கச்சத்தீவு.
ஒரு விதமான இலஞ்சம் என்று கூட சொல்லலாம்.
1974ல் பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியது. இதைக் கண்டித்து பாகிஸ்தான் அரசு ஐ.நா. அவையில் தாற்காலிக குழு மூலமாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற முயன்றது. அதை முறியடிக்க இந்தியாவிற்கு இலங்கை உதவியது. அந்த செயலுக்காக கச்சத்தீவு என்னும் பொக்கிஷத்தை இந்தியா, இலங்கைக்கு இலஞ்சமாக கொடுத்தது.
இன்று எப்படி நாடாளுமன்ற ஒப்புதலின்றி இலங்கை அரசுக்கு இந்தியா, இராணுவ தளவாடங்கள், இராணுவப் பயிற்சி, இராணுவ வீரர்களைக் கொடுத்து உதவுகிறதோ அதே போல 1974லிலும் தன்னிச்சையாக அன்றைய இந்திய பிரதமர் இந்திரா அம்மையார் இந்தியாவின் ஒரு நிலப்பகுதியான கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் அன்றும் தி.மு.க., காங்கிரஸ் ஆகியவை கூட்டணிக் கட்சிகள், இன்றும் கூட்டணி கட்சிகள். அன்றும் சரி இன்றும் சரி முதல்வர் கருணாநிதி மௌனமாக தமிழர்களை உயிர்பலி வாங்கும் விதமாக இந்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்கு துணை நின்றும், மத்திய அரசு பொருட்படுத்தாது என்று தெரிந்ததே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதென்று காலம் கடத்திக்கொண்டுள்ளார்.
விளைவு?.
நூற்றுக்கணக்கில் இந்திய (இராமேஸ்வரம்) மீனவர்களை பலி கொடுத்துள்ளோம்.
கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கும்போது சில ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது, கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதியில் ஏற்றுமதி தரம் வாய்ந்த இறால் மீன்கள் உள்ளதால், இந்திய மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடிக்கலாம் என்பதுதான் அது. ஆனால் எப்போதும் போல இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தையும் கடைபிடிப்பதில்ல்லை.
ஒரு படி மேலே சென்று எந்த நாடும் செய்யத் துணியாததை இலங்கை அரசு இந்திய அரசின் ஒப்புதலோடும், ஒத்துழைப்போடும் செய்துள்ளது. இந்திய - இலங்கை கடல் எல்லையை குறிக்கும் இடத்தில் கன்னி வெடிகளை மிதக்க விட்டுள்ளனர். மீன் பிடிக்க சென்று இரவு பகல் பாராமல் மீன் அதிகமுள்ள பகுதியில் படகை மிதக்கவிடும் மீனவர்கள், தவறுதலாக எல்லைக் கோட்டைத் தொட்டாலே படகு வெடித்து சிதறும்.
விடுதலைப் புலிகள் நடமாட்டம் உள்ளதால் இந்த நடவடிக்கை என கூறுகிறது இந்திய இலங்கை அரசாங்கங்கள். போர்க்கப்பல், நீர்மூழ்கி கப்பலென வளர்ந்துவிட்ட புலிகளை எதிர்க்கிறேன் பேர்வழி என்று மீன் பிடி படகில் பயணிக்கும் இராமேசுவர மீனவர்களை நிர்வானமாக்குவது, சிறையிலடைத்து சித்தரவதை செய்வது, புலிகளின் மீதான கோபம் தலைக்கேறினால் இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்வது.... இவை எதுவுமே நாகரீக, பண்பேறிய அரசு செய்யாது. துணையும் போகாது.
அடுத்த நாட்டு மீனவர்களை எல்லை பாதுகாப்பு படை கண்டால், அவர்கள் நாட்டுக்கு கொண்டு சென்று விசாரித்து சிறையிலடைக்கும். பின் சம்மந்தப்பட்ட நாட்டிற்கு தகவல் கொடுக்கும். விசாரணைக்குப் பின் விடுவிப்பர். சுதந்திரத்துக்குப் பின் அரசியல் ரீதியில் இந்தியாவிற்கு எதிரியாக உள்ள பாகிஸ்தான் கூட குஜராத் மீனவர்கள் தவறுதலாக கடல் எல்லையை கடக்கும்போது இன்றுவரை இதைத்தான் செய்கின்றனர்.
ஆனால் இலங்கைக்கு மட்டும் இந்தியா அளித்துள்ள எழுதப்படாத சட்ட விலக்கு என்னவென்றால், எல்லைத் தாண்டும் மீனவர்களைக் கண்டால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கலாம் என்பது போலத் தான் தெரிகிறது.. இதுவரை 400௦௦ க்கும் மேற்பட்டோர் இலங்கை கடல் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் துப்பாகிச்சூட்டு காயம்பட்டுள்ளனர். 400ல் ஒரு உயிருக்குக்கூட நாடாளுமன்றத்தில் இரங்கலோ, பாதகத்தைச் செய்த இலங்கைக்கு கண்டனமோ நிறைவேற்றியதில்லை.
இதையெல்லாம் நாடாளுமன்ற கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளோ தேர்தல் அறிக்கைகளில் மட்டும் "கச்சத்தீவை மீட்போம்" என அச்சடித்துவிட்டு, குரங்கு - பூனை - சப்பாத்தி பிரித்துக்கொள்ளும் கதையைப் போல தேர்தலுக்கு சீட்டு பிரித்துக்கொள்வதிலேயே அவர்களுடைய முழு ஆற்றலும் செலவிடுகிறார்கள்.
ஆளும் இந்திய அரசு (தமிழக கட்சிகள் உட்பட) இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறதா? அல்லது இந்தியாவில் வாழும் தமிழர்களையும் சேர்த்து, பொதுவாக தமிழர்களுக்கு எதிராகவே செயல்படுகிறதா? என மக்கள் கேட்க்குமுன் தமிழக மீனவர்களின் உயிரையும் ஒரு உயிராய் மதித்து, கன்னித்தீவாய்த் தொடரும் கச்சத்தீவுக்கு ஒரு விடை காண வேண்டும்.