Saturday, December 11, 2010

ஏழைகளின் பணம் ரூ.20,000 கோடி எங்கே? முதல்வர் கருணாநிதி விளக்கமளிக்க வேண்டும்!

..... மதுவிலக்கை ரத்து செய்வதனால் கிடைக்கக்கூடிய வருவாய் என் மனக்கண் முன்னால் ஒரு விநாடி தோன்றியது. அதற்குப் பின்னால், அழுகின்ற தாய்மார்களின் உருவமும், குழந்தைகளின் கதறலும், மனிதன் தன் அறிவை இழந்து காட்டுமிராண்டி போல் தெரியும் காட்சிதான் என் கண் முன்னால் நிற்கிறது. ஆகையால் மதுவிலக்கு ரத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு விடை சொல்வோம். அதற்கு மாறாகச் சிரிக்கின்ற தாய்மார்களின் முகங்களும், குதூகலம் உள்ள குடும்பங்களையும் குடிபோதைக்கு அடிமை இல்லாத மக்களையும் வரவேற்போம்" என்றார் 1968ல் மதுவிலக்கு மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்த அறிஞர்அண்ணா. ஆனால் பலரின் எதிர்ப்பையும் மீறி 1971ல் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் மதுக்கடைகளை திறந்தார். பிறகு நடந்ததெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த வரலாறு.

‘டாஸ்மாக்’ மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் :

2006 – 2007 – 7,300 கோடி

2007 – 2008 – 8,822 கோடி

2008 – 2009 – 10,601 கோடி

2009 – 2010 – 12,491 கோடி

2010 – 2011 – 14,000 கோடி (குறைந்தபட்சம்)

_____________________________________________________

மொத்தம் – ரூ. 53,200 கோடி

­­­­­­­­­­_____________________________________________________

இதில் 13 லிருந்து 16 வயது பள்ளி மாணவர்கள், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் மது உட்கொள்வதால் வரும் வருவாய் இல்லாமல் தமிழகத்தில் மது உட்கொள்வதில் 50% லிருந்து 60% வரை உள்ளவர்கள் தினக்கூலி வாங்கி குடும்பம் நடத்தும் ஏழைகளாக இருக்கின்றனர் என பல ஆராய்ச்சி முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதாவது கடந்த 5 வருட திமுக ஆட்சியில் மது மூலம் அரசுக்கு கிடைத்த வருமானத்தில் ரூ.30,000 கோடிக்கு மேற்பட்ட பணம் சுமார் 50 இலட்சம் ஏழை மக்கள் தினமும் பெறும் கூலி மூலம் வருகிறது.

ஏழை மக்களுக்கு 2006-2011 திமுக ஆட்சியில் பல இலவசங்களை கொடுத்து வருவதாக அவ்வப்போது அறிவிக்கிறது. இது போன்ற ஏழை மக்களுக்கு(மட்டும்) அரசு இலவசங்களுக்காக செலவழித்த தொகை :

இலவச தொலைக்காட்சி – 1000 கோடி

இலவச கியாஸ் ஸ்டவ் – 250 கோடி

1 ரூபாய்க்கு அரிசி – 2500 கோடி

இலவச ‘கான்கிரீட்’ வீடு – 2250 கோடி

இலவச காப்பீடு – 500 கோடி

________________________________________________________________

மொத்தம் - ரூ. 6500 கோடி

________________________________________________________________


ஏழை வீட்டுத் தலைவர் மது அருந்துவதால் வீட்டில் ஏற்படும் குடும்ப பிரச்னைகள், பெண் மீதான வன்கொடுமைகள், பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் கல்வி, சமூக சீர்கேடுகள் என பட்டியல் நீள்கிறது. ஏழையாக பிறந்து ஏழையாகவே வளர்ந்து அவர்கள் ஏழையாகவே இருக்கிறார்கள். அனால் ‘இளைஞன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசியமுதல்வர் கருணாநிதி அவர்கள் “ஏழையாகப் பிறந்து, வாழ்ந்து – ஏழைகளுடன் நட்பு கொண்டு – ஏழைகளின் வாழ்வுக்காகத்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அப்படியானால் 2006-2011 திமுக ஆட்சியில் பல ஏழை பெண்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கி, பல ஏழை வீட்டு மாணவர்களின் கல்வியைக் கெடுத்து, அகால மரணங்கள் ஏற்படுத்தி ஏழை தினக் கூலிகளிடமிருந்து அபகரித்த 23,500 கோடி ரூபாய் எங்கே?

முதல்வர் கருணாநிதி அவர்கள் விளக்கமளிக்க வேண்டும்.