சரி வாழ்க்கை இணையைத் தேர்ந்தெடுப்பதிலும் சரி சொல்லி வைத்தார் போல் ஒற்றை நாடியில் செயல்படுகிறது உலக பெண்ணினம்.



பார்வையில் தெரிந்தாலும் செல்ல முடியாத தொலைதூரத்தில் மின்னும் நட்சத்திரத்தை போன்றது பெண் மொழி என்பது. அந்த மொழியின் சூத்திரம் என்ன என ஆய்வது போகாத ஊருக்கான வழி என்பதில் ஐயமில்லை.