Wednesday, December 30, 2009

எந்திரன் - சரியா ? தவறா?



Electronic Voting Machine EVM - Human Fear and Error

வாக்குப்பதிவு இயந்திரம்


பெரும் நகரத்தில் மெத்த படித்த 50 வயதைத் தாண்டிய மூத்தவர்களிடம் ஒரு கணினியை இயக்கக் கூறினாலும், ஏன்?! ஒரு சிறிய கையடக்க செல்போனைக் கொடுத்து அதில் உள்ள சில விசயங்களைப் பார்க்க சொன்னாலோ ஒரு பதற்றம் இருக்கும். படித்த இளைய தலைமுறை வெகு சுலபமாக இயக்கும் எலெக்டரானிக் இயந்திரங்களைக் கண்டு இனம் புரியா பதற்றம் அடைவது ஒவ்வொரு வீட்டிலும் காணலாம். இதுவே கிராமபுரத்தில் அதிகம் வாழ்ந்த நன்கு படித்த 50 வயதைத் தாண்டியவர்களிடம் இந்த பதற்றத்தின் அளவு கூடும். இது இப்படி இருக்க அதிகம் படிக்காத கிராம, நகர வாசிகள் அதிகம் வசிக்கும் இந்தியாவில் இந்த நாட்டை ஆளப்போகும் நபரைத் தீர்மானிக்கும் வாக்களிக்கும் முறை எலெக்டரானிக் இயந்திரமாக இருப்பது சரியா? தவறா?

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் சக்தி கட்சி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டது. தேர்தல் ஆணையத்திடம் பதிவுக்கான பணிகள் இன்னும் நிறைவடையாததால் சுயேட்ச்சையாக போட்டியிட்டோம். எங்களுடன் சேர்ந்து மொத்தத்தில் 25 வேட்ப்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேருக்கு மேல் பதிய முடியாததால் திருச்செந்தூரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இரண்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டது.

வேட்பாளர் வரிசை பொதுவாக, அங்கீகரிக்கப்பட்ட (Recognized Parties) கட்சியின் வேட்ப்பாளர், அதற்கு பின், ஆணையத்திடம் பதியப்பட்ட (Registered Parties) கட்சியின் வேட்ப்பாளர்களின் பெயர், அவர்களின் சின்னம் வரிசையாக இருக்கும். அதற்கு பின் சுயேச்சையாக போட்டியிடும் வேட்ப்பாளர்களின் பெயர்கள் நேரே அவர்களது சின்னத்துடன் ஒரு சிறிய பட்டனுடன் இருக்கும். திருச்செந்தூர் இடைத்தேர்தலில் வேட்ப்பாளர்களின் வரிசை (படத்தில் காண்க) இப்படித்தான் இருந்தது.





இதில் அப்படி வித்தியாசமாக என்ன நடந்தது? எப்படி நடந்தது? எதனால் நடந்தது?

தேர்தல் திருவிழாவில் முக்கிய கட்டம் வாக்குப் பதிவு. பூத் ஏஜென்டுகள் உள் உட்க்கார்ந்தபடியே "இரண்டாவது பட்டன், ஆறாவது பட்டன்" என்று யாருக்கும் கேட்க்காத படி வரும் வாக்காளர்களிடம் கூறுவதும் அதையே கைவிரல்களில் சைகை காண்பிப்பதும் வழக்கம். அதற்கு சற்று முன் வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டருக்கு வெளியே ஒரு மேசை நாற்காலி போட்டுக்கொண்டு கட்சித் தொண்டர்கள் பூத் ஸ்லிப் (Booth slip வாக்காளர் விபரம்) கொடுத்து வாக்காளர்களிடம் தங்களின் வேட்ப்பாளரின் பெயர், சின்னம் உள்ள எண்ணை சொல்லி அனுப்புவர். உதாரணத்திற்கு திமுக வேட்பாளர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடைசி நிமிடத்தில் வாக்கு சேகரிப்பவர்கள் அங்கு வரும் வாக்காளரிடம் "உள்ள போனதுமே முதல் முதல் பட்டன். அண்ணே மறந்துடாதீங்க" என்று சொல்லி வாக்கு சேகரிப்பார். அதிமுக கட்சித் தொண்டர்களோ அம்மன் T.நாராயணனுக்கு வாக்கு சேகரிப்பவர்களின் பூத்தை கடந்து செல்லும் வாக்காளரிடம் "அக்கா, இரண்டாவது பட்டன். இரட்டை இலைக்கு தான் உங்க ஒட்டு" என சொல்லி அனுப்புவர்.
ஒரு வேட்பாளர், தொகுதியில் என்ன செய்திருந்தாலும், கட்சி ஒரு சிறந்த கொள்கைகளைக் வைத்திருந்தாலும் இந்த கடைக்கோடி தொண்டர்கள் செய்யும் பணிதான் சில வாக்குகள் அதிகம் பெற்று தரும்.

திருச்செந்தூரில் இறுதியாக வந்த வாக்கு எண்ணிக்கையின் படி திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ராதாகிருஷ்ணன் 75,223 வாக்குகளும், அதிமுகவின் அம்மன் T.நாராயணன் அவர்கள் 28,362 வாக்குகளும் பெற்றனர். ஆனால் உண்மையிலேயே இவர்களுக்கு வாக்களித்தவர்கள் எத்தனை பேர், இவர்களுக்கு வந்திருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு?

"உள்ளே சென்று முதல் பட்டனை அழுத்துங்கள்" என சொல்லி அனுப்பியிருந்தாலும் பலர் சின்னைத்தை தேடியோ அல்லது வேட்ப்பாளரின் பெயரைத் தேடியோதான் வாக்களிப்பர். ஆனால் சிலர் பதற்றத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டாவது இயந்திரத்தில் முதல் பட்டனை அழுத்தியுள்ளனர். அதாவது உதய சூரியன் சின்னத்திற்கு விழ வேண்டிய 850க்கும் அதிகமான வாக்குகள் திரு பத்மராஜன் அவர்களுக்கு விழுந்துள்ளது. அதிமுகவின் அம்மன் T.நாராயணனுக்கு விழவேண்டிய வாக்குகள்இரண்டாவது இயந்திரத்தில் இரண்டாவது இடத்தில் இருந்த புஹாரி அவர்களுக்கு விழிந்திருக்க வேண்டும்.

இது முதல் சர்ச்சை என்றால் அடுத்தது இதைவிட வியப்பானது. தொண்டர்கள் வெளியில் சொல்லியனுப்பும் "உள்ள போனதும் முதல் பட்டன், இரண்டாவது பட்டன்" எனும் வார்த்தைகளால் சிலர் பதற்றத்தில் முதல் இயந்திரத்தில் கடைசி இரண்டு பட்டன் (15,16) அதாவது வாக்காளர் நின்று கொண்டிருக்க அவருக்கு அருகில் இருக்கும் முதல் பட்டன் (16 - நூர்முகமதுக்கு திமுக என நினைத்து) வாக்களிப்பவர்களுக்கு அருகில் இருக்கும் இரண்டாவது பட்டன் (15 - டேனியல் அவர்களுக்கு இரட்டை இல்லை என நினைத்து) வாக்களித்துள்ளனர். இரண்டாவது இயந்திரத்தில் கடைசி 7 பட்டன் பெயர் ஏதும் இல்லாததால் இந்த பிரச்சனை அங்கு எழவில்லை.

சர்ச்சைக்குரிய இடங்களாக நாம் கூறும் 15,16,17,18 ஆகிய இடங்களில் உள்ள டேனியல், நூர் முகமது, பத்மராஜன், புஹாரி அவர்கள் பெற்ற வாக்குகள் அனைத்துமே இப்படித் தான் வந்திருக்க வேண்டும் என உறுதியாக கூற முடியாது. அவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் சில வாக்குகள் விழுந்திருக்கலாம். இந்த நான்கு பேரை நீக்கிவிட்டு பார்த்தால் சராசரியாக ஒரு சுயேச்சைக்கு 60 வாக்குகள் விழுந்திருக்கிறது. 'எலெக்ட்ரானிக் இயந்திரத்தில் சிலருக்கு இனம் புரியா பதற்றம் இருக்கிறது' என்ற இந்த கருத்தை முன்வைக்க சில ஆணித்தரமான ஆதாரங்கள் உள்ளன.

முதலாவது, 16வது இடத்தில் இருக்கும் திரு. நூர் முகமது அவர்களும் 17வது இடத்தில் இருக்கும் திரு. பத்மராஜன் அவர்களும் சாதனைப் படைக்க, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற முறையே 27வது முறையும், 108வது முறையும் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதில் பத்மராஜன் அவர்கள் இந்தியாவில் தேர்தல் எங்கு நடந்தாலும் (ஜனாதிபதி தேர்தல் உட்பட) அங்கு சென்று வேட்புமனு தாக்கல் செய்து போட்டியிடுவார். இந்த செயலுக்கு அவர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் கலெக்டரிடம் மனுதாக்கல் செய்துவிட்டு வீடு சென்றுவிடுவர். டெபாசிட் தொகையை (ரூ.5000) தவிர்த்து ஒரு ரூபாய் கூட செலவிடமாட்டார்கள். தகவல் பெரும் உரிமைச் சட்டம் பயன்படுத்தி யார் வேண்டுமென்றாலும் அவர்கள் செலவிட்ட தொகையை உறுதி செய்துகொள்ளலாம்.

மேலும் இந்த சர்ச்சைக்கு வலுசேர்க்கும் விஷயம், திமுக/அதிமுக வாங்கிய வாக்குகள் முறையே 75,223 / 28,362. அதாவது அதிமுகவை விட 2.65 மடங்கு அதிகம் திமுக பெற்ற மொத்த வாக்குகள்.
இதே போல வாக்கு இயந்திரத்தில் 15வது (186) இடத்தை விட 2.8 மடங்கு அதிகம் 16வது (526)இடம்.
18வது (332) இடத்தை விட2.7 மடங்கு அதிக வாக்கு 16வது(908) இடத்திற்கு.

அதாவது நம் கணக்கின் படி சுமார் 1400 வாக்குகள் அதிகம் பெற்று திமுக மொத்தமாக பெற்றிருக்க வேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 77,600 வாக்குகள். அதிமுக பெற்றிருக்குவேண்டிய வாக்குகளின் எண்ணிக்கை 28,800 வாக்குகள். இந்த ஏற்ற இறக்கம் இந்தியாவில் எந்த இடத்தில் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் பெறலாம்.

ஜனநாயக நாட்டை ஆளப்போவது யார் என்பதை முடிவெடுப்பது அதில் அங்கம் வகிக்கும் மக்கள். அதை நடைமுறைப்படுத்த கையாளப்படும் முறைதான் வாக்கு. அது, தான் நினைத்த நபருக்கு போய் சேரவேண்டும்.
300க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இன்று தமிழகத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார்.2500 வாக்குகளுக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உள்ளார். ஏன், ஒரு வாக்கு, ஐந்து வாக்குகள் வித்தியாசத்தில் கூட வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் தப்பிவிடுவதும், அப்பாவிகள் தண்டிக்கப்படுவதுமான செயலைப் போல் இதுபோன்ற வழிமுறை சில இடங்களில் ஏற்படக்கூடும். நாம் சரியான நபருக்கு நேர் இருக்கும் பட்டனைத் தான் அழுத்தினோமா என படித்த சிலருக்கே இது போன்ற எலக்ட்ரானிக் பயன்பாடுகள் பதற்றத்தை ஏற்படுத்தும்போது. படிப்பறிவு இன்னும் 60 விழுக்காடு கூட தாண்டாத இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் எது சரியானமுறை என பொதுவில் விவாதம் நடத்தப்படவேண்டும்.

பருகூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2000 வாக்குகள் பெற்றது மக்கள் சக்தி கட்சி. EVMல் எங்கள் வேட்ப்பாளருக்கு மேல் இருந்த திமுக வேட்ப்பாளரின் வாக்குகள் 100 அல்லது 200 வாக்குகளை மக்கள் பதற்றத்தில் மக்கள் சக்தி கட்சிக்கு போட்டிருக்கக் கூடுமோ என்ற ஐயம் இப்போது எழாமல் இல்லை.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ' சிவகங்கை தொகுதியில் சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த திரு சிதம்பரத்தை இரண்டு மணிநேரம் கழித்து சில திரைமறைவு வேலைகளுக்குப் பின் வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள் ' என்ற குற்றச்சாட்டும் அதற்கு மறுப்பும் ஆங்காங்கே கேட்க முடிகிறது. அதனால் தான், வாக்கு எண்ணிக்கையை வீடியோ கான்பிரன்சிங் (video Conferencing) மூலம் நேரடியாக திரு நரேஷ் குப்தா பார்வையிட்டார் என்றும், ஒவ்வொரு சுற்றின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட பின்பே அடுத்த சுற்று துவங்க வேண்டும் என்ற புது வழிமுறையை திரு நரேஷ் குப்தா பின்பற்றினார் என்றும் கூறப்படுகிறது. திரு சிதம்பரத்தின்(நாட்டின் உள்துறை அமைச்சர்) மீதான குற்றச்சாட்டு உண்மை எனும் பட்சத்தில் அதுவே வாக்கு சீட்டாக இருந்திருந்தால் மக்கள் ஒவ்வொருவரும் கையொப்பமிட்ட வாக்கு சீட்டை மாற்றி அமைக்க தலைமை தேர்தல் ஆணையர் திரு நவீன் சாவ்லா நினைத்தாலும் முடியாத ஒரு செயல்.

இதற்கு என்னதான் தீர்வு?

இந்த வேட்பாளருக்கு இந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று அதே இயந்திரத்தில் இருந்து ஒரு ஒப்புதல் சீட்டு (Acknowledgement slip) தரலாம் என்ற வாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏனென்றால் வாக்கு என்பது ரகசியம் காக்கப்படவேண்டிய ஒன்று. தேர்தலில் வாக்கு அளிக்கும் முன்பே 1500, 2000 ரூபாய் என பணநாயகம் நடந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் ஒப்புதல் சீட்டுகொடுத்தால் 5000, 10000 ரூபாய் பணம் என்று மீதமிருக்கும் சனநாயகமும் குழிதோண்டி புதைக்கப்படும்.

இதனால் ஒட்டுமொத்தமாக வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் என்று கோசம் போடவும் விருப்பமில்லை. 100 விழுக்காடு கல்வியறிவு பெற்ற வளர்ந்த நாடுகள் வாக்குச் சீட்டு முறையிலிருந்து எலெக்ட்ரானிக் வாக்கு இயந்திரத்துக்கு மாறி பின் அது சரியில்லை என மறுபடியும் வாக்கு சீட்டு முறைக்கே மாற்றி கொண்டது ஏன்? என்பதை ஆராய வேண்டும். விரைவாக முடிவு தெரிந்துகொள்ளலாம் என்பதற்காக சரியான நபர் தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் வாய்ப்பும் இதில் உள்ளது என்பதை உணரவேண்டும். இதுபோன்ற சிக்கல்கள் இருப்பதால் இதைப்பற்றிய விவாதம் பொதுவில் நடத்தப்பட வேண்டும் என்பதே மக்கள் சக்தி கட்சியின்விருப்பம்